வெளியிடப்பட்ட நேரம்: 08:06 (10/10/2017)

கடைசி தொடர்பு:16:39 (10/10/2017)

“நான் பார்க்காத சோதனையா?” உறவுகளிடம் உருகிய சசிகலா

சசிகலா

ந்து நாள் அவசரப் பரோலில், சிறைவாசத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளார் சசிகலா. இது தற்காலிக விடுபடுதல் என்றாலும் 'இச்சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடே அனுபவிக்கிறார் சசிகலா' என்கின்றனர் அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள்.

“பெங்களூரிலிருந்து காரில் சென்னைப் பயணத்தை மேற்கண்ட சசிகலாவுக்கு வழியெங்கும் ஆதரவாளர்கள் தேங்காய், பூசணி உடைத்தும், பூக்கள் தூவியும் வரவேற்பு கொடுத்தனர். வழியில் டீ கடையில் நிறுத்தியபோதும், 'ஹே சசிகலா' எனப் பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்துள்ளனர். சசிகலா கார் பயணம் முழுக்கவே ஆதரவாளர்கள் சாரை சாரையாக ஆதரவைத் தெரிவிக்க, "போன முறை இதே சாலை வழியாகத்தான் கைதாகி சிறைக்குச் சென்றேன். அப்போது என்னைப் பல இடங்களில் கடுமையாகத் திட்டினார்கள். ஆனால், தற்போது இந்தளவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்னை உருகச் செய்கிறது" என தினகரனிடம் தம் எண்ணங்களைப் பரிமாறியுள்ளார். அந்தளவுக்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பில் உத்வேகம் பெற்றுள்ளார்" என்கின்றனர் கார் பவனியில் உடன் வந்தவர்கள்.

நடராசனை சந்தித்த சசிகலா:

சென்னையிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டுக்கு இரவு 10.10-க்கு தான் வந்தார் சசிகலா. தூங்கும் நேரமானதால் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு உறங்கச் சென்றவர், அடுத்தநாள் கணவர் நடராசனைச் சந்திக்க ஆயத்தமானார். காலையிலேயே மிக நெருக்கமான உறவினர்கள், கிருஷ்ணபிரியா வீட்டில் குழுமத் தொடங்கினர். அவர்களின் நல விசாரிப்புகள் முடிந்தபின், 11 மணியளவில் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றார் சசிகலா. முதல் தளத்தில் உள்ள தமது கணவர் நடராசனை காலை 11.55-க்குச் சந்தித்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அபாய கட்டத்திலிருந்து மீளவில்லை நடராசன். கணவரின் நிலை கண்ட அந்தக் கணம் உடைந்து போனார் சசிகலா. கண்கள் குளமாகின. பலகீனமாக இருந்தாலும் சுயநினைவோடு நடராசன் இருந்ததால், கைகள் உயர்த்தி சைகைகள் மூலம் இருவரும் பேசிக்கொண்டனர். 15 நிமிட சந்திப்புக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பினார் சசிகலா. 'ட்ரக்கியோடமி' கருவி பொறுத்தப்பட்டிருந்ததால் நடராசனால் பேச இயலாது. எனவே, தொடர்ந்து மூன்று நாளும்(அக் 7 - அக் 9 ம் தேதி ) கணவனைச் சந்தித்த சசிகலா, உணர்வுமொழியிலேயே கணவனிடம் பேசிக்கொண்டார். அவர் நலமோடு வீடு திரும்ப கோட்டூர்புரம் சித்தி விநாயகர் கோயிலில் வேண்டிக்கொண்டார் என மொத்தத்தையும் விளக்குகின்றனர் குளோபல் மருத்துவமனைக்குச்  சசிகலாவுடன் சென்ற உறவினர்கள்.

நடராசன்

அரசியல் கலந்துரையாடல் :

“அரசியல், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, வீடு, மருத்துவமனையில் பார்வையாளரைச் சந்தித்து பேசக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதால், அதை இதுவரை முறையாகவே கடைபிடித்து வருகிறார் சசிகலா" என்கின்றனர் அபிபுல்லா சாலையில் வட்டமிடும் உளவுப்பிரிவினர். அதேநேரம் சசிகலாவுக்கான உதவிகளை விவேக் செய்து வருகிறார். கிருஷ்ணபிரியா சிலவற்றை பகிர்ந்தாலும் அவரின்  தலையீட்டை, சசிகலா அதிகம் விரும்பவில்லை. திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், தினகரன் குடும்பத்தினர் சிறிது நேரம் அருகிலிருந்து அவருடன் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

கணவர் நடராசனுடன் பேசமுடியவில்லை என்ற கவலையை அவ்வப்போது சசிகலா வெளிப்படுத்தி வர, 11-ம் தேதி எப்படியும் பேசிவிடலாம் என உறவினர்கள் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். உரையாடல் அரசியல் பக்கமும் திரும்பியது. எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு, திவாகரன் ஆதரவு  எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் போன்ற சமகால அரசியல் அசைவுகளை, அவரவர் கோணத்தில் ஒவ்வொருவரும் விளக்கியபடியே இருந்தனர். 'நீங்கள் வளர்த்துவிட்டவர்களே இன்று உங்களுக்கு எதிராக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார்கள்' என்றும் பகிர, அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சசிகலா, ஒருகட்டத்தில், "நான் பார்க்காத சோதனையா? நான் அம்மாவிடம் (ஜெயலலிதா) அரசியல் கற்றவள். ஒருவர்  பதவியில் இருந்தால் எப்படி நடந்துகொள்வார்கள், இல்லாதபோது எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை நான் அறிவேன். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதையும்  நான் அறிவேன். இனி என் அரசியல் காய்நகர்த்தல்களைப் போகப் போக பாருங்க" என்று பதிலளித்துள்ளார். குரல் உடைந்திருந்தாலும் உறுதி குறையவில்லை" என விவரித்தார்கள்  மன்னார்குடியிலிருந்து வந்திருந்த சசிகலாவுக்கு மிக நெருக்கமான உறவினர்கள்.

இதே கருத்துகளை, தினகரன் ஆதரவு (தகுதி நீக்கம் செய்யப்பட்ட) எம்.எல்.ஏ-க்கள் சிலரும் உறுதிப்படுத்தினர், “அரசியல்ரீதியாக சில வியூகங்களை வகுத்து, எங்களுக்கு சசிகலா வழிகாட்டுவார்" என்கின்றனர்.

சசிகலாவின் அரசியல் எதிரிகளோ, "பரோல் முடிய இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது" என இப்போதே பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சசிகலாவுக்கு வழிகாட்டத் தொடங்கிவிட்டனர்.


டிரெண்டிங் @ விகடன்