வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (10/10/2017)

கடைசி தொடர்பு:11:49 (10/10/2017)

யானை பார்க்கச் சென்ற ‘சோலோ’ பயணம் சார்லியில் முடிந்த கதை! திருவிழானா இப்படி இருக்கணும் #Travelogue

வாசிப்பும் பயணங்களும் மட்டுமே தனிமனிதர்களாக நம்மை மீட்டெடுக்கச் செய்கிறது. புத்தகங்களிலும் பயணங்களிலும் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் சூழல்களின் வழியாகத்தான் நம்மைக் கட்டமைத்துக்கொள்ளவும் நமக்குள் மாற்றத்தை அனுமதித்துக்கொள்ளவும் முடிகிறது. இந்த முறை அப்படியான பயணத்தில், மனிதர்களைச் சந்திப்பது அல்லாது யானைகளைச் சந்திப்பது என்று முடிவானது. 

பெருநாள் யானை

'யானைகள், கடல், குழந்தைகள் இந்த மூன்றும் எப்போதுமே அலுக்காது' என்பார்கள். பயணங்களின் வழி யானைகளைச் சந்திக்க வேண்டும் அவற்றுடன் சிலநாள்கள் அல்லது சில மணிநேரங்கள் செலவிட வேண்டும்... எங்கு செல்லலாம் என்று யோசித்தபோது பெரும் வீடுகளின்  தாழ்வாரங்களில் யானைகளுடன் கொஞ்சிக் குலாவும் கேரள மக்களின் நினைவு வந்தது. 'வீடுகளில் யானைகளை வளர்க்கக் கூடாது; மாநிலத்துக்கு மட்டுமே சொந்தம்' என்று 2012-ம் வருடம் அங்கே சட்டம் இயற்றப்பட்டபிறகு தற்போது வீடுகளில் அங்கே யானைகளைப் பார்க்கமுடிவதில்லை. கோயில்களிலும் கோயில்கள் காத்துவரும் கூடாரங்களிலும் மட்டுமே யானைகளைப் பார்க்க முடிகிறது. 

கேரளத்தின் குருவாயூரிலிருந்து 2 கி.மீ. தூரத்திலிருக்கும் புன்னத்தூர் கோட்டா அல்லது யானைகளின் கோட்டை எனப்படும் பதினோரு ஏக்கர் நிலம்தான் தற்போது அந்த மாநிலத்தின் அனைத்து யானைகளையும் காத்து வரும் கூடாரம். 50-க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும் அந்தக் கோட்டையில் யானைகளைச் சந்திக்கலாம் என்கிற எண்ணத்துடன் திருச்சூர் சென்றேன். அங்கிருந்து புன்னத்தூர் கோட்டாவுக்கு அருகிலுள்ள குருவாயூரில் ஜாகை... பிறகு அங்கிருந்து யானைகளைப் பார்க்க பயணம் செய்வது என்று முடிவானது. 

டிக்கெட் இல்லாப் பயணம்

கேரளப் பேருந்துகள்

கேரளத்தின் பேருந்துகள் நம் ஊர் பேருந்துகளைப் போல ஒரே நிறம் கொண்டவை அல்ல. அரசுப் பேருந்துகளை விடத் தனியார் பேருந்துகளே அதிகம். அதனால், ஒவ்வொரு பேருந்தும் ஒவ்வொரு நிறம். டிக்கெட்களுக்கானப் பணத்தை வாங்கிக் கொள்கிறார்களே தவிர... ஒரு பேருந்திலும் டிக்கெட் கொடுப்பது இல்லை. அதையும் மீறி நாம் டிக்கெட் கேட்டால், நாம் வெளிமாநிலத்தவர் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதனால், அந்த மக்களுடன் இணைந்து பயணிக்க கேரளத்துத் தனியார் பேருந்துகளில் செல்பவர்கள் டிக்கெட் கேட்காமல் இருப்பதே நல்லது.

