வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (10/10/2017)

கடைசி தொடர்பு:10:31 (10/10/2017)

லஞ்ச அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வெளியேறுங்கள்..! அறவழி போராட்டத்துக்குக் குவிந்த ஆதரவு

  கொள்ளையைனே வெளியேறு

“செய் அல்லது செத்து மடி” என்று முழங்கி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை 1942 -ல் தொடங்கிவைத்தார் மகாத்மா காந்தி. உயிர்தியாகம் செய்து வெள்ளையர்களிடமிருந்து மீட்ட இந்த நாட்டை, லஞ்சமும் ஊழலும் செய்யும் அரசியல் வாதிகள், அதிகாரிகள் என்கிற கொள்ளையர்களிடம்  ஒப்படைத்துவிட்டோம் என்ற பலமான கருத்தை மையமாக வைத்து கொள்ளையனே வெளியேறு” என்ற பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது அறப்போர் இயக்கம்...

“ஹலோ பாஸ்” இதுதான் உங்கள் வேலை கவுன்சிலருக்கு செக்!

சென்னை மைலாப்பூரில் நடந்த இந்தப்பொதுக்கூட்ட  நிகழ்வில் “மக்கள் குரல் என்கிற பெண்கள் அமைப்பு", (voice of the people). "மேடை ஏறியது. அப்போது "ஒரு வார்டு கவுன்சிலரின் பணிகள் என்ன? யார் நம்முடைய வார்டு கவுன்சிலர்? என்பது கூட தெரியாமல் நாம் இருக்கிறோம். கல்வியறிவு பெற்ற மக்களுக்கே தெரியாதபோது, அன்றாட வாழ்கைப்போராட்டம் நடத்தும் சாதாரண மக்களுக்கு எவ்வாறு தெரியும் என்று அந்த அமைப்பிலிருந்து பங்கேற்ற பெண்கள் பேசினார்கள். இப்படி அறியாமையில் இருப்பவர்களிடையே விழிப்பு உணர்வுபெறச் செய்வதோடு, நமது பகுதிக்குத் தேர்வு செய்யப்படும் வார்டு கவுன்சிலரைச் சந்தித்து "ஹலோ பாஸ்" எங்கள் பகுதியில் உங்கள் பணிகள் இதுதான் என்பதை நாம் அவருக்குக் கொடுப்போம். பணிகளைச் செய்து முடிப்பதற்கான குறிப்பிட்ட நாளையும் அவருக்குத் தெரிவிப்போம். முடிக்கவில்லையா? பதவியிலிருந்து விரட்டுவோம்." என்று முழங்கினர்.

அது மட்டுமன்றி சுதந்திரம் அடைந்தபோது இந்த நாடு எப்படி இருந்தது? என்று பாரதியின் 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" என்ற பாடலுடன் தொடங்கி தற்போது இந்த நாடு சீர்க்கெட்டுள்ளதை "நொந்து போன ஆளுடா தமிழ்நாட்டுக்காரன் டா. மாற்றம் மட்டும் இங்கே இல்லையடா"  என்ற பாடல்களால் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் தெறிக்கவிட்டனர். 

இதைத் தொடர்ந்து கருத்துரையாளர்கள் மேடை ஏறினர். அப்போது பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன்  “தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வருடத்திற்கு 56 கோடி ரூபாய் செலவு செய்கிறது தமிழக அரசு. ஆனால், அந்தத்துறையிலுள்ள அதிகாரிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு ஐ. ஏ.எஸ் .ஐ.பி .எஸ் அதிகாரிகளைக் கூட கைது செய்யவில்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற இவர்களின் ஊழலைத்தாண்டி தாது மணல் மாஃபியாக்கள், கிரானைட் மாஃபியாக்களாலும் தமிழகம் சீரிழந்துகொண்டிருக்கிறது." என்றார்.

ஊழல் லஞ்சத்துக்கு எதிரான பொதுக் கூட்டம்
 

கால்குலேட்டரின் முடிவு..   cannot be computed 

அவரைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் சுரேஷ், “மூன்று வகையிலானப் பிரச்னைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அதில்முதலாவதாக சாதாரண சேவைகளாகக் கருதக்கூடிய வருமானவரிச்சான்று, சாதிச்சான்று, பிறப்புச் சான்று உள்ளிட்ட சின்ன, சின்ன சேவைகளுக்காக அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள். இரண்டாவதாக மக்கள் வளர்ச்சி திட்டங்களான, சாலை, மேம்பாலம் போன்றவற்றில் மிகப் பெரிய அளவில் தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்து காவல்துறையில் ஊழல்கள் நடக்கின்றன. ஒவ்வொரு போலீஸ்டேசனுக்கும் ஒரு விலை நிர்ணயித்துள்ளார்கள். இப்படிப் பலதுறைகளிலும் ஒரு விலை நிர்ணயம் செய்து துறை ரீதியிலான ஊழல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்கவேண்டிய அவசியம் உள்ளது. அப்படிக் கேட்கும்போது நமக்குப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. அப்போது நாம் அதனை வன்முறை இல்லாமல் சட்ட ரீதியாக எதிர்த்துப்போராட வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் நடந்துள்ள ஊழல்களை ஒரு முறை மதிப்பீடு செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய கால்குலேட்டர் cannot  be computed என்று சொன்னது. அதாவது கால்குலேட்டரால் கூட மதிப்பிட முடியவில்லை. அந்த அளவுக்குப் பெரிய அளவில் பெரிய தொகையில் ஊழல்கள் நடக்கின்றன" என்றார். 

அறப்போர் இயக்க  பொதுக் கூட்டம்

சயின்டிஃபிக் கரப்ஷன் மிகப் பெரிய அச்சறுத்தல்

அவரைத்  தொடர்ந்து பேசி கல்வியாளர் வசந்திதேவி "உலகத்திலேயே அதிக ஊழல் செய்துள்ள நாடு இந்தியாதான். அதே போன்று கறுப்புப் பணம் குவிந்து கிடக்கிற நாடும் இந்தியாதான். உலக அளவில் இந்தியா என்றால், மாநில அளவில் லஞ்சமும், ஊழலும் மலிந்த மாநிலமாக தமிழகம் ஆகிவிட்டது . குறிப்பாக scientific corruption மிகப்பெரிய அளவில் தமிழகத்தை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சயின்டிஃபிக் கரப்ஷன், கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கிறது. இவ்வாறான சவால்களையும் எதிர்த்து நாம்  போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது" என்றார். 

இறுதியாக, “கொள்ளையனே வெளியேறு” நிகழ்வில் எமன், சித்ர குப்தன் கதாபாத்திரங்களை உருவாக்கி மேடை நாடகத்தை நடத்தினர். அதில் தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். சசிகலாவில் தொடங்கி தெர்மாகோல் அமைச்சர், தமிழக அரசை ஆட்டுவிக்கும் தாமரை என அரசியல் கட்சிகளைத் துவைத்துக் காயப் போடுவதாக ஒருங்கிணைத்து இருந்தனர். கடைசியாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்குக் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியும் நடத்தினர். இறுதியில்அறப்போர் இயக்கத்தின் "கொள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முக்கியச் செயல்பாடுகள். கோரிக்கைளை முன் மொழிந்தனர். அதில் லஞ்சத்தையும் ஊழலையும் பகிரங்கப்படுத்துவது, போராட்டக்களத்துக்கான சுதந்திர பூங்கா கோருவது ,லோக் ஆயுக்தா சட்டம், விசில் போலோயுர், (WhistleBlower) மாநிலப் பாதுகாப்புச்சட்டம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் மொழிந்து கொள்ளையனே வெளியேறு உறுதியை ஏற்றனர். இந்த நிகழ்வு போலீஸாரின் தீவிர கண்காணிப்பு வளைத்துக்குள் இருந்ததாகவும், உளவுத்துறை மிக துல்லியமாக கவனித்தாகவும் சொல்லபடுகிறது.

அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களைப் பல்வேறு சமூக இயக்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. போராட்டங்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்தபோதிலும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் வாயிலாக, இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் போராட்டத்துக்கும் போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவு பெற்ற பின்னரே இதற்கு போலீஸார் அனுமதி கொடுத்தனர். அண்மையில் அரசுக்கு எதிராகச் சென்னையில் நடைபெற்ற நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிக அளவுக்குத் திரண்டது இந்தப் பொதுக்கூட்டத்தில்தான்.

எனினும், இந்தப் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்கள் மனதில் தேங்கி நின்ற ஒரே ஒரு கேள்வி இதுதான்; இவ்வளவு எதிர்ப்புகளைக் கண்டும் ஊழல் செய்யாமல் இருக்கப்போகிறார்களா என்ன?


டிரெண்டிங் @ விகடன்