வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (08/10/2017)

கடைசி தொடர்பு:10:34 (08/10/2017)

சசிகலாவை வரவேற்க கூடிய கூட்டம்...சென்டிமென்ட் கைகொடுக்குமா?

சசிகலா

ந்தக் கட்டுரையில் இடம்பெறும் காட்சிகள் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்ததாக இருக்கலாம், பார்க்காதவையாகவும்  இருக்கலாம். ஒரு திரைப்படம் போலவும் காட்சிகள் விரியலாம், இல்லை குறும்படமாகவும் சுருங்கலாம். ஆனால், இங்கே எழுதப்பட்ட செய்திகள், நேரில் பார்த்ததும், தொண்டர்கள் சொல்லக் காதில் கேட்டதுமான உண்மைப் பதிவு. இது சில திரைப்படங்களில் தொடக்கத்தில் போடப்படும் ஸ்லைடு போன்ற கற்பனையல்ல.

இனி உங்கள் மனக்கண் விரித்து வார்த்தைகள் வழி காட்சிகளை நுகரலாம். 

சசிகலா பேனர்

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில், மூன்று முறை அடித்து சத்தியம் செய்துவிட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை செல்கிறார் சசிகலா. சசியின் சிறைவாசம், வெளியில் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுகிறது. அப்போது அவர் அணியில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது எதிரணியில். அரசியல் சக்கர சுழற்சியில், 233 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, சசிகலாவை வெளியே கொண்டு வந்துள்ளார் அவரின் கணவர் நடராஜன். ஆம், அவரின் உடல்நிலை பாதிப்பு, சசிகலாவுக்கு ஐந்து நாள் அவசரப் பரோலை பெற்றுத்தர அக்டோபர் 6 ஆம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு சிறைக்கூண்டை விட்டு வெளியே வந்தார் சசிகலா. ஜெயலலிதா போலவே பச்சை புடவை, நீள பொட்டோடு  பலத்த வரவேற்போடு காரில் ஏறினார் சசிகலா. ''முதல்ல விமானத்துலதான் எங்க சின்னம்மா சசிகலாவக் கூட்டிப் போறதா இருந்தோம். ஆனா கார்ல போனா பேசிட்டே போகலாம். வழியெங்கும் தொண்டர்களைப் பார்க்கலாம்'னு டி .டி.வி தினகரன் சொன்னாரு. 'ம்ம் நானும் அதேதான் நினச்சேன். ஜனங்களப் பார்த்து எவ்ளோ நாள் ஆகுது' என்று சின்னம்மா சசிகலாவும் சொன்னாங்க. அதனால்தான் கார்ல போறோம்" என்றார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர். கார் புறப்பட ஆங்காங்கே வழியில் ஆதரவாளர்கள் இருபுறமும் நின்று வாழ்த்தினர். 10 கார்களோடு புறப்பட்ட சசிகலா கான்வாயில், போகப் போக கார்களின் எண்ணிக்கை கூடியது. ஓசூரில் டிபன் சாப்பிட்ட சசிகலா, ராணிப்பேட்டை வந்ததும், ரோட்டோர டீ கடையில் நிறுத்தச் சொல்கிறார். அங்கே சூடான டீ சாப்பிட்டவரிடம் இது ''தி.மு.க கடையில் வாங்கிய டீ'' என்றனர் அருகிலிருந்தோர். மெல்லியப் புன்னகையோடு டீ குடித்து முடிக்க, அங்கிருந்து மீண்டும் பயணம் தொடங்கியது. அதேநேரம், சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள  இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீ டு அருகே மாலை 4 மணியிலிருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். பெண்களும், முதியவர்களும் சீரான அளவில் குவிந்திருந்தனர். பரோல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காலையிலிருந்தே தஞ்சாவூர், மன்னார்குடி, திருவாரூரில் இருந்து ஆதரவாளர்கள் கார், லாரி, பேருந்துகளில் வந்து குவிந்தபடியே இருந்தனர். அருகில் இருந்த பசும்பொன் தேவர் மண்டபத்தில் அவர்கள் தங்கினர். அந்த வீதியே திருவிழா போல காட்சி தர, உற்சாக பானத்திலிருந்த ஒருவர், 'சின்னம்மா எங்க சார் வந்திருக்காங்க ?' என்றபடியே யாருக்கோ போன் செய்தவர், ''ஓ, பூந்தமல்லியா, தாங்யூ... சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்'' என்றபடியே வடிவேலு கணக்காக பதில் பெற்று அதை மற்றத் தொண்டர்களுக்கு பரிமாறினார். மாலை மணி-6 ஐக் கடக்க, கூட்டம் அலைமோதத் தொடங்கியது. அங்கே துண்டை விரித்து திடீர் கடை போட்ட ஒருவர், அதில் ஜெயலலிதா, தினகரன், சசிகலா ஆகியோரது தனித்தனிப் படங்கள் மற்றும் சேர்ந்திருக்கும் படங்களை விற்று வந்தார். தொண்டர்கள் தேடிச் சென்று அதை வாங்கி தங்களது வெள்ளை சட்டை பாக்கெட்டில்  சொருகிக் கொண்டனர். அந்த வீதி முனையில் இருந்த ஒரேயொரு டீக் கடையில் கூட்டம் ஈக்களாக மொய்த்தன.

