Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`மண் குதிரையை நம்பி இறங்கலாமா ?' - ரஜினி அரசியலும் எதிர்வினைகளும்

ரஜினி மற்றும் லதா ரஜினி

"ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் அவர் மனதில் இருக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார்" என்று ஸ்ரீதயா அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய ரஜினியின் மனைவி லதா வாய்ஸ் கொடுத்துள்ளார். அவரின் பேச்சின்போது மையப்புள்ளியாக தொடர்ந்து வலியுறுத்திய விஷயம், 'ரஜினியிடம் பல நல்ல கொள்கைகள் உள்ளன. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் மாற்றங்கள் நடக்கும்' என்பதே. "உண்மையில் ரஜினியிடம் அப்படியென்ன மாற்றங்களை உருவாக்கக்கூடிய கொள்கைகள் உள்ளன?" என்று ரஜினியின் நீண்டகால ரசிகரும், அவர் பெயரில் சேலத்தில் பல்வேறு சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவருமான ஈசன் எழிலிடம் பேசினோம்.

"இன்றும், என்றும் நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்னையாக இருப்பது தண்ணீர்தான். நதிகளை இணைப்பது மட்டுமே விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வாகும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், அதற்காக உண்ணாவிரதம் இருந்தவர் ரஜினி. நதிகள் இணைப்புக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோடி ரூபாய் தருவதாக ஈசன் எழில் அறிவித்தவர். அவர் சபை நாகரிகம் அறிந்தவர். எதிர்த்துப் பேசியவர்களைக் கூட அரவணைத்துச் சென்றவர். அதற்கு உதாரணம், ரஜினியை கடுமையாக விமர்சித்த மறைந்த நடிகை மனோரமாவை, பின்னர் அரவணைத்து, தன் படங்களில் வாய்ப்புக் கொடுத்தவர். தவிர, மனோரமா மீது எப்போதும் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். இது ரஜினியிடம் உள்ள மிகப் பெரிய ப்ளஸ். ஒரு நடிகருக்கு அவரின் தோற்றம் மிகமுக்கியம். ஆனால், அதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் வெகுஇயல்பாக பொதுவெளியில் வலம் வருபவர். நடிகர் என்ற இமேஜ் வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளாதவர். இன்றைய தேதிக்கு புறம்பேசுதலே, மனிதர்களின் பிரதான குணமாக வெளிப்படுகிறது என்பது வேதனையான விஷயம். இதற்கு ரஜினி ஒரு விழாவில் சொன்ன கதையையே இங்கு பகிர்கிறேன். தவளைகளுக்கு எல்லாம் ஒரு ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. அப்போது, 'வேகமா ஓடி என்ன பண்ணப் போற? கொஞ்சம் இளைப்பாறி விட்டுப் போ', 'இதுல ஜெயிக்கிறதுல ஒண்ணும் பெரிய பலனில்லை' என அப்படி, இப்படி என்று ஓடும் தவளைகளின் கவனத்தை சிலர் திசை திரும்புகின்றனர். இதனால் பல தவளைகள் பின் வாங்கின. ஆனால், அவை எதையும் சட்டை செய்யாமல், ஒரு தவளை மட்டும் தொடர்ந்து ஓடி வெற்றி பெற்றது. 'வெற்றி எப்படி சாத்தியமானது?' என்று அந்தத் தவளையிடம் பேட்டியெடுத்தபோதுதான் தெரிந்தது, அந்தத் தவளைக்குக் காது கேட்காது என்று'. எனவே, இலக்கை நோக்கி பயணிப்பவர்கள், புறம் பேசுபவர்களை சட்டையே செய்யக்கூடாது என்று இக்கதையின் மூலம் ரஜினி போதித்தார். மிகுந்த செல்வாக்குள்ள தனது ரசிகர் பட்டாளத்தின் மூலம், ரத்ததான முகாம், கண் தான விழிப்புஉணர்வு, மரம் நடுதல் போன்ற எண்ணற்ற நற்காரியங்களைச் செய்துவருகிறார். தற்போது ரஜினி ரசிகர்கள், தொண்டர்கள் என்ற அடையாளத்துக்கு மாறியுள்ளார்கள். அவர்கள் மாற்றம் நிகழ்த்துவார்கள்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "எங்கும் எளிமையோடு நடந்துகொள்வது, மனிதர்களை மதிப்பது, தம்மை தூற்றுபவர்களிடமும் அன்பு காட்டுவது போன்றவை ரஜினி கடைப்பிடிக்கும் பழக்கங்களில் இருந்து நாம் புரிந்துகொள்ளும் நற்பண்புகளாகும்.  அன்பைவிட சிறந்த கொள்கை உலகில் உண்டா என்ன? அந்த அன்பை போதிப்பவர் ரஜினி. இந்த மோசமான சிஸ்டத்தை மாற்றும் மந்திரச் சொல் இது" என்கிறார் உற்சாகத்தோடு.

