“குற்றவாளிகளைப் பிடிப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை!” - கௌரி லங்கேஷ் நண்பர்

கௌரி லங்கேஷ்

“கௌரி இங்கே புகைபிடிக்காதே!”

“ஏன்!” 

“புகையின் நாற்றம் இந்த அபார்ட்மென்ட் அறையை விட்டுச் செல்லாது!” 

“வேறு எங்கே சென்று புகைபிடிப்பது!” 

“கட்டடத்தின் மேல் தளத்திற்குச் செல் அல்லது புகை பிடிப்பதை நிறுத்து!”

“கிறுக்கனே! உன்னைப் பார்த்துதான் நான் புகைபிடிக்க கற்றுக் கொண்டேன்!”

“தற்போது புகை பிடிக்காதே என்று நான்தான் கூறுகிறேன்!”

”நீ முழுக்க முழுக்க அமெரிக்கனாகிவிட்டாய்!’

“அமெரிக்கன் இல்லை ஆரோக்கியமான வாழ்வு என்ன என்று கற்றுக் கொண்டேன்!”

“உன்னைவிட நான் அதிக காலம் இருந்து காண்பிக்கிறேன் பார்!”

அடையாளம் தெரியாத நபர்களால் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மற்றும் அவரது முன்னாள் கணவரும் நெருங்கிய நண்பருமான சித்தானந்த் ராஜகட்டா இருவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த உரையாடல் இது. உன்னைவிட நீண்டகாலம் வாழ்ந்து காண்பிக்கிறேன் என்ற கௌரி தற்போது உயிருடன் இல்லை.  கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட கௌரியின் நீண்ட கால நண்பரும் சக பத்திரிகையாளருமான சிவசுந்தர் கௌரி பற்றிய உரையாடலின்போது இதைப் பகிர்ந்துகொண்டார்.

நம் நாட்டில் பெரும்பாலும் முறிவுற்ற திருமணங்கள் மனக்கசப்பில்தான் முடிந்திருக்கின்றன ஆனால் கௌரி, சித்தானந்தின் சிறந்த நண்பராகத் தொடர்ந்தார். சித்தானந்தின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளுக்கு கௌரிதான் உண்மையில் ரோல் மாடல். காரணம் கௌரி யாரையும் வெறுக்கத் தெரியாதவர், அன்பையும் உண்மையையும் மட்டுமே நம்பியவர் என்று கூறும் சிவசுந்தரம் கௌரி லங்கேஷின் பதினைந்து ஆண்டுகால நண்பர். கௌரி நடத்திய ’கௌரி லங்கேஷ் பத்ரிகே’-யில் நீண்டகாலம் எழுதி வந்திருக்கிறார். கூடவே, ’தி இந்து’ பத்திரிகையில் புத்தக விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

கௌரி ‘நக்சல் எழுத்தாளர்’ என்று சில ஊடகவியலாளர்களாலேயே குற்றம் சாட்டப்பட்டார். அவரின் இறப்பை அவர்கள் கொண்டாடினார்கள். அவர் கண்மூடித்தனமாக மோடியை எதிர்த்தார் என்று ஒரு தரப்பு கூறியது. ஆனால் கர்நாடக மாநிலத்தவரே பெரிதும் அறிந்திருக்காத சிறுபத்திரிகை ஒன்றை நடத்தியவரை கொலையாளிகள் குறிபார்க்கக் காரணம் என்ன?, மனம் திறந்து பேசினார் சிவசுந்தரம். “கௌரி 2002ம் ஆண்டு வரை ஆங்கிலப்பத்திரிகையில் பணியாற்றி வந்தார். அந்தச் சமயம் அவரது தந்தை பத்திரிகையாளர் லங்கேஷ் இறந்தபோதுதான் ‘லங்கேஷ் பத்ரிகேவை’ நடத்துவதற்காக தனது தந்தையின் சிறுபத்திரிகையில் தனது பணியைத் தொடர்ந்தார். அவர் இடதுசாரியைச் சேர்ந்தவர் இல்லை. உண்மையில் இடதுசாரிச் சித்தாந்தங்களை யாராவது பேசினால். தனக்கு தலைசுற்றுகிறது என்பார். அவர் உண்மையில் தனது மனதுக்குச் சரி என்று பட்டதைச் செய்தவர்.

