Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

அன்பு இல்லமாகத் திகழ்ந்த சிவாஜியின் அன்னை இல்லம்! #HBDSivajiGanesan

சிவாஜி கணேசன்

ணர்வுபூர்வமான நடிப்பால், தமிழகத்தைக் கட்டிப்போட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், தொடக்கத்தில் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீட்டின் பின்னால் இருந்த மற்றொரு வீட்டில் குடியிருந்தார். முதலில் குடியிருந்த வீட்டை அலுவலகமாகப் பயன்படுத்தினார். பின்னர் தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கி, மாற்றங்கள் செய்து குடிபோனார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான வீடு  

இந்த வீட்டுக்கு 'அன்னை இல்லம்' என்று நடிகர் திலகம் பெயர் வைத்தார். ஒன்றரை ஏக்கர் அளவில் கட்டப்பட்டுள்ள அன்னை இல்லம் என்ற இந்த மாளிகை, பார்ப்பதற்கு ஒரு சிறிய வெள்ளை மாளிகை போலவே இருக்கிறது. அன்னை இல்லம் வீட்டை சிவாஜி வாங்குவதற்கு முன்பு யாரிடம் இருந்தது என்பது குறித்தத் தகவல்களை 'சென்னை வரலாற்று ஆய்வாளர்' ஶ்ரீராம் எழுதியுள்ளார்.

“இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்குச் சொந்தமான வீடாக இது இருந்தது. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தார். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். தலைமைச் செயலாளர் ஆகவும் இருந்திருக்கிறார். 1930-கள் மற்றும் 1940-களில் சென்னை மாகாணத்தின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா (அப்போதைய ஒரிசா) மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெரு முன்பு, தெற்கு போக் ரோடு என்று  அழைக்கப்பட்டது.

பின்னர், சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவரால் இந்த வீடு வாங்கப்பட்டது. இவர் இம்பீரியல் சட்டப்பேரவைக் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். சென்னை மாகாணத்தின் செயல் கவர்னராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். 1950-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்த வீட்டை வாங்கினார். இந்த இஸ்லாமியர் மூக்குப் பொடி தயாரிப்பில் ஈடுப்பட்டார்.

தந்தை பெயரில் வீடு

இந்த இஸ்லாமியரிடம் இருந்து1959-ம் ஆண்டு தமது தந்தை பெயரில் சிவாஜி இந்த வீட்டை வாங்கினார். அதன் பின்னர் வீட்டில் மாற்றங்கள் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார். செவாலியே விருது வாங்கியதைப் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு போக் சாலைக்கு 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என்று பெயர் வைக்கப்பட்டது".

அன்னை இல்லம்

சிவாஜியின் வீடு குறித்து சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஶ்ரீனிவாசனிடம் கேட்டோம். "சிவாஜி நடித்த சில படங்களின் படபிடிப்புகள் அன்னை இல்லத்தில்தான் நடந்திருக்கின்றன. சிவாஜி வீட்டுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். அவர் ஜனதா தளம் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது, அவரைப் பார்க்க அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் வந்தார்.  

அன்னை இல்லம், ஒரு வெள்ளை மாளிகை போல பளபளப்பாக இருக்கும். லேசாக அழுக்குத் தென்பட்டாலும், சிவாஜி அதை சுத்தம் செய்யச் சொல்வார். தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹாலில் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாஜியின் மகள் சாந்தியின் குடும்பத்தினரும் அன்னை இல்லம் வந்து விடுவார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். பிரியாணி, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஓட்டுநர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல்காரர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இந்த வீட்டில் பணியாற்றினர்.

சிவாஜியின் ஆசை

சிவாஜியின் பிறந்த நாளின்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிவாஜியின் சகோதரர் சண்முகம் இறந்தபோது, எம்.ஜி.ஆர் வந்திருந்தார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் சிவாஜி, அன்னை இல்லம் வீட்டில்தான் இருப்பார். இயக்குநர்களிடம் கதை கேட்பது எல்லாம் ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் நடக்கும். சில நேரங்களில் மட்டும் இயக்குநர்களை வீட்டுக்கு வரச்சொல்லிக் கதை கேட்பார். சிவாஜி வீட்டுக்கு வராத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். தமது பிறந்த நாளான அக்டோபர் ஒன்று அன்று. காமராஜரை நேரில் பார்த்துதான் சிவாஜி ஆசி வாங்குவார். 1975-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி காமராஜரே சிவாஜியின் வீடு தேடி வந்து வாழ்த்திவிட்டுப் போனார். அதற்கு அடுத்த நாள் காமராஜர் மரணம் அடைந்தார். இந்தப் பிறந்தநாள் வாழ்த்தை சிவாஜி அடிக்கடி நினைவுகூர்வார்.