திருச்சூரிலிருந்து குருவாயூர் வழியாகச் சென்ற ஒருமணி நேரப் பயணத்தில், இதுதான் 'ஆனக் கொட்டா’ என்று கூறி இறக்கிவிட்டார் பேருந்து நடத்துநர். 50-க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும் ஒரு கோட்டைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாக வரவேற்கிறது அந்த இடம். ’யானைக் கோட்டை இதுதானா அல்லது இடம் மாற்றி இறக்கிவிட்டார்களா?’ என்று அருகில் இருந்தவரிடம் உறுதிபடுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. அவர் ‘ஆம்’ என்று தலையசைத்ததும் நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே எட்டிப்பார்த்தால், யானையின் வால் அசைவு மட்டும் தூரத்தில் தெரிந்தது. 

ஏமாற்றத்தில் முடிந்த பேராவல்!

யானை என்னும் பிரமாண்டத்தின் மீதான பெருவாஞ்சையுடன் ஒவ்வொரு அடியாக அந்தக் கோட்டைக்குள் அடியெடுத்து வைத்ததற்கு கிடைத்ததெல்லாம் பெருத்த ஏமாற்றமே. நுழைவுச் சீட்டு கொடுக்கும் இடத்திலேயே, “யானைகளை போட்டோ எடுக்கக் கூடாது!” என்று உத்தரவு போட்டுவிட்டார்கள். 'யானைகளைப் பார்க்கவும் உடனிருக்கவும்தானே போகிறோம். போட்டோ எதற்குத் தேவையில்லை' என்று மனதை திடப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தால், அடுத்த அதிர்ச்சி. ‘இங்குள்ள யானைகளுக்கு மதம் பிடித்திருக்கின்றன. அதனால் அருகில் செல்ல வேண்டாம்!’ என்று அங்கிருந்த ஒவ்வொரு யானையின் அருகிலும் எழுத்துப்பிழையுடன் போர்டு மாட்டியிருந்தார்கள். உண்மை இதுதான், யானைக்கோட்டையில் யானைகளைத் துன்பப்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து மேனகா காந்தி தொடுத்த வழக்கின் காரணமாக பொதுமக்களை யானைகளின் அருகே செல்லக்கூட விடுவதில்லை. பேசுவதற்கு அலைபேசியை வெளியே எடுத்தால்கூட நாம் பேசுகிறோமா... அல்லது யானைகளைப் படம் பிடிக்கிறோமா... என்று அங்கிருக்கும் காவலர்கள் நோட்டம் விட்டபடியே உடன் வருகிறார்கள்.

ஜெயலலிதா கொடுத்த யானை இப்போது என்ன செய்கிறது?

ஒன்றிரண்டு பெண் யானைகளைத் தவிர பெரும்பாலும் ஆண் யானைகள்... அதுவும் அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிலிருந்து தருவிக்கப்பட்ட ஆண் யானைகளே அங்கிருக்கின்றன. போலியோ பாதித்த நிலையில், அருகிலிருக்கும் தூணில் சாய்ந்து கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த ஒரு யானையைப் பார்த்தபடியே கடந்தபோது அருகில் இருந்த ஒரு காவலரின் குரல் கேட்டது. ''அங்கே வருது பாருங்க... அதுதான் ஜெயலலிதா கொடுத்த யானை'' என்றார். சட்டென்று அவர் சொன்ன திசையை நோக்கிப் பார்வையைத் திருப்பியபோது தென்னை ஓலைகளையும், கரும்பையும் துதிக்கையில் சுருட்டி எடுத்துக்கொண்டு பன்னிரண்டு அடி உயர உருவம் மெல்ல அசைந்து வந்துகொண்டிருந்தது. 2001-ம் வருடத் தேர்தல் நேர்த்திக் கடனுக்காக ஜெயலலிதா, குருவாயூர் கோயிலுக்குத் தானமாக அளித்த ‘கிருஷ்ணா’ யானைதான் அது. அங்கிருக்கும் 51 யானைகளில் மிக உயரமான யானை கிருஷ்ணாதான் என்றார் யானைப் பாகன். தூரத்தில் வந்துகொண்டிருந்த யானை கடந்து செல்லும்போது, அதை நோக்கி நாம் கை அசைத்ததும் துதிக்கையைத் தூக்கி சைகை காட்டிவிட்டுக் கடந்தது.  