சித்தராமையா தலைமையிலான அரசு கர்நாடக நக்சலைட் தலைவர் சாகெத் ராஜனிடம் பேச்சுவார்த்தைக்காக கௌரியை அனுப்பியது. கௌரியும் சாகெத் ராஜனும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அதனால் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்தது. இருந்தாலும் நக்சலைட்டுகளின் ஆயுதம் ஏந்தும் முறையை அவர் முட்டாள்தனம் என்றே எதிர்த்தார். அதே சமயம் அரசு நக்சலைட்டுகளின் குரலைக் கேட்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால் அவர் நக்சலைட் ஆதரவாளர் எனப்பட்டார்.

சிலர் அவரை ‘சிட்டி நக்சலைட்’ என்று விமர்சித்தார்கள். ஆனால் அவர் அதற்கெல்லாம் கவலைகொள்ளவில்லை. அதே சமயம் அமைதி பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்த சூழலில் சாகெத் ராஜன் கொல்லப்பட்டபோது முதலில் கொதித்து எழுந்தது அவர்தான். தனது சிறுபத்திரிகையில் புனைப்பெயர்களில் நிறைய பகுதிகளை எழுதிவந்தார்.அதில் பெண்கள் குறித்த மதரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராக கேள்விகள் எழுப்பி இருப்பார். தமிழகத்தைப் போல கர்நாடகம் கிடையாது. இங்கே ஒரு மதத்தைப் பற்றி தனது கருத்தைக் கூறி விட்டு சுதந்திரமாக நடமாடலாம். ஆனால் கர்நாடகம் அப்படியில்லை. அவரது முகநூலில் பலபேர் அவரது கருத்துகளுக்கு எதிராக  அவரை எச்சரித்தார்கள், மிரட்டல் விடுத்தார்கள். அதனால் கௌரி லங்கேஷைக் கொன்றவர்கள் நூறு சதவிகிதம் இந்துத்துவ நிலைபாட்டாளராகவும் அல்லது அவர்களுக்குத் தொடர்புடையவராகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம்” என்றார். 

கௌரி லங்கேஷ் படுகொலை விவகாரம் தொடர்பாக விசாரிக்க கர்நாடக மாநில ஐ.ஜி தலைமையிலான 75 பேர் கொண்ட தனிப்படை ஒன்றை அமைத்துள்ளது சித்தராமையா அரசு. ஆனால் அவர்கள் சமூக விரோதமற்றவர்களாக இருக்கிறார்களே ஒழிய சமூக விரோதிகளை எதிர்ப்பவர்களாக இல்லை மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கல்புர்கி படுகொலையிலேயே இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கௌரி லங்கேஷ் படுகொலை விவகாரத்தில் அவர்கள் குற்றவாளிகளைப் பிடிப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை என்கிறார் சிவசுந்தரம். “கர்நாடக முதல்வர் சித்தராமையா கௌரியின் நல்ல நண்பர். அங்கு தற்போது இருக்கும் காங்கிரஸ் அரசும் விடுதலை இயக்கங்களுடன் இணக்கத்துடனேயே இயங்கி வருகிறது. ஆனாலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு அதிகாரிகளிடம்தான் இருக்கிறது. அவர்கள் ஒருவேளை இந்துத்துவ ஆதரவாளர்களாக இருக்கும் நிலையில், கொலை வழக்கு விசாரணை என்னவாகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை” என்கிறார் அவர்.