சசிகலா

''ஏங்க , போண்டா , பஜ்ஜியெல்லாம் இல்லையா ? என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க, எங்கூருக்கு வந்து பாருங்க பலகாரமெல்லாம் படையல் கணக்கா போடுவோம்'' என திருவாரூரிலிருந்து  வந்திருந்த ஒருவர் ராகம் போட்டு கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். (திருவாரூர் மாவட்டத்தினர் ராகமாக மொழியைக் கையாள்வர் ).

இதற்கிடையே  உற்சாக பானத்தோடு வலம் வந்தவர் யாருக்கோ போன் செய்துவிட்டு, ''சின்னம்மா பூந்தமல்லி தாண்டிட்டாங்களாம்'' என்றார் சத்தமாக. இந்தக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்த நேரத்தில், சசிகலா காஞ்சிபுரத்தைத் தாண்டினார். அங்கே வழியில் அவர் காருக்கு பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் திருஷ்டி சுற்றினார்கள் தொண்டர்கள். புன்னகையோடு அதனை ஏற்றுக்கொண்டார் சசிகலா. இந்தப் பயணத்தினூடாக காட்சிகளை மீண்டும் அபிபுல்லா சாலைக்குத் திருப்புவோம். 

இங்கே கலி.பூங்குன்றன், சி.ஆர் சரஸ்வதி, அப்சரா ரெட்டி என முக்கிய நிர்வாகிகள் மற்றும் தினகரன் மகள் உள்ளிட்ட குடும்பத்தினரும்  கிருஷ்ணப்பிரியா வீட்டில் ஆஜரானார்கள். ஜெயலலிதாவுக்கு சமைச்சு கொடுத்த சமையல்காரம்மா, டிரைவர்களும் வந்தனர். வீட்டைச் சுற்றி ஒயிட் அண்ட் ப்ளாக்கில் பவுன்சர்ஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளே செல்ல முற்பட்ட தொண்டர்களை பவுன்சர்ஸ் விரட்டினர் . அப்போது ஒருவர் , 'ஏய் , நான் மதுரைக்காரன். அவ்ளோதான் ' என  முறுக்கு மீசையில் முறுக்க, அவரையும் உள்ளேவிடாமல்  அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தனர் பவுன்சர்ஸ். 

