30 ஆண்டுகள் அதிகாரத்தைப் பறித்த 234 நாள்கள்... இனி என்னாகும் சசிகலா எதிர்காலம்? | 30 years power down in 234 days... Setback' for Sasikala's political future?

வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (11/10/2017)

கடைசி தொடர்பு:11:24 (11/10/2017)

30 ஆண்டுகள் அதிகாரத்தைப் பறித்த 234 நாள்கள்... இனி என்னாகும் சசிகலா எதிர்காலம்?

சசிகலா Sasikala
 

"எம்.ஜி.ஆர். இறந்தபோது அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உறுதியாக நிற்கவும், ராணுவ வாகனத்தின் முன்னர் போய் நிற்குமாறு சொன்னதும் சசிகலாதான். 'உங்கள் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது' எனச்சொல்லி ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தார் சசிகலா." இது ஜெயலலிதா - சசிகலா உறவு குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்த சந்திரலேகா சொன்ன கருத்து. 1982-ம் ஆண்டு சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.

எண்பதுகளின் துவக்கத்தில் ஜெயலலிதாவுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட சசிகலா, 80களின் இறுதியில் ஜெயலலிதாவின் நிழலாக மாறினார். தலைமையின் நிழலாக இருந்து அதிகாரத்தை கையில் வைத்திருந்த சசிகலா, 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அதிகாரங்களை எல்லாம் இழந்து நிற்கிறார்.

30 ஆண்டுகள் நிழல் அதிகாரமாக இருந்த சசிகலா, கடந்த ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, அதிகாரத்தை நேரடியாக கையில் எடுத்தார். தொடர்ந்து சட்டமன்றக்குழுத் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட சசிகலா, ஆளுநரிடம் ஆட்சியமைக்கவும் உரிமை கோரினார். அடுத்த ஓரிரு தினங்களில் தமிழகத்தின் 3-வது பெண் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் கொடுத்த 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்த சிறை சென்றார் சசிகலா.

 

சசிகலா Sasikala

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, 234 நாள்களுக்குப் பின் பரோலில் வந்திருக்கிறார். ஆனால், அவரிடம் இப்போது எந்த அதிகாரங்களும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க-வில் அதிகார மையமாக இருந்தவர் சசிகலா. இடையில் ஓரிருமுறை கட்சியை விட்டு விலக்கப்பட்டிருந்தாலும் அது சில நாள்களே நீடித்தது.

ஆனால், இப்போது அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. ஆனால், அவரால் எதையும் செய்து விடமுடியவில்லை. தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த போயஸ் கார்டனில் இருந்தே சிறைக்குச் சென்றார் சசிகலா. இப்போது அவரால் போயஸ் கார்டனுக்குச் செல்ல முடியவில்லை. கட்சியின் பொதுச்செயலாளராக சிறை சென்ற சசிகலா, இப்போது சிறைத்துறை அனுமதித்தால்கூட கட்சி அலுவலகத்துக்குள் செல்ல முடியாது. சிறை சென்றபோது தன் பின்னால் இருந்த முதலமைச்சரும், அமைச்சர்களும் இப்போது அவரைத் திரும்பி பார்க்கக்கூட தயாராக இல்லை. 30 ஆண்டுகளாக தன்னிடம் இருந்த அதிகாரம், 234 நாள்களில் பறிபோனது நிச்சயம் அவருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும்.

சிறையில் இருந்தபோது, நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசினார். அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். அரசியல் சூழல் குறித்தும், முக்கிய முடிவுகள் குறித்தும் அங்கு விவாதித்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது வெளியே வந்திருக்கிறார். அவரை யாரும் சந்திக்க விரும்பவில்லை. 'சிறைக்குள் அரசியல் பேசலாம். வெளியே வரும்போது அரசியல் பேசக்கூடாது' என்ற ரீதியில் அவருக்கு எமெர்ஜென்சி பரோலில் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. 'உறவினர்கள் மட்டுமே சந்திக்க வேண்டும். அரசியல்வாதிகள் சந்திக்கக் கூடாது. மருத்துவமனை சென்று கணவரை பார்க்க மட்டுமே அனுமதி' என்கிறது அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.