2010-ம் ஆண்டு, சிவாஜி வீட்டின் முன்பு இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இன்றளவும் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு குடும்பத்தினர் இங்குதான் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். சிவாஜியின் சகோதரர் சண்முகத்தின் குடும்பத்தினரும் இங்குதான் வசிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வாழ்வதை சிவாஜி பெருமையுடன் கருதினார். அவரது ஆசை அவர்களின் குடும்பத்தினரால் இன்றளவும் நிறைவேற்றப்படுகிறது" என்றார்.

மனித நேயர்

அந்த நாள்களில் சிவாஜி வீட்டுக்கு அடிக்கடி பல சினிமா உலக விஐபி-க்கள் வருவதுண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இசைக்குயில் லதா மங்கேஷ்கர். சிவாஜி கணேசனின் 88-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லதா மங்கேஷ்கர், சிவாஜி குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். “சிவாஜி சார் என்னுடைய சகோதரர் மட்டும் அல்ல. என்னுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரைக் கருதினோம். குறிப்பாக என் தாய் உட்பட அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்தினார். 1960-களில் நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சென்னையில்தான் பதிவு செய்யப்பட்டன. எனவே, அடிக்கடி நான் சென்னைக்கு வருவேன். நான் சென்னை வந்ததும், என்னைத் தேடி சிவாஜி வந்துவிடுவார். தம்முடைய டிரைவரிடம், என்னுடைய லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து, என்னை வீட்டுக்கு அழைத்து வரும்படி சொல்வார். அவர் வீட்டில்தான் நான் தங்குவேன். அவர் மிகப்பெரிய மனித நேயராக இருந்தார். ஒரு நாள் நானும், என் குடும்பத்தினரும் வழக்கம் போல் சென்னை வந்தோம். அப்போது மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ராமேஸ்வரத்துக்கும் செல்ல வேண்டும் என்றும் விரும்பினோம். அப்போது, சிவாஜி சார், அவருடைய மேனேஜர் மற்றும் மூன்று பேரை எங்களுடன் அனுப்பினார். எங்களுக்காக இரண்டு கார்களும் கொடுத்தார். அவருடைய பர்சனல் டிரைவர் சிவாவையும் எங்களுடன் அனுப்பி வைத்தார்.

சிவாஜியுடன் லதா மங்கேஷ்கர்

தங்கச் சங்கிலி பரிசு!

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், எங்கள் குடும்பத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. பின்னர் ஒரு நாள் அவருடைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டோம். அப்போது அவர் நடித்த புதிய தமிழ் திரைப்படத்தையும் அங்கு திரையிட்டார். அதன் பின்னர் 12 நாள்கள் வரை சிவாஜி குடும்பத்தினரின் விருந்தினர்களாக நாங்கள் தங்கி இருந்தோம். மும்பையில் நாடகம் நடிப்பதற்காக சிவாஜி வந்தபோது, என் தாய் அவருக்கு சூப் தயாரித்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அமெரிக்கா செல்லும் வழியில் மும்பையில் எங்கள் வீட்டுக்கு சிவாஜி வந்திருந்தார். என்னுடைய தாய் அவருடைய பூஜை ரூமுக்கு சிவாஜியை அழைத்துச் சென்றார். அப்போது சிவாஜிக்கு ஒரு தங்கச் செயின் ஒன்றை பரிசாக அளித்தார். அவர் அமெரிக்கா சென்றுவிட்டு, மீண்டும் மும்பை வழியே வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார்.