கூட்டம் மேலும் மேலும் கூட, அங்கிருந்த ஒரு முதியவரிடம் ''அய்யா சசிகலா எங்க வந்திட்டு இருக்காங்களாம் ?'' என்றேன். "தெரியல தம்பி, ரெண்டு மணி நேரமா பூந்தமல்லி தாண்டிட்டாங்கன்னுதான் எல்லாரும் பேசிக்கிட்டாங்க" என்றவரிடம் ''உங்க பேரென்ன, எங்கிருந்து வர்றீங்க ?'' என்றபடியே பேச்சுக் கொடுத்தேன். "என் பேரு முனுசாமி. பழைய வண்ணாரப்பேட்டையிலருந்து வரேன். சின்னதா வியாபாரம் பண்றேன். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது இருந்தே நான் ரெட்டை எலைக்காரன் . கட்சிக்காக அப்போதிலேருந்து போஸ்டர் ஒட்டுறது , முனுசாமிபிரசாரம் செய்றதுனு வேலை பாக்குறேன். இப்போ 47 வருஷம் கழிச்சும் அதே தெம்போட, சந்தோஷத்தோடதான் போஸ்டர் ஒட்டுறேன், கட்சி வேலை பாக்கிறேன். அம்மாவுக்குப் (ஜெயலலிதா) பிறகு சின்னம்மா தான்" என்றவரிடம் "அவர் பொறுப்பே செல்லாதுன்னு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னாரே'' என்றேன். " அம்மா கூடவே இருந்து அவங்கள 32 வருஷமா பார்த்துக்கிட்டவங்க சின்னம்மா. எடப்பாடியை உருவாக்குனவங்களே சின்னம்மாதான். பதவி வந்ததும் துரோகம் செஞ்சுட்டுப் போறாங்க. உண்மையான ரெட்டை எலை நாங்கதான் " என்றார் உறுதியான குரலில்.

சரி, நாம் சசிகலா கார் பயணத்துக்குச் செல்வோம். உண்மையில், தற்போது சசிகலா கார்  போரூர் தாண்டி, கிண்டியைக் கடந்தது. வழியெங்கும் உற்சாக வரவேற்பை அவரின் ஆதரவாளர்கள் கொடுத்தபடியே இருந்தனர். கார்கள் அணிவகுப்பு அதிகமாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வீடு திரும்பும் சென்னைவாசிகள் பலர் சிரமப்பட்டனர். இதை அறியாத தொண்டர்கள், அபிபுல்லா சாலை நோக்கி பல்வேறு ரூட்டுகளில் அணிதிரண்டு கொண்டிருந்தனர். 

அபிபுல்லா சாலை முனையில் சசிகலாவுக்கு புகழாரம் சூட்டும் தட்டிகளைத் தூக்கியபடியே  பெண்கள், முதியவர்கள் திரண்டனர்.  சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் காரினுள் அமர்ந்து சசிகலா வருகையை எதிர்நோக்கியிருந்தார். சசிகலா நெருங்கிவிட்டார் என்ற தகவல் அறிந்து, ஒரு கையில் தமது மகனை சுமந்தபடியே நின்றிருந்த ஒரு தாய், ''சின்னம்மா வாழ்க, டி.டி.விபோலீஸ் கேமரா தினகரன் வாழ்க'' என முழங்க ஆரம்பித்தார். கூடவே, தனது மகனையும் முழங்கும்படி கூறினார் .  அச்சிறுவனோ, பின்பக்கமாக 'டைஃபி' அமைப்பு நிறுத்தி வைத்திருந்த, அனிதா தற்கொலைக்கு நீதி கேட்கும் பெரிய தட்டியை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.  அனிதா வீட்டுக்குச் சென்ற தினகரன், ''நம்ம குழந்தைகள் எல்லோரும் படித்து முன்னேற வேண்டும். அவர்கள் கல்வியை யார் தடுக்கவும் நாம் விடக்கூடாது'' என்று பேசியதுதான் எனது நினைவுக்கு வந்தது. அந்த நினைவை வழக்கம்போலவே 'பூந்தமல்லி தாண்டிட்டாங்களாம் ' என்ற குரல் திசைதிருப்பியது. அந்தக் கணநிமிடத்தில்  தூரத்தில் சசிகலா கார் கான்வாய் கண்ணில் தெரிந்தது. முன்னால் வந்த ஜீப்பில் தங்க தமிழ்ச்செல்வன் தொங்கியபடியே கூட்டத்தை விலக்கியபடியே வர, பின்னால் காரின் பின்சீட்டில் அமர்ந்தபடி அனைவருக்கும் வணக்கம் சொல்லியபடியே வந்தார் சசிகலா. நேரம் அப்போது 10 மணியைக் கடந்தது.

