Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரமாகும் டெங்கு, என்ன செய்கிறது சென்னை மாநகராட்சி?

டெங்கு

மிழகத்தில் உயிர்க் கொல்லி நோய்போல டெங்கு காய்ச்சல் வேக வேகமாகப் பரவி வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாகப் பலர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை தமிழகத்தில் 6,919 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தை அடுத்து டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான். இந்தச் சூழலில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தை டெங்கு அவசர நிலை கொண்ட மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால், இதுகுறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

காரணம் என்ன?

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகப் பரவலாக மழை பெய்திருக்கிறது. சென்னையிலும் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்குவதால், அங்கெல்லாம்  டெங்குவை உருவாக்கும் Aedes கொசுக்கள் உருவாகின்றன. மழைக் காலம் தொடரும் என்பதால், தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரப்படி, சென்னையில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 110 பேருக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் கணக்குப்படி இதுவரை 16 பேர் மட்டும்தான் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய பகுதிகளாக 179 இடங்களை மாநகராட்சி கண்டுபிடித்துள்ளது. இதில் 32 பகுதிகளில் அதிக அளவு மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

 

டெங்கு

 

மாநகராட்சி என்ன செய்கிறது?

32 பகுதிகளில் அடையார்,  மயிலாப்பூர், கோடம்பாக்கம், கே.கே.நகர், விருகம்பாக்கம், வியாசர் பாடி, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகம் பேர் இருக்கின்றனர். இந்தப் பகுதிகளில் இருக்கும்  மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று, டெங்கு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். வேண்டாத சாக்குப் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால், அவற்றை மாநகராட்சி ஊழியர்களே அப்புறப்படுத்துகின்றனர். அதே வீடுகளின் சந்துகளுக்குள் போடப்படும் குப்பைகள், வீடுகளின் மாடிகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் கோணிப்பைகள், குப்பைகள் அனைத்தையும் சுத்தப்படுத்துகின்றனர். வீடுகளைச் சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்களும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்கின்றனர். இதனால், டெங்கு மேலும் பரவுவது தடுக்கப்படுகிறது.

நிறுவனங்களுக்கு அபராதம்

இதுதவிர சென்னையில் Aedes கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதன்படி அந்தப் பகுதியில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், கட்டட வேலைகள் நடக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், வணிக கட்டடங்கள் உள்ளிட்ட 1,500 இடங்களில் கொசுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிறுவனங்களை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதையும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடுகின்றனர். சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இப்படி, இந்த மூன்று மாதங்களில் மட்டும் 11 லட்சம் அபராதக் கட்டணத்தை மாநகராட்சி சுகாதாரத்துறை வசூலித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கேரள மாநிலத்தை ஒட்டிய மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement