அது என்ன ஈர்ப்புவிசை அலைகள்? இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆய்வின் முழு விவரம்! | 3 Physicists awarded with Nobel Prize for Physics. A brief about their research.

வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (05/10/2017)

கடைசி தொடர்பு:10:29 (05/10/2017)

அது என்ன ஈர்ப்புவிசை அலைகள்? இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆய்வின் முழு விவரம்!

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் ஐன்ஸ்டீன் என்ற மாமேதை சொன்ன ஒன்று, இரண்டு வருடங்களுக்கு முன் உண்மையென்று அறியப்பட்டது. அதை அறிய உதவிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த வருடத்திற்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈர்ப்பு விசை அலைகள்

படம்: NASA

ஈர்ப்பு விசை அலைகள் குறித்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகளான ரெய்னர் வெயிஸ், பேரி C. பாரிஷ் மற்றும் கிப் S. தோர்ன் ஆகியோருக்கு இந்த உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சரியாக 14 செப்டம்பர் 2015 அன்று இவர்களின் LIGO டிடெக்டரில் தான் முதன்முதலாக  ஈர்ப்பு விசை அலைகள் என்ற ஒன்றை உணர்ந்தது இந்த உலகம். ஐன்ஸ்டீன் கோட்பாடாக சொன்ன ஒன்று அப்போது முழு உயிர் பெற்றதாய் ஓர் எண்ணம். அந்தக் கண்டுபிடிப்பு தான், தற்போது இந்தப் பிரபஞ்சத்தை, அதன் தோற்றத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்க உதவுகிறது. மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய சரியான பாதையை காட்டுகிறது.

அது என்ன ஈர்ப்பு விசை அலைகள்?

ஈர்ப்பு விசை என்றதும் நமக்கு ஞாபகம் வருபவை நியூட்டனும், அவர் தலையில் விழுந்த ஆப்பிளும் தான். இந்த ஈர்ப்பு விசை என்பது நம்மைப் பொறுத்தவரையில் பூமி போன்ற கோள்களுக்கு இருக்கும் தனிச்சிறப்பு. பல இடங்களில், அறிவியல் குறித்த பெரிய புரிதல் இல்லாத காரணத்தால் புவிஈர்ப்பு விசை என்ற கோணத்தில் மட்டுமே இது பார்க்கப்படுகிறது. உண்மையில், அகண்ட அண்டத்தில் ஈர்ப்பு விசை பல விதங்களில் வெளிப்படுகிறது. கோள்கள், அல்லது இவ்வகை ஈர்ப்பு விசை கொண்ட விண்கற்கள் (கோள்களில் இருந்து சிதறியவை) நிறையவே உண்டு.

இந்த ஈர்ப்பு விசையால் அவ்வப்போது நிகழும் விபத்துகள் (கோள்கள் அல்லது கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வது) விண்வெளியில் பல விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதில் மிக முக்கியமான நிகழ்வு தான் புவிஈர்ப்பு அலைகளின் உருவாக்கம். இரண்டு கருந்துளைகள் மோதிக் கொள்ளும் போது, அதன் ஈர்ப்பு விசை ஒன்றோடு ஒன்று உறவாடும் போது பிறப்பவை தான் இந்த ஈர்ப்பு விசை அலைகள். இவை மற்ற அலைகளில் இருந்து பல வேறுபாடுகளைக் கொண்டவை. பேரண்டத்தில் சிதறிக்கிடக்கும் மர்மங்களில் ஒன்றான இதை, முதன் முதலில் பூமியில் இருக்கும் விஞ்ஞானிகள் உணர்ந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு தான்.

நோபல் பரிசு

சாதனையின் முன்கதை

வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த அந்த ஆரம்பப் புள்ளி சம்பவங்களின் தொகுப்பு இதோ...

1916ம் ஆண்டு, ஒரு சுட்டெரிக்கும் வெயில் நாளில் பிரசியன் அகாடமி ஆஃப் சயின்ஸில், ஐன்ஸ்டீன் ஈர்ப்பு விசை அலைகள் என்று ஒன்று நிச்சயம் இருக்கிறது என்று தன் கருத்தைப் பதிவு செய்தார். ஆனால், அதை அப்போது நிரூபிக்கத் தேவையான வசதிகள் கிடையாது.

1975ம் ஆண்டு எம்.ஐ.டி.யின் இயற்பியலாளர் ரெய்னர் வெயிஸ், ஈர்ப்பு விசை அலைகளை லேசர் கருவிகள் கொண்டு நிச்சயம் உணர முடியும் என்றார். இதற்காக கால்டெக்கின் கிப் தோர்ன் என்பவருடன் சேர்ந்து கொண்டு ஆராய்ச்சிகளில் இறங்கினார்.

1994ம் ஆண்டு, தேசிய அறிவியல் அறக்கட்டளை உதவியுடன், பேரி C. பாரிஷ்  லேசர் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கிறார். அவர் இன்டர்ஃபெர்போமீட்டர் ஈர்ப்பு விசை-அலை ஆய்வுக்கூடம் (LIGO) என்ற பெயரில் இரண்டு ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவினார். இவை ஹன்ஃபோர்டு, வாஷிங்டன் மாகாணம் மற்றும் லிவிங்ஸ்டன், லூசியானா மாகாணம் ஆகிய இடங்களில் இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சியின் முன்னோடிகளாகக் கருதப்படும் இம்மூவரும் ஒன்றிணைந்து, இந்த நாற்பது ஆண்டுக் கால கனவு ஆராய்ச்சியை வெற்றிகரமாகச் செய்து முடிக்க உதவினர். இதில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆராய்ச்சியாளர்களும் பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2017ஆம் ஆண்டின் நோபல் பரிசு வென்ற இந்த சாதனைக் கதையின் முதல் அத்தியாயம் எப்போது எழுதப்பட்டது? பலர் ஐன்ஸ்டீன் என்று பதிலளித்தாலும், இந்தக் கதையை வேறொரு இடத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். அந்த ஆரம்பப்புள்ளி, எங்கேயோ, பல ஒளியாண்டுகள் தூரத்தில், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் மோதிக் கொண்டு பிறகு ஒன்றான இரண்டு கருந்துளைகள். அந்த விபத்து பிரசவித்த ஈர்ப்பு விசை அலைகள் தான் இப்போது நம் ஆராய்ச்சியாளர்களின் LIGO டிடெக்டரில் சிக்கியிருக்கின்றன. அதுவும் மிகவும் பலவீனமான பிறகு தான்.

மூவரில், இந்த ஆராய்ச்சிக்கு முன்னோடியாக இருந்த ரெய்னர் வெயிஸ் அவர்களுக்குப் பரிசில் பாதியும், பேரி C. பாரிஷ் மற்றும் கிப் தோர்ன் ஆகியோருக்கு இன்னொரு பாதியை இரண்டாகப் பிரித்து அளிப்பதாகவும் அறிவித்துள்ளது நோபல் பரிசை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ். ஐன்ஸ்டீன் இருந்திருந்தால், நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்