அதற்குள் அருகில் நின்றுகொண்டிருந்த 'மாதவன்’ என்னும் யானையின் பாகன், ''உங்களுக்கு யானையைத் தொட்டுப் பார்க்க வேண்டுமா?'' என்றார். 

''ஆம்'' என்று பேரார்வத்துடன் ஆமோதித்ததும் அருகிலிருந்த காவலரிடம் அனுமதி கேட்டார்.

 ''இவருக்கு யானையைத் தொட வேண்டுமாம். அனுமதி கிடைக்குமா?'' 

''போட்டோதான் எடுக்கக் கூடாது. மற்றபடி ஜாக்கிரதையாக அருகில் சென்று தொட்டுப் பார்க்கட்டும்'' என்று பதில் வந்தது. 

யானை மாதவனைத் தடவிக் கொடுத்ததும் லேசாக ஒரு பிளிறல். அப்படியாக இரண்டு நிமிடங்கள் கழிந்ததும் மற்ற யானைகளைப் பார்க்க அங்கிருந்து நகர்ந்தேன். ''இருப்பதிலேயே கேரளத்து யானைதான் அழகு'' என்றார் அருகில் நடந்து வந்த ஒரு பாகன்.

''யானைகளை மாநில வாரியாக எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள்?''

''கேரளத்து யானைக்கு துதிக்கை தரையில் புரளும் வகையில் நீ்ண்டிருக்கும்'' என்று தூரத்தில் தெரிந்த குருவாயூர் கோயில் பட்டத்து யானையைக் காண்பித்தார். அவர் சொன்னதுபோலவே  துதிக்கை தரையில் புரள அசைந்துகொண்டிருந்தது அந்த யானை. 

''அப்போ இந்த யானை எந்த மாநிலம்?'' என்று அருகில் ஒய்யாரமாகக் குளித்துக் கொண்டிருந்த ஒரு யானையைக் காண்பித்துக் கேட்டதும். ''இரண்டு திமில்கள் தெரிகிறது. காதுகளும் சின்னதாக இருக்கு. அசாம் மாநிலத்து யானை'' என்றார். அவர் ‘திகே! திகே!’ என்றதும் குளித்துக் கொண்டிருந்த அந்த யானை மெல்ல எழுந்து நிற்கிறது.

பழஞ்சி

வட்டமாக இருக்கும் அந்த யானை கோட்டையைச் சுற்றிப் பார்த்துத் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்தபோது அங்கே ஒரு நபர் நின்றுகொண்டிருந்தார். அவரது செய்கைகளைப் பார்ப்பதற்கு அந்த இடத்துக்கு அடிக்கடி வருபவர் போலத் தெரிந்தது. ''கேசவா! என்ன செய்யற?'' என்று அங்கிருந்த ஒரு யானையிடம் கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென்று துதிக்கையால் ஒரு பிடி மண்ணை அவர்மீது வாரி இறைத்தது அந்த யானை. ஒன்றிரண்டு முறை அவ்வாறே செய்து கொண்டிருந்த யானைக்கு, சாப்பிடுவதற்கு தன் கையால் சில வாழைமரத் தண்டுகளை எடுத்துப் போட்டார். ''யானை இனச்சேர்க்கைக் காலங்களில் இப்படித்தான் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும். மண்ணை வாரி இறைப்பது நமக்கு விளையாட்டாகத் தெரிந்தாலும் அது கோபமாக இருக்கிறது என்பதன் அறிகுறி'' என்றார் அவர். 

யானைக்கு மனிதர்களைப் போல சில குணங்கள் உண்டு. எப்போதும் யானைகள் மனித குடும்பங்களைப் போலக் கூட்டமாகவே வசிக்கும். தனித்து விடப்படும்போது தனிமையைப் போக்கிக்கொள்ள அடுத்தடுத்து ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். எதிரே நின்று கொண்டிருந்த வேறொரு யானை, தென்னை ஓலையைத் தலையில் வைத்துக்கொண்டு தலையை ஆட்டியபடி விநோதமான  செய்கையில் ஈடுபட்டிருந்தது. பார்க்கும் நமக்கு அது அழகாகத் தெரிந்தாலும், காட்டில் கூட்டத்துடன் சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டிய அதற்கு நான்கு சுவர்களால் எழுப்பப்பட்டிருக்கும் கோட்டைக்குள், தனிமையைப் போக்கிக்கொள்ள வேறு என்ன வழி இருந்துவிடப் போகிறது? 

அதே கோட்டையின் நடுவில் இருக்கும் மரத்தடியில் அமர்ந்துகொண்டால் சுற்றியிருக்கும் அத்தனை யானையையும் ஒரே சமயத்தில் பார்க்கலாம். அங்கே ஓர் அரைமணிநேரம் அமர்ந்து யானைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒன்று கூட சோர்வடைந்தோ அல்லது உறங்கியபடியோ இருக்கவில்லை. ஏதோ ஒரு செய்கையில் ஈடுபட்டிருந்தது. சுமார் அரைமணி நேரம் கழித்து அங்கிருந்து கிளம்பும்போது,  'யானைகளுக்கு மிக அருகில் செல்லலாம்' என்று எண்ணி வந்தது நிறைவேறவில்லையே என்கிற ஏமாற்றம் மட்டும் ஆழ்மனதில் ஒட்டிக் கொண்டிருந்தது. 

கோயில்கள் நிறுவப்படுவதன் தொடக்கத்தில்தான் அவை கோயிலாக இருக்கும். அதற்கானப் புகழும் மக்கள் கூட்டமும் நாளடைவில் அதிகரிக்கும்போது கோயிலுக்கும் ஊரிலிருக்கும் ஷாப்பிங் மால்களுக்கும் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடித்துவிட முடியாதபடி ஆகியிருக்கும். குருவாயூரும் அதற்கு விதிவிலக்கல்ல. எண்ணற்ற மக்கள் வந்துசெல்லும் இடம் என்பதால் கேரளம் என்பதன் தன்மையிலிருந்து முற்றிலுமாக மாறி பெரும்பணம் புழங்கும் ஊராக மாறிவிட்டிருந்தது. அதனால் மீண்டும் குருவாயூர் செல்ல மனம் இல்லாமல், யானைக் கோட்டை வாசலில் நின்றுகொண்டிருந்தபோது... “அருகில் இருக்கும் குன்னங்குளம் செல்லுங்கள். அந்த ஊர் நன்றாக இருக்கும்” என்றார் கோட்டை வாசலில் நின்றுகொண்டிருந்த காவல் அதிகாரி ஒருவர். 

பழஞ்சி பெருநாள்!

பெருநாள் கடை

எந்தவித முன்முடிவுகளும் யோசனையும் இல்லாமல், அங்கிருந்து குன்னங்குளம் செல்லும் பேருந்தில் ஏறினேன். மனிதர்கள் எப்படி வேறொருவரை இனங்கண்டுகொள்கிறார்கள்? என்கிற விந்தை இன்றளவும் விளங்கவில்லை. ஆனால், அந்தச் சந்திப்புதான் அடுத்தடுத்து நிகழ்ந்த பல சுவாரஸ்யங்களுக்கு ஆதியாக இருந்தது.

