வேதியியல் நோபல் பரிசுக்கு வித்திட்ட க்ரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கியின் கதை இது..!

பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது? இதுதான் மருத்துவ உலகில் அதிகம் உதிர்க்கப்படும் கேள்விகளில் ஒன்று. ஒருவரின் உடலின் அப்போதைய நிலையைத் துல்லியமாக அறிந்துகொள்ள மருத்துவர்கள் நாடுவது நுண்ணியல் ஆய்வுகள் மற்றும் அதைச் சார்ந்த பரிசோதனைகள். உடலில் என்ன பாதிப்பு, எங்கே பாதிப்பு என்று மனித கண்களுக்கு புலப்படாதவற்றைக் கூட படம்பிடித்துக் காட்டிவிடுகின்றன. மருத்துவத்துக்கு மட்டுமல்லாது, பல்வேறு பரிசோதனைகளுக்கு நுண்ணோக்க உதவும் கருவிகள், தற்போது அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளன. ஆம், விரைவில் நம்மால் ஓர் உயிரின் சிக்கலான கட்டமைப்புகளை அணு அளவுக்கு கூட சென்று துல்லியமாக காண முடியும். இதற்குக் காரணம், க்ரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கியியல் முறை. இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் மூவருக்குத்தான் இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு!

வேதியியலுக்கான நோபல் பரிசு

ஜாக்ஸ் ட்யூபோசெட், ஜோச்சிம் பிராங் மற்றும் ரிச்சர்ட் ஹென்டர்சன் ஆகியோர் உருவாக்கிய நவீன தொழில்நுட்பமான க்ரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கியியல் முறைக்குத்தான் இந்த உயரிய அங்கீகாரம். பொதுவாக, எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் கொண்டு உயிருடன் இருக்கும் அணுக்களை ஆராய முடியாது என்ற ஒரு கருத்து உண்டு. இதற்குக் காரணம் அதிலிருந்து வெளிவரும் சக்திவாய்ந்த எலக்ட்ரான் கதிர் உயிரியல் மூலக்கூறுகளை அழித்துவிடும் என்பதுதான். ஆனால், இவை அனைத்தையும் மாற்றி எழுதும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது இவர்களது க்ரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கி.

உருவான கதை

இந்த நவீன நுண்ணோக்கி முதன் முதலில் 1990-ம் ஆண்டில் ரிச்சர்ட் ஹென்டர்சன் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஒரு புரதத்தின் முப்பரிமாண உருவத்தை அணு அளவுக்குத் துல்லியமான (Atomic Resolution) காட்சியாக படம் பிடித்துக் காட்டினார். இந்த முயற்சி இந்த எலக்ட்ரான் நுண்ணோக்கியல் தொழில்நுட்பத்தின் வீரியத்தை உலகுக்குப் பறைசாற்றியது. 1975ல் இருந்து 1986 வரை, ஜோச்சிம் பிராங் அவர்கள் ஆராய்ச்சிகள் செய்து, இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் செம்மைப்படுத்தி உயிர் கொடுத்தார். அவர் உருவாக்கிய பட செயலாக்க முறையான முப்பரிமாண முறை, தெளிவில்லாத நுண்ணோக்கிகளின் இருபரிமாண முறைக்குச் சவால் விட்டது.

க்ரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கியின் வழியே...

க்ரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கியின் வழியே...

நன்றி: Vossman

ஆனால், இன்னொரு புதிய பிரச்னை தலை தூக்கியது. எலக்ட்ரான் நுண்ணோக்கியின் வெற்றிடம் உயிர்மூலக்கூறுகளை சுற்றியிருக்கும் நீரை ஆவியாக்கியது. இதனால் அவை சிதிலமடைந்தன. இதைச் சரி செய்ய 1980களில் ஜாக்ஸ் ட்யூபோசெட் ஒரு முறையைக் கையாண்டார். இதன்மூலம் தண்ணீரைக் கட்டியாக மாற்றி உயிர்மூலக்கூறுகளை சுற்றி பாதுகாப்பு சுவர் போல எழுப்பினார். இது நுண்ணோக்கியின் கதிர்கள் உயிர்மூலக்கூறுகளை வெற்றிடத்தில் பாதிக்காமல் தடுத்தது. இதன்பிறகு, உருவாக்கப்பட்ட நுண்ணோக்கியைச் சிறந்த முறையில் வடிவமைத்து பொது உபயோகத்துக்கு ஏற்றவாறு மாற்றினர். மருத்துவ ஆராய்ச்சி உலகமே எதிர்பார்த்த அணு அளவு துல்லியமான காட்சியை 2013-ம் ஆண்டு அடைய முடிந்தது.

இந்த மாயாஜால நிகழ்வு நடந்த சிறிது காலத்திலேயே மருத்துவத் துறையிலும், அறிவியல் ஆராய்ச்சித் துறையிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது க்ரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கி. ஆண்டிபயாடிக் முதல் ஸிகா வைரசின் மேற்பரப்பு வரை அனைத்தையும் காட்சிப்படுத்தியது. இதன்மூலம், உயிர்வேதியியல் ஆராய்ச்சிகளில் அதீத முன்னேற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்த ஒப்பற்ற சாதனையை நிகழ்த்திய ஜாக்ஸ் ட்யூபோசெட், ஜோச்சிம் பிராங் மற்றும் ரிச்சர்ட் ஹென்டர்சன் என்ற மூன்று விஞ்ஞானிகளுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவித்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது நோபல் சம்மேளனமான ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ்.

இயற்பியல் நோபல் பரிசு வென்றவர்கள் மற்றும் அவர்கள் ஆராய்ச்சி குறித்த கட்டுரை

மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்கள் மற்றும் அவர்கள் ஆராய்ச்சி குறித்த கட்டுரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!