சிவாஜி தந்த பரிசு

சிவாஜியின் அன்னை இல்லத்தில் ஒரு முறை பராமரிப்புப் பணிகள் நடந்தபோது, நான் ஹோட்டலில் தங்க நேர்ந்தது. ஆனால், வீட்டுக்கு ஒரு முறையாவது வந்து மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் பேரில் நாங்கள் வீட்டுக்குச் சென்றோம். சில நேரங்களில் அவர் உடல்நிலை சரியில்லாதபோதிலும், ஹோட்டலுக்கு வந்து என்னை அழைத்துச் செல்வார். அவரது மகளை அனுப்பி என்னை அழைத்து வரச் சொல்வார். எனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்து எனக்குப் பரிமாறுவார்கள். இதை என் வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாது. நாங்கள் அவருடைய தமிழ்ப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு தனியாக ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். 'தேவன் மகன்' திரைப்படத்தை நாங்கள் அப்படித்தான் பார்த்தோம். ஒவ்வொரு தீபாவளியின்போதும் சிவாஜி சார் எங்களுக்கு புதிய உடைகள் அனுப்பி வைப்பார். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி சாருக்கு ராக்கி கயிறு அனுப்பி வைப்போம்.

அன்னை இல்லத்தின் கடவுள்

ஒவ்வொரு முறை அவர் வீட்டில் தங்கும்போதும், வீட்டில் உள்ளவர்களிடம், ஷூட்டிங் கிளம்பும் முன்பு, எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைச் சொல்லி அதை மட்டும் பரிமாறும்படி சொல்லி விட்டுச் செல்வார். ஷூட்டிங் முடிந்து வீட்டு வந்த உடன், என்னைப் பற்றி அவர் விசாரிப்பார். சிவாஜிசாரின் தாய் இறந்தபோது, நானும், ஆஷாவும் வந்திருந்தோம். சிவாஜியின் அன்னை இல்லத்தின் கடவுளாக அவரது தாயார் இருந்துவந்தார்.

சிவாஜியின் சகோதரர்களும் அவருடைய வீட்டிலேயே வசித்துவந்தனர். அவரது சகோதரர் இறந்தபோது, சிவாஜி மிகவும் துடித்துப் போய்விட்டார். அவரது மரணத்தை பெரிய இழப்பாகக் கருதினார். சண்முகத்தின் இழப்பை சிவாஜியின் மகன் ராம்குமார்தான் சரி செய்தார்.
நடிகர் பிரபுவும் அவரது தந்தையைப் போலவே எங்களிடம் பாசமாக இருக்கிறார். சிவாஜி என் தந்தையைப் போலவே, அவர்களின் குடும்பத்தினர் மீது பாசமாக இருந்தார். கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். சிவாஜி சாருக்கு இந்தி மொழி தெரியும். எனவே, எங்களிடம் பேசும்போது இந்தியில் பேசுவார். ஒரு முறை அவருடைய மனைவி அணிந்திருந்த நெக்கலஸைப் பாராட்டினேன். உடனே அவர், கமலா என்று அவரை அழைத்து, அதை எனக்குக் கொடுக்கச் சொன்னார். இதுபோன்று எனக்குப் பல பரிசுகளை அவர் கொடுத்திருக்கிறார்.

சிவாஜி சார் இறக்கும் முன்பு அவரை நேரில் சென்று என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது ஒரு பாடல் பதிவுக்காக, இளையராஜா சார் மும்பை வந்திருந்தார். அவரிடம் சிவாஜி சார் பற்றிக் கேட்டேன். அவர், ‘சிவாஜி சார் உடல்நிலை கவலைக்கு உரியதாக இருக்கிறது. நீங்கள் அவரை சென்று பார்த்து வாருங்கள்’ என்று சொன்னார். ஆனால், அன்று இரவு ஒரு நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றுவிட்டேன்.  நான் மீண்டும் மும்பை வந்த பின்னர், முதலில் சிவாஜி சாரை சென்று பார்க்க வேண்டும் என்று என் சகோதரி மீனாவிடம் சொன்னேன்.

நான் பாரத ரத்னா விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, லண்டனில் இருந்த என்னை அழைத்து சிவாஜி சார் வாழ்த்துத் தெரிவித்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சிவாஜி சாரிடம் பேசலாம் என்று முயற்சி செய்தோம். முடியவில்லை. ஆனால், அன்று மாலைதான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பதை அறிந்தோம். அவர் மரணம் எங்களிடம் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது. அவரைப் போன்ற ஒருவரை இனி எங்களால் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் சிங்கமாக அவர் வாழ்ந்தார். அவரையும், அவரது அன்னை இல்லத்தையும் எங்களால் மறக்கவே முடியாது” என்று லதா மங்கேஷ்கர் நினைவு கூர்ந்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement