வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (03/10/2017)

கடைசி தொடர்பு:10:22 (03/10/2017)

நியூ ஜெர்ஸி முதல் லாஸ் வேகாஸ் வரை... 68 வருடத்தில் அமெரிக்காவை உலுக்கிய 32 துப்பாக்கிச் சூடுகள் #USDeadliestGunShoots

அமெரிக்கா

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 64 வயது ஸ்டீபன் படோக் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில்  50க்கும் அதிகமானோர் இறந்தனர். மேலும் 516 பேர் காயமடைந்துள்ளனர். இன்னும் இறப்புகள் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தோடு சேர்த்து அமெரிக்காவில் கடந்த 1949 முதல் 68 வருடங்களில் 32 மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த கொடுமையான 32 நிகழ்வுகள் இதோ...

செப்டம்பர் 5, 1949

நியூஜெர்ஸியில் ஹோவர்டு எனும் 28 வயது இளைஞன் காம்டேன் பகுதியின் 32-வது தெருவில் துப்பாக்கியால் 13 பேரை சுட்டுக் கொன்றான். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்ட அவன் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டான். 

ஆகஸ்ட் 1, 1966

டெக்ஸாஸில் அமெரிக்க முன்னாள் கப்பற்படை வீரர் சார்லஸ் ஜோசப் வொயிட்மேன் என்பவர் டெக்ஸாஸ் பல்கலைக்கழக டவர் மீது இருந்து தாக்கி 16 பேரை கொன்றார். இந்த தாக்குதலுக்கு முன் தனது தாயையும், மனைவியையும் சுட்டுக் கொன்றுள்ளார். போலீஸ் அவரை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றது.

அமெரிக்கா

ஆகஸ்ட் 20, 1982

மியாமியில் கார்ல் ராபர்ட் ப்ரவுன் எனும் ஆசிரியர் மெஷின் ஷாப் தந்த பில் மீது உண்டான கோபம் காரணமாக அங்குள்ள 8 பேரை சுட்டுக் கொன்றார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் 25, 1982

பென்சில்வானியாவில் 40 வயது ஜார்ஜ் பேன்க்ஸ் எனும் சிறை பாதுகாவலர் தனது ஐந்து குழந்தைகள் உட்பட 13 பேரை சுட்டுக் கொன்றார். மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது மரண தண்டனையை 2011ல் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நீடித்தது.

பிப்ரவரி 18, 1983

சியாட்டில் பகுதியில் உள்ள க்ளப்பில் நுழைந்த மூன்று பேர் 13 பேரை தலையில் சுட்டுக் கொன்றனர். கொலையை செய்த ஃபாய் மாக், பெஞ்சமின் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றவாளி டோனி வேறு வழக்கிலும் தொடர்புடையதால் 2014ல் ஹாங்காங் சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஜூலை 18, 1984

கலிஃபோர்னியாவில் 41 வயதுமிக்க ஜேம்ஸ் ஹுபெர்டி 21 பேரை சுட்டுக் கொன்றார். அங்கு வந்த போலீஸ் அதிகாரிகளால் அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

ஆகஸ்ட் 20, 1986

ஒக்லஹோமாவில் பகுதிநேர கொரியர்க்காரராக பணிபுரிந்து வந்த ஹென்றி ஷெரில் 3 துப்பாக்கிகளால் 14 தபால் ஊழியர்களை சுட்டு வீழ்த்திவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார்.

செப்டம்பர் 14,1989


கென்டகியில் 47 வயது ஜோசப் வெஸ்பெக்கர் என்பவர் நவீன ரக துப்பாக்கிகளுடன் ஸ்டான்டர்ட் க்ராவ்யூர் கார்ப்பரேஷனில் நுழைந்து 8 பேரை சுட்டு தானும் சுட்டுக்கொண்டு இறந்தார். விசாரணையில் அவர் மனநல பிரச்னை காரணமாக விடுப்பில் இருந்து வந்தது தெரியவந்தது.

ஜூன் 18, 1990

ஃப்ளோரிடாவில் ஜேம்ஸ் போக் என்பவர் கடனை திரும்ப செலுத்தாததால் அவரது காரை திரும்ப பெற்ற ஜெனரல் மோட்டார்ஸுக்குள் நுழைந்து 9 பேரைக் கொன்றார். அவரும் தற்கொலை செய்துகொண்டார். 

ஆகஸ்ட் 10, 1991

அரிசோனாவில் உள்ள புத்தர் கோவிலில் 6 துறவிகள் உட்பட 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். சில நாள்களுக்குப் பிறகு ஜோனாதன் டோடி, கார்சியா எனும் 16 வயது சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அக்டோபர் 16, 1991

டெக்ஸாஸில் 35 வயது ஜார்ஜ் ஹென்னார்டு என்பவர் லூபி காபி ஷாப்பில் தனது வாகனத்தை மோதிவிட்டு உள்ளே சென்று 23 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தானும் தற்கொலை செய்துகொண்டார்.

ஜூலை 1, 1993

சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் கியான் ஃபெரி என்பவர் சட்ட அலுவலகத்தில் 8 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

அமெரிக்கா

ஏப்ரல் 20, 1999

லிட்டில்டானில் உள்ள பள்ளியில் 8 வயது எரிக் ஹாரிஸ் எனும் சிறுவனும், 17 வயது டைலன் எனும் சிறுவனும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 12 சக மாணவர்கள், ஒரு ஆசிரியை என 13 பேரை சுட்டுக்கொன்றனர்.