சசிகலா Sasikala

சசிகலாவுக்கான பரோல் என்பது சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. சசிகலா சிறை சென்றதை எல்லாக் கட்சிகளும் வரவேற்றன. அவர் சார்ந்த அ.தி.மு.க.வினரே சிறை சென்றதைக் கொண்டாடவே செய்தனர்.  ஆனால், இப்போது பெரும் உற்சாகத்துடன் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவின்  வருகை தமிழகத்தில் ஒரு அரசியல் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. இடையில் சசிகலாவைப்பற்றி மறந்து போனவர்கள், இப்போது அவர் பெயரை உச்சரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். சசிகலாவை கடுமையாக விமர்சித்தவர்கள், அவர் வெளியில் இருக்கும் இந்த நாள்களில் அமைதி காக்கிறார்கள்.  'அம்மா ஆட்சி அமைய சிறப்பான முறையில் சின்னம்மா பாடுபட்டிருக்கிறார். அந்தக் கருத்தை நான் மாற்றிக்கொள்ளப்போவதில்லை' என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

இப்போதைக்கு ஜெயக்குமார் மட்டுமே சசிகலாவுக்கு எதிராக கருத்தை தெரிவிக்கிறார். காமெடியாகிப்போன 'ஸ்லீப்பர் செல்' விவகாரத்தை மீண்டும் சீரியஸாகப் பேசத்துவங்கியிருக்கிறார் தினகரன். இது தினகரனுக்கும், அவரது அணியினருக்கும் மன எழுச்சித் தரக்கூடிய நிகழ்வாக இருக்கலாம். சசிகலாவுக்கு நிச்சயம் அப்படியிருக்காது. காரணம், அவர் இன்னும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மீண்டும் சிறை செல்லப்போகிறார். இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தான் கழிக்கப்போகிறார். சசிகலா சிறை சென்றபோது மிகப்பெரிய ஆளுமை. தான் நிறைய சோதனைகளை சந்தித்திருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே ஆளுமையை இழந்தது நிச்சயம் அவரை பாதித்திருக்கும்.

சசிகலா Sasikala

சசிகலா கட்சியை விட்டு இருமுறை நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அப்போதெல்லாம் உடனடியாக அதிகாரத்துக்கு வர சசிகலாவால் முடிந்தது. ஆனால், இப்போது அது முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இப்போதைக்கு சசிகலாவுக்கு இரண்டு அனுகூலங்கள் உள்ளன. ஒன்று அ.தி.மு.க-வில் பலமான தலைமை என்பது ஏற்படவில்லை. இரண்டாவது சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். 'உறவினர்களை மட்டுமே சந்திக்க வேண்டும். அரசியல் நடவடிக்கைகள் கூடாது' என்பது சசிகலாவுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடு. சசிகலாவின் உறவினர்கள் ஒன்று கூடினால் அரசியல் தவிர என்ன பேசிவிட முடியும்? இந்த 5 நாள்கள் தினகரன் தரப்புக்கு பெரும் உற்சாகத்தையும், எடப்பாடி தரப்புக்கு ஒருவித கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

சசிகலா மீண்டும் சிறை செல்கிறார். இதுதான் இறுதி அத்தியாயம். அவருக்கு எதிர்காலம் கிடையாது. அவரது அரசியலுக்கு முடிவுரை எழுதிவிட்டது என எதையும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் தமிழகத்தில் ஜெயலலிதா துவங்கி வடக்கில் லாலு பிரசாத் யாதவ் வரை பலர் இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். வி.எஸ்.சந்திரலேகா இந்த கட்டுரையின் முதல் பாராவில் சொல்லியதைப்போல, தன் தலைமை ஜெயலலிதாவுக்காக நிழலாக இருந்து வியூகம் வகுத்த சசிகலா, தன் நிழல் தினகரனுக்காக வியூகம் வகுக்க மாட்டாரா என்ன?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close