சசிகலா ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் போலீஸ் வேனில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி காமிராக்கள் காட்சிகளாகப் பதிவாக்கியபடியிருந்தன.

''சின்னம்மா  வாழ்க'' என்ற உற்சாக முழக்கம் ஓங்க சசிகலா வீட்டுக்குள் செல்ல, "பரோல் கிடைக்க தாமதத்துக்கு பல வேலைகள் செய்தனர். போயஸ் இல்லம் போகும் எண்ணமே இல்லை. இருந்தாலும் போயஸ் போய்விடுவோமோ என்று பயந்து தடுக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்" என்றார் தினகரன். யார் தடுத்தனர் என செய்தியாளர்கள் கேட்க, "யாரு, எல்லாம் நம்ம அண்ணன் எடப்பாடி பழனிசாமியும், புலிகேசிகளும்தான் " என்றார் சிரித்தபடி.

சசிகலாவைப் பார்த்துவிட்டு உற்சாகமாக பெண்கள் திரும்ப அவர்களிடம் பேச முற்பட்ட நேரம் பழகிய குரல் ஒன்று இடைமறித்தது . "என்னது சின்னம்மா  பூந்தமல்லி தாண்டிட்டாங்களா?" அதேகுரல், அதே நபர் ஆனால், அவர் பொடனியில் ஒரு போடு போட்ட பெண்கள், ''மண்டு  சின்னம்மா வீட்டுக்கு வந்து பத்து நிமிஷம் ஆகுது. உன்ன மாதிரி ஆளெல்லாம் வச்சுக்கிட்டு கட்சி நடத்த வேண்டியிருக்கு " என்றபடியே அதட்டி அனுப்பியவர்கள் நம் பக்கம் திரும்பினர் .

நீட் விளம்பரத்தை வேடிக்கை பார்க்கும் சிறுவன்

"எங்க சின்னம்மா மீண்டும் வந்துட்டாங்க. அவசர பரோல்தான் என்றாலும் இந்த அஞ்சு நாளும் அவங்கள (எடப்பாடி பழனிசாமி ) என்ன ஆட்டு ஆட்டுவிக்கப் போறாங்க பாருங்க. இந்த கூட்டத்தை பார்த்தீங்க இல்ல. சின்னம்மா பலம் புரிஞ்சுருக்கும். அப்போ போட்டதெல்லாம் சபதமில்ல. இப்போ போடுறதுதான் சபதம். அவர முதல்வர் பதவியில் இருந்து கீழ இறக்காம விடமாட்டாங்க." என்றவர்களிடம் ''எப்படி'' என்றோம். "அம்மா, பரப்பன அக்கிரகார சிறைக்கு போயிட்டுத் திரும்பிய பிறகுதான் தொடர்ச்சியா எம்.ஜி.ஆர் மாதிரி ஆட்சியைப் பிடிச்சாங்க. இப்போ சின்னம்மாவும் ஜெயில்லருந்து பரோல்ல திரும்பியிருக்காங்க. இனி எல்லாம் நல்லபடியா நடக்கும். அந்த ஜெயில் ராசி அப்படி " என்றபடியே ''வருங்கால முதல்வர் சசிகலா'' என்று முழங்கியபடியே கலைந்து சென்றனர். 

எப்போதும் தோற்கடிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பது மக்களின் இரக்கப் பண்பு. தம்மால் பதவி பெற்றவர்களே  தமக்கு துரோகம் செய்துவிட்டதாக தோற்றம் உருவாக, அது சசிகலாவுக்கு சிம்பதியை உருவாக்கியுள்ளது. இதையே  பரோலில் திரும்பிய பயணத்தில் திரண்ட கூட்டம் வெளிப்படுத்துகிறது.

சென்டிமென்ட்கள் சாமானிய மக்களுக்கு கை கொடுக்குமோ கொடுக்காதோ... ஆனால், சசிகலாவுக்கு கைகொடுக்கும்போல் தெரிகிறது! 

 

 


டிரெண்டிங் @ விகடன்