டிக்கெட்டுக்கான பைசா கொடுத்ததும் (கவனிக்கவும், இங்கும் டிக்கெட் தரப்படவில்லை) நடத்துநர் 'தமிழா?’ என்று சிரித்தபடி கேட்டார். 

''ஆம்!''

''யானை பார்க்க வந்தீங்களா?''

''ம்ம்ம்''

''குருவாயூர் கோயிலுக்குப் போனீங்களா?''

''இல்லை! வெறுமனே யானை மட்டும் பார்க்க வந்தேன்''

''தமிழ்நாட்டில் எந்த ஊர்?''

''சென்னை!''

''சென்னையிலிருந்து யானை மட்டும் பார்க்க வந்தீங்களா?'' என்று விந்தையாகக் கண்கள் விரியக் கேட்டார். 

''ஆமாம்!'' என்று மீண்டுமொருமுறை தலையசைத்ததும், ''அப்படியானால் ஒன்று செய்யுங்கள்... அருகில் 'பழஞ்சி’ என்றொரு கிராமம் இருக்கிறது. குன்னங்குளத்திலிருந்து பதினைந்து நிமிடம்தான்! அங்கே பெருநாள் (திருவிழா) நடக்கிறது. சென்று பாருங்கள்... அங்கே இன்னும் நிறைய யானைகள் இருக்கும். இந்தப் பேருந்தும் அந்த வழியாகத்தான் செல்லும்'' என்றார்.

''அப்படியானால் பழஞ்சிக்கே ஒரு டிக்கெட் கொடுத்துவிடுங்கள்!''

திருவிழாவுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் ஒன்று

பேருந்து குன்னங்குளம் கடந்து பழஞ்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழியெங்கும், யானைகளின் புகைப்படங்களும் செண்டை மேளக் குழுக்களின் புகைப்படங்களும், மலையாளத்தில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பேனர்களும் தென்பட்டன. 'பெருநாள் குறித்தான அறிவிப்பு பேனராக இருக்கலாம்' என்கிற அனுமானத்துடன் கடந்தேன். நடத்துநர், பழஞ்சி என்று கூறி இறக்கிவிட்ட கிராமம் முதல்பார்வையிலேயே கொண்டாட்டமாக இருந்தது. முண்டுவேட்டி அணிந்துகொண்டு, உடலின் குறுக்காகவும் நெற்றியிலும் ஊதா நிறப்பட்டை அணிந்துகொண்டு 'சிங்காரி மேளம்’ வாசித்தபடி கடந்தார்கள் ஒரு குழுவினர். கூடவே முன்னர் பார்த்தது போல நிறையவே திருவிழா அறிவிப்பு போஸ்டர்கள் கண்ணில் பட்டன.

சிங்காரி மேளக் குழு

'சிங்காரி மேளம்’, கேரள செண்டை மேள வாசிப்பில் ஒரு முறை. முன்னால் இருப்பவர்கள் செண்டை வாசிக்க, பின்வரிசையில் இருப்பவர்கள் அதற்கு ஏற்றது போல இலைத்தாளம் என்னும் தாளக்கருவியை வாசிப்பார்கள். அவர்களுக்கும் பின்னிருப்பவர்கள் தமிழகத்தில் பறையாட்டத்தின்போது அடி இசைக்காக வாசிக்கப்படும் தமுரு மற்றும் துடும்பு போல செண்டை மேளம் போலவே இருக்கும் ஒருவகை அடி இசைக்கருவியை வாசிப்பார்கள். 

இங்கே தமிழகத்தில் தீபாவளி திருநாள், பட்டாசு வெடித்தும் ஆட்டம்பாட்டத்துடனும் கொண்டாடப்படுவது போல அங்கே எல்லோரும் கூடி மகிழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். மதப்பாகுபாடு இல்லாமல், ஒவ்வொரு வீட்டு வாசலிலிலும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. ''ஊர்த் திருவிழா எதற்காக?'' என்று வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் கேட்டேன்.

