‘தமிழகத்தைப் புயல் தாக்கப் போகிறதா..?’ - உண்மை நிலவரம் என்ன?

புயல்

டகிழக்குப் பருவமழை வரும் 20 ஆம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 'தமிழகத்தைத் தாக்க வரும் புயல்கள்' என்று வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. இது நம்பத்தகுந்த தகவல்தானா? இந்திய வானிலை மையம் இதுகுறித்து என்ன சொல்லியிருக்கிறது? 

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி

இந்திய வானிலை மையம்  அவ்வப்போது, வானிலை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியிட்ட வானிலை அறிக்கையில், வங்காள விரிகுடாவில் தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேசம் இடையே வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகியிருக்கிறது. 

இன்னொரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி வடக்கு கேரளக் கடலோரப் பகுதிகளிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. இது தவிர இன்னொரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியானது வங்காள விரிகுடாவின் வடகிழக்கில் உருவாகியுள்ளது. இந்த வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தெலங்கானா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகாவின் வடக்குப் பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும். 

இந்திய வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'A cyclonic circulation' என்று குறிப்பிடப்பட்டிருப்பதுதான் புயல் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இதன் தமிழ் அர்த்தம், 'வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி' (A cyclonic circulation)  என்று சென்னை வானிலை மையத்தில் கூறப்படுகிறது. எனவே, இப்போதைக்கு வங்காள விரிகுடாவில் புயல் எதுவும் உருவாகவில்லை என்றும் சென்னை வானிலை மையத்தினர் தெரிவித்துள்ளனர். 

89 சதவிகிதம் மழை இருக்கும்

இந்திய வானிலை மையம் அக்டோபர் 3 ஆம் தேதி ஒரு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தென் தீபகற்ப பகுதியில் உள்ள தமிழகம், ஆந்திரக் கடலோரப் பகுதிகள், ராயலசீமா, கேரளா மற்றும் தெற்குக் கர்நாடகாவின் உள்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் இருக்கும். இந்த ஆண்டைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை வழக்கமான அளவை விட 89 விழுக்காடு அளவுக்குப் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கும் தகவல். 

புயல் புயல் உருவாகியிருக்கிறது என்று எந்த இடத்திலும் இந்திய வானிலை மையம் சொல்லவில்லை. வழக்கமாக புயலுக்கு முன்பாக முதலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். பின்னர், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். அதன் பின்னர்தான், அது புயல் சின்னமாக மாறும். சில நேரங்களில் முதல் நிலையில் மழை பெய்த பிறகு, காற்றழுத்தத் தாழ்வு நிலை கரையைக் கடந்துவிடும்.

புயல் எப்படி உருவாகும்?

2015-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாகத்தான் அதிக மழை பெய்தது. கடந்த ஆண்டு உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏதும் வலுவாக இல்லாததால், தமிழகத்துக்குப் போதுமான மழை கிடைக்கவில்லை.  

இந்தச் சூழலில், வடகிழக்குப் பருவமழை வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை மைய இயக்குநர்  பாலச்சந்திரனிடம் கேட்டோம். "புயல் வரும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லவில்லை. இந்தத் தகவலை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இதுபோன்று எந்த ஓர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தவறான தகவல் எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை" என்றார். 

ஏற்கெனவே, தமிழக ஆளும் கட்சிக்குள் வீசிக்கொண்டிருக்கும் அரசியல் புயலால் நொந்து கிடக்கும் மக்கள் மத்தியில், புயல் வருது, புயல் வருதுன்னு ஏம்பா பீதியைக் கிளப்புறீங்க?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!