பத்திரிகையாளர்கள் எப்போதுமே உண்மையின் பக்கம்தான் நிலைப்பாடு எடுக்க வேண்டும், களப்பணியிலும் ஈடுபட வேண்டும். இதுதான் கௌரியின் கொள்கை. கௌரி எத்தனை உண்மைமிக்கதொரு வாழ்வை வாழ்ந்தார் என்பதை விளக்கினார் சிவசுந்தரம், “2002ல் அவர் கன்னடப் பத்திரிகை துறையில் நுழைந்த சமயம் பாபாபுடன்கிரி என்னும் 400 வருட பழைமை வாய்ந்த மலைகிராம தர்காவை தத்தாத்ரேயர் கோயில் எனக் கூறி மதப் பிரச்னையை சில மதவாத சக்திகள் உருவாக்கின. அப்போதுதான் கௌரி அவர்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க எங்களுடன் இணைந்துகொண்டார். ஆனால் அவருக்கு மலைவாழ் மக்களுடன் எங்களைப் போல இயல்பாகப் பழகமுடியவில்லை. அவர்களுக்காகக் குரல் கொடுக்க வந்தாலும் அவர்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். அதே கௌரிதான் 2016ல் ஆதிவாசி விவசாய மக்களுக்காக சித்தராமையா அரசை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டபோது ஒரு விநோதமான காரியத்தைச் செய்தார். போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆதிவாசி பெண்கள் கௌரியின் அறையில்தான் தங்கியிருந்தார்கள். அவர்கள் கௌரியின் கழிவறையைதான் உபயோகப்படுத்தியிருந்தார்கள். உண்மையில் அதுவரை கழிவறையே உபயோகப்படுத்தியிருக்காத அவர்கள் கௌரியின் கழிவறையை அசுத்தம் செய்துவைத்திருந்தார்கள். நான் சென்று பார்த்திருந்தபோது அந்த அசுத்தத்தைப் பார்த்து  சிறிதும் முகம் சுளிக்காமல் கௌரியே தனது கழிவறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்.14 வருடகால மக்களுடனான வாசம் அவரை முழு மனுஷியாக மாற்றியிருந்தது!”

பணமதிப்பு நீக்க பிரச்னை சமயத்தில் அனைத்துப் பத்திரிகைகளும் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டபோது, தான் பிற செய்தித்தாள்களுக்கு எழுதிக் கிடைத்த பணத்திலிருந்து தனது பத்திரிகை வெளியீட்டை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு தன்னிடம் தொலைபேசியில் பேசிய நினைவுகளை அசைபோடுகிறார் சிவசுந்தரம் “சிவசுந்தரம்! எங்கே பத்திரிகையை நடத்தமுடியாமல் போய்விடுமோ என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்தேன். தற்போது என்னிடமிருந்த சில ஷ்யூரிட்டிகளையும் விற்று சம்பளம் கொடுப்பது முதல் அனைத்துக் கடமைகளையும் முடித்துவிட்டேன். இனி நான் யாருக்கும் கடன்பட்டவள் இல்லை” என்று கூறிவிட்டுதான் அண்மையில் படித்த அருந்ததி ராயின் புத்தகம் ஒன்றைப் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார்.

அடுத்த சில மணிநேரங்களில் கௌரி வீட்டின் அருகிலேயே தங்கியிருந்த அவரது அம்மாவிடமிருந்து சிவசுந்தரத்திற்கு அழைப்பு வந்துள்ளது,” சிவூ! கௌரி வீட்டு வாசலில் விழுந்துகிடப்பதாகச் சொல்கிறார்கள். அவளைச் சுற்றி ரத்தமாக இருக்கிறதாம்...” அதன்பிறகு வெளிவந்த தகவல்கள் அத்தனையும் உலகம் அறிந்தது.

“கௌரியின் இறுதி ஊர்வலத்தில் கடைசியாகச் சென்றேன். அவருக்காக அத்தனை பேர் திரண்டிருந்தார்கள். அத்தனை பேரும் கௌரியின் எண்ணங்களுடன் ஏதோ ஒரு வகையில் இணைந்தவர்கள். கௌரி எண்ணும் அந்த இளைத்த உடலை நான்கு தோட்டாக்களால் துளைத்தவர்களுக்கு அந்தக் கூட்டம்தான் பதில். கௌரி தான் எடுத்த முடிவுகளிலிருந்து என்றுமே பின்வாங்காதவர்.
அவர் ஒரு சாத்தியப்பட்டிருக்கக் கூடிய உண்மை!. அதனால்தான் அவர் படுகொலையும் செய்யப்பட்டார்!” என்று உணர்ச்சி பெருக முடித்தார்.

இன்னும் எத்தனை உண்மைகளை இப்படியாக மதவாதத்திற்கு இரையாக்கப் போகிறோம்? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!