ஜூலை 29, 1999

அட்லாண்டாவில் 44 வயது மார்க் பார்டன் என்பவர் மனைவி, 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு அதே தெருவில் உள்ள 9 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச் 21, 2005

ரெட் லேக் பள்ளியில் 16 வயது சிறுவன் ஜெஃப் தனது தாத்தா, 5 மாணவர்கள், ஆசிரியர், பாதுகாப்பு அதிகாரி என 9 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டான்.

ஏப்ரல் 16, 2007

விர்ஜினியாவில் 23 வயது செங் ஹூய் சோ எனும் மாணவர் 32 பேரை கல்லூரி வளாகத்தில் சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

டிசம்பர் 5, 2007

ஒமஹா பகுதியில் 19 வயது ராபர்ட் ஹாக்கின்ஸ் என்பவர் ஷாப்பிங் மாலில் நுழைந்து 8 பேரை சுட்டு வீழ்த்தி தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச் 10, 2009

அலபாமாவில் மைக்கேல் மெக்லென்டன் என்பவர் தனது தாய் உட்பட 10 பேரை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச் 29, 2009

வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ராபர்ட் ஸ்டுவர்ட் ஒரு நர்ஸ் மற்றும், 7 நோயாளிகளை மருத்துவமனையில் சுட்டுக்கொன்றார். அவருக்கு 179 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 3, 2009

நியூயார்க்கில் உள்ள புலம் பெயர்ந்தவர்களுக்கான சமுதாயக்கூடத்தில் 13 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார் வோங்.

நவம்பர் 5, 2009

டெக்ஸாஸில் நிடால் மாலிக் ஹசன் என்பவர் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

அமெரிக்கா

ஜனவரி 19, 2010

விர்ஜினியாவில் உள்ள கிறிஸ்டோபர் என்பவர் தனது வீட்டுக்கு அருகில் 8 பேரை சுட்டுக்கொன்று போலீஸில் சரணடைந்தார். அவருக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 18 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 3, 2010

மான்செஸ்டரில் த்ரான்டன் என்பவர் அங்குள்ள ஹர்ட்போர்டு நிறுவனத்தில் மதுபான பாட்டில்களை திருடி விற்றதற்காக வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த த்ரான்டன் 8 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார்.

அக்டோபர் 12, 2011

8 பேரை கலிஃபோர்னியாவில் உள்ள சீல் பீச்சில் சுட்டுக் கொன்றுள்ளார் டெக்ராய் . அவரைக் கைதுசெய்து 2014ல் குற்றவாளி என உறுதி செய்துள்ளனர்.

ஜூலை 20, 2012

அரோராவில் பேட்மேன் படம் திரையிட்ட அரங்கில் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் என்பவர் புகுந்து 12 பேரை சுட்டுக் கொன்றார். அவருக்கு பரோலில் வர முடியாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

டிசம்பர் 14, 2012

நியூ டவுனில் உள்ள பள்ளியில் உள்ள ஆறு வயது குழந்தைகள் 20 பேரை சுட்டுக் கொன்றான் ஆடம் லான்சா. அதோடு பள்ளி ஊழியர்கள் ஆறு பேரையும், அதற்கு முன் தனது தாயையும் சுட்டுக் கொன்றுள்ளான்.

செப்டம்பர் 16, 2013

வாஷிங்டன் கப்பல் தளத்தில் 34 வயதான ஆரோன் 12 பேரை சுட்டுக் கொன்றான். கப்பற்படையால் அவனும் சுட்டு வீழ்த்தப்பட்டான்.

அமெரிக்கா

ஜூன் 17, 2015

தெற்கு கலிஃபோர்னியாவில் 21 வயதான டைலான் ரூஃப் எனும் சிறுவன் தொடர் கொலைகளைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு 9 பேரைக் கொன்றான். அவனுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர்1, 2015

கிரிஸ்டோபர் சீன் ஹார்பர் என்பவர் கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து 9 பேரை சுட்டுக் கொன்றுள்ளார். அவரை போலீஸ் சுட்டு வீழ்த்தியுள்ளது.

டிசம்பர் 2, 2015

திருமணமான தம்பதியினர் சையத் ரிஸ்வான் ஃபாருக் மற்றும் டஷ்ஃபீன் மாலிக் பணியாளர்கள் சந்திப்பில் துப்பாக்கியால் 14 பேரை சுட்டுக் கொன்றனர்.

ஜூன் 12, 2016

ஒமர் சாதிக் மாடீன் எனும் 29 வயது நபர் ஓர்லாண்டோவில் இரவு விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டதில் 49 பேர் உயிரிழந்தனர். மாடீனையும் போலீஸ் சுட்டு வீழ்த்தியது. 

அக்டோபர் 2, 2017

லாஸ் வேகாஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 64 வயதான ஸ்டீபன் படாக் எனும் முதியவர் 50க்கும் அதிகமானோரை சரமாரியாக சுட்டு வீழ்த்தினார். இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து இந்த தாக்குதலை 10 துப்பாகிகளை கொண்டு நடத்தியுள்ளார். போலீஸ் அறையை அடைவதற்கு முன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதான் அமெரிக்க துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் மிக மோசமானதாக பதிவாகியுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்