சட்டம் படிக்கும் சமூக ஆர்வலர் கே.எஸ். நேருவின் கருத்தோ வேறுவகையில் உள்ளது. "இது திராவிடம், தமிழர் கொள்கை ஓங்கிய மண். ஆனால், ரஜினியின் பல்வேறு உரைகள், மேடைப் பேச்சுக்கள், திரைத்துறை சார்ந்த செயல்பாடுகளை உற்றுநோக்கினால், சமஸ்கிருதமயமாக்கலை ஆதரிக்கும் அவரின் நுண்ணரசியலை புரிந்துகொள்ள முடியும். அவரின் 'ராகவேந்திரா' மண்டபத்தில்கூட ஆரியநேரு ஆதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் 'ஸ்வஸ்திக் சின்னம்' இடம்பெற்றிருக்கும். திரையில் எளிய மனிதர்களுக்காக குரல் கொடுக்கும் இவர் போன்றவர்கள்தான், நிஜத்தில் எளிய மனிதர்கள் சந்திக்கும் பேராபத்துக்களின்போது மௌனித்துக் கிடக்கின்றனர். தமிழகத்தில் சமீபத்தில் எழுந்த எந்தப் பிரச்னையிலும் அழுத்தமான எதிர்க்குரலை ரஜினி எழுப்பவே இல்லை. மக்களிடம் அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான அதிருப்தி மனநிலை பெருகிக்கொண்டே போகிறது. எதிர்ப்பின் மூலம் கிடைக்கும் பலன்கள் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்குச் சென்றுவிடக்கூடாது என்ற எண்ணம், மத்திய பி.ஜே.பி. அரசுக்கு உண்டு என்றே தோன்றுகிறது. எனவே, எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க ரஜினி போன்றவர்களின் அரசியல் ஆர்வத்தை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்வதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. இயல்பாகவே ரஜினிக்கும் ஆதிக்க மேட்டுக்குடிகள் நலன்பேசும் கருத்துகள் உண்டு. அவரின் 'பாபா' படத்தில் ஒரு பாடலில், 'அதிசயம். அதிசயம். பெரியார்தான். ஆனதென்ன ராஜாஜி' என்று வரி வரும். அப்போது, திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய, தமிழ்  உணர்வாளர்களிடமிருந்து பெரிய எதிர்ப்பு எழவே, இறுதியாக அந்த வரி நீக்கப்பட்டது.  குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தவர் ராஜாஜி. ஆனால் பெரியார், குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து முறியடித்தவர். ரஜினி, எந்த கொள்கையின் பக்கம் நிற்கிறார் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். அவரின் அரசியல், சாமான்யர்களுக்கு எதிரானதே" என்கிறார் அழுத்தமான குரலில்.

"ஆஷ்ரம் பள்ளியின் தாளாளராக இருக்கக் கூடிய லதா ரஜினிகாந்த், பள்ளி செயல்பட்டு வந்த இடத்தின் உரிமையாளருக்கு பல கோடி ரூபாய் வாடகைக் கட்டணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். இந்த விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாட்டை விவரித்தாலே போதும். அவர் எந்தளவுக்கு நல்ல கொள்கைகள் வைத்திருக்கிறார் என்பது தெளிவாக விளங்கும்" என அதிரடியாக தொடங்குகிறார் சமூக ஆர்வலரும், மக்கள் தேசம் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளருமான சி.எம் சுலைமான். தொடர்ந்து பேசிய அவர், "பண மதிப்பிழப்பாலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பினாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் அதலபாதாளத்துக்கு வீழ்ச்சியடைந்த பிறகும் அதுபற்றி ஒரு கருத்தும் தெரிவிக்காத ரஜினிக்கு, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் என்ன இருக்கப்போகிறது? ஈழ சுலைமான் விவகாரத்திலும், அணு உலைகளை பற்றியும், விவசாயத்தின் முதுகெலும்பை ஒடித்துவிட்ட மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்தும் ரஜினியின் கருத்து என்னவென்றே பிடிபடாமல் இருக்கிறது. அதேபோல பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட  மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைத்திருக்கும் 'நீட்' தேர்வு பற்றியும் இதுவரை வாய்மூடி மவுனியாகவே ரஜினி இருந்து வருகிறார். சாதி ஆணவக் கொலைகளால் தமிழ்நாட்டின் சமத்துவ முகம் கேள்விக்குள்ளாக்கும் போதும், அவரிடமிருந்து எந்தவித எதிர்வினைகளுமில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில், கமலுடைய "விஸ்வரூபம்" படம் திரையிட முடியாமல் சிக்கிக்கொண்ட போதும், நடிகர் விஜயின் "தலைவா" படத்துக்கு எண்ணற்ற நெருக்கடிகள் உருவான போதும் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகரான ரஜினியிடம் இருந்து எவ்வித எதிர்வினைகளும் எழவில்லை. பி.ஜே.பி-யின்  துருப்புச்சீட்டாக மட்டுமே இருக்க விரும்பும் ரஜினிகாந்த், தன்னை வாழவைத்த தமிழ்ச் சமூகத்துக்கும், ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கும், புகழ் வெளிச்சம் தந்த தமிழ்த் திரையுலகுக்கும் ஆதரவாக ஒருபோதும் இருந்தது கிடையாது. அரசியல், சமூக மற்றும் பொருளாதார அறிவு துளியுமற்ற ரஜினிகாந்தின் அரசியல் வருகையென்பது, ஒட்டுமொத்தத் தமிழ் சமூகத்துக்கும் பெருங்கேடாக முடியுமேயொழிய, நல்ல மாற்றங்களை ஒருக்காலும் கொண்டுவராது." என்றார் காட்டமாக. 

மண் குதிரையின் மூலம் 'போர்களை' வெல்ல முடியுமா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