பழஞ்சி தேவாலயம்

''எங்கள் ஊர் தேவாலயம் தொடங்கப்பட்டு 320 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அதைப்  பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். வருடாந்திரமாக எங்கள் தேவாலயத்தின் பிறந்தநாளை இப்படிக் கொண்டாடுவோம்!'' என்றார். 

மூன்றுநாள் திருவிழாவும் மியூசிகல் கார்னிவலும்!

அதற்குள் அருகில் நின்றுகொண்டிருந்த வேறொருவர், “இது மூன்று நாள் திருவிழா. முதல்நாள் ‘கஜசங்கமம்’ என்னும் யானைகளின் சங்கம நிகழ்ச்சி நடைபெறும். அதில் சுமார் 62 யானைகளை சர்ச்சில் நிற்கவைத்து அவற்றுக்கு உணவு கொடுத்து மகிழ்வார்கள் மக்கள். இரண்டாம்நாள் தேவாலயத்தில் பெரிய அளவில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறும். மூன்றாம் நாளான இன்று பழஞ்சியைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்தும் நகரங்களில் இருந்தும் வரும் சிங்காரி மேளம் மற்றும் பேண்ட் வாத்தியக் குழுவினர்கள், இங்கிருக்கும் சாலைகள் மற்றும் சாலைகள் சந்திக்கும் இடங்கள் என அத்தனை இடங்களிலும் நின்று இசைத்தபடியே செல்வார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அலங்கரிக்கப்பட்ட ஒரு யானை தலைமை தாங்கிவரும். ஊரைச் சுற்றி வாசித்தபடி வரும் அவர்கள் இறுதியில் தேவாலயத்தில் தங்களது வாசிப்பை முடித்துக் கொள்வார்கள். இடையிடையே ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களுக்குள் யார் சிறந்த முறையில் வாசிக்கிறார்கள் என்கிற போட்டி நடக்கும்'' என்றார்.

நாங்கள் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு எதிரேயே அந்தத் தேவாலயம் தெரிந்தது. ஊர் மக்களில் பாதிபேர் அன்று அங்குதான் இருந்திருக்கக் கூடும் என்று யூகம் செய்யும் அளவில் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தேவாலயத்தைச் சுற்றியிருக்கும் வீதிகளில் மிட்டாய் - இனிப்பு - பொம்மைகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் தேவாலயத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு சிங்காரி மேளக் குழுவினர் வாசித்தபடியே யானையுடன் கடந்தார்கள். சாலையில் ‘Snake boys', 'Hooligans','Black Battalions' என்று குழுவின் பெயர் எழுதப்பட்ட போஸ்டர்கள் தென்பட்டன. ஒவ்வொரு போஸ்டரிலும் செண்டை மேளத்தை தாங்கியபடியும் அதை முத்தமிட்டபடியும் முகநூல் புகைப்படங்களில் நிற்பது போல குழுவின் ஸ்டார் வாசிப்பாளர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். 

தேவாலயத்தின் மற்றொரு பாதையின் அருகே இருக்கும் நான்குமுனைத் தெருவில், கழுத்தில் மஞ்சள் பட்டை அணிந்த ஒரு குழுவினர் சிங்காரி மேளம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். குழுவில் இருந்தவர்கள் அனைவருமே இளைஞர்கள். ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும்தாம் போட்டி என்பது கடந்து அங்கே ஒரே குழுவிலேயே செண்டை வாசிப்பவர்களுக்கும் தாளக்கருவி இசைப்பவர்களுக்கும் இடையே சுவாரஸ்யப் போட்டி நிகழ்ந்துகொண்டிருந்தது. செண்டை வாசிப்பவர்கள் சுற்றி முட்டிக்கால்போட்டு அமர்ந்துகொண்டு வாசிக்க, இலைத்தாளம் இசைப்பவர்கள் நடனமாடியபடியே இசைக்கத் தொடங்கினார்கள். பிறகு செண்டை மேளம் இசைப்பவர்களும் இலைத்தாளம் இசைப்பவர்களும் எதிரெதிரே நின்றுகொண்டு வேகம் கூடும் வரை இசைத்து நடனமாடி வாசித்தார்கள். வாசித்தபடியே வந்த அவர்களுடன் சிறிது தூரம் பயணித்துவிட்டு பிறகு வேறு திசையில் பிரிந்ததும் அங்கே இன்னும் சுவாரஸ்யமாக ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. இரண்டு யானைகள் பின்னணியில் நின்றுகொண்டிருக்க Snake boys மற்றும் Hooligans என இரண்டு அணியும் ஒருவருக்கு எதிரே ஒருவர் நின்றபடி மேள தாளப் போட்டியில், மோதிக் கொண்டிருந்தார்கள். சுற்றி இருப்பவர்கள் மனம் நிரம்பக் கொண்டாட்டத்துடன் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

Snake boy மற்றும் Hooligans  இடையேயான மேளப் போட்டி

கேரளத்தின் திருச்சூர் பூரம் விழாதான் அந்த மாநிலத்தின் மிகப்பெரும் மக்கள் திருவிழா. நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் சுற்றியிருக்க இதே போல சிங்காரி மேளம், செண்டை மேளம், பாண்டி மேளம் வாசிப்பவர்கள் அத்தனை பேரும் புடைசூழ அங்கே இசை, மாபெரும் அருவி மலை உச்சியிலிருந்து கொட்டித் தீர்ப்பது போல ஆரவாரத்துடன் ஆர்ப்பரிக்கும். பழஞ்சியில் நடந்த கொண்டாட்டம் அதன் 'மினி வெர்ஷன்’ என்றார்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள். மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'சார்லி’ என்னும் பயணப்படத்தின் இறுதிக்காட்சி பூரம் திருவிழா போன்ற செட் வடிவமைக்கப்பட்டு எடுக்கப்பட்டதுதான். பெரும்பாலான மலையாளப்படங்களின் க்ளைமாக்ஸ் அதுபோன்ற செட்டில் எடுக்கப்பட்டதுதான். திருச்சூர் பூரம் விழா இறுதிக்காட்சியில் வந்தால், அந்தப் படம் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை கூட ‘மோலிவுட்'டில் இருக்கிறது. திருச்சூர் பூரம் விழா மட்டுமே பலருக்குத் தெரியும் என்பதால், பழஞ்சியின் வருடாந்திரப் பெருநாள் யாருக்கும் தெரியாது என்றார்கள். 

ஹூலிகன்ஸ் குழுவினர்

மேளக்குழுக்களைத் தேவாலயத்தில் விட்டுவிட்டு அலங்காரத்துடன் திரும்பும் யானைகளைத் தழுவிக்கொண்டு அமர்ந்துகொள்ள முடிந்தது. யானைக் கோட்டையில் இருந்ததுபோல இங்கே கெடுபிடி இல்லை. 

சாலையில் திண்பண்டங்கள் - விளையாட்டுப் பொருள்கள் விற்றுக் கொண்டிருந்தவர்களையும் யானைகளையும் பார்த்து சிரித்தபடியே பழஞ்சியிலிருந்து பேருந்தில் ஏறினேன். பழஞ்சிக்குச் செல்லும்படி யோசனை கொடுத்த அந்தப் பேருந்து நடத்துநரை எங்கேனும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அன்பும் நன்றியும் தெரிவிக்கவேண்டும்!   

சூஃபி கவிஞன் ரூமி சொன்னதுதான், 'நாம் தேடிக் கொண்டிருப்பதுதான் நம்மையும் தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் பயணிக்க முடிவு செய்யும் பாதையின் வழியாக அது வந்தடைவதில்லை.' 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்