`இதைத்தான் விரும்புகிறீர்களா பன்னீர்செல்வம் அவர்களே!' - மோடி சந்திப்பின் சந்தேகங்கள் | Are you expecting this Mr.Pannerselvam? Modi meet and rising confusions...

வெளியிடப்பட்ட நேரம்: 10:17 (13/10/2017)

கடைசி தொடர்பு:10:29 (13/10/2017)

`இதைத்தான் விரும்புகிறீர்களா பன்னீர்செல்வம் அவர்களே!' - மோடி சந்திப்பின் சந்தேகங்கள்

ஓ.பன்னீர்செல்வம், மோடி

1969ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணா உயிரிழந்த போது, ஆட்சிக்கு தலைமை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்தது. தலைமை பொறுப்பை ஏற்க பலர் தகுதியோடு இருந்தனர். அவர்களில் வல்லவரான கருணாநிதி தி.மு.க. தலைவர் ஆனார். 1987ல் எம்.ஜி.ஆர். உயிரிழந்தபோதும் இதே நிலைதான். ஜானகி, ஜெயலலிதா என இருவர் தலைமை பொறுப்பை ஏற்க விரும்பி, இரு அணியாக பிரிந்து நின்றனர். ஆட்சி கலைக்கப்பட்டு, தேர்தலில் தன் வலிமையை நிரூபித்து முதல்வரானார் ஜெயலலிதா.

அண்ணா உயிரிழந்தபோதும், எம்.ஜி.ஆர். உயிரிழந்த போதும் இருந்த நிலைதான் இப்போது. அண்ணா தனக்குப் பின் தகுதி வாய்ந்த தலைவர்கள் என சிலரை உருவாக்கி வைத்திருந்தார். எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பனுக்கும், ஜெயலலிதாவுக்கும் அரசியலில் அளித்த முக்கியத்துவத்தின் மூலம் அதை உணர்த்தியிருந்தார். ஆனால், அண்ணா, எம்.ஜி.ஆர். வழிவந்த ஜெயலலிதா, தனக்குப்பின் அடுத்த தலைவர் யார் என்பதை அடையாளம் காட்டவில்லை. அதற்கான திட்டமிடல் எதுவும் அவரிடம் இருந்திருக்கவில்லை.  

இதனால் இப்போது மூன்று பிரிவாக உடைந்து கிடக்கிறது அ.தி.மு.க. இது மத்திய அரசு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினரிடம் போய் ஆலோசனை கேட்பது தான் நடக்கிறது. எல்லாவற்றுக்கும் டெல்லி சென்று ஆலோசனை கேட்கத்துவங்கியிருக்கிறார்கள்.

1967ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சித்துவங்கியது முதலாய், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லியில் இருந்து எந்த கட்டளைகளையும் தமிழகம் எதிர்பார்த்திருக்கவில்லை. தேசிய கட்சிகளுக்கு இடம் கொடுக்காததன் மூலம், டெல்லியியை எதிர்பார்த்திருக்க வேண்டிய சூழல் இல்லாமல் பார்த்துக்கொண்டது திராவிடக் கட்சிகள்.

ஓ.பன்னீர்செல்வம், மோடி

ஆனால் இப்போது, அண்ணா, எம்.ஜி.ஆர். வழிவந்தவர்கள், உட்கட்சி பிரச்னைக்கெல்லாம் மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யிடம் கேட்கும் சூழல் தான் நிலவுகிறது. அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது பிரதமர் மோடியுடனான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், தனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளை சரி செய்யவே பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. 

அரசு விழாக்களில் முக்கியத்துவம் இல்லை. ப்ளக்ஸ் பேனர் துவங்கி தனக்கு எங்கும் முக்கியத்துவம் இல்லை என்பதாகவே நினைக்கிறார் பன்னீர்செல்வம். துணை முதல்வராக பதவி வகித்தாலும் அரசு விழாக்களில் தனக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை என அதிருப்தியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், அதிருப்தியை சரிசெய்து கொள்ளவே பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.  "இது அரசியல் நிமித்தமான சந்திப்பு அல்ல. பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை” என மறுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அரசியல் தவிர எதுவும் அங்கு பேசப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல எனச்சொல்லும் ஓ.பன்னீர்செல்வம், 'தமிழகத்தின் உள்நாட்டு மின்சார உற்பத்திக்குத் தேவையான அளவு நிலக்கரி பெறுவதற்காகவே இந்த சந்திப்பு' எனச்சொல்லி இருக்கிறார். ஆனால் டெல்லியில் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை அவர் அழைத்துச் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது ஆதரவாளர் மைத்ரேயனை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றார். எடப்பாடி ஆதரவாளர் என்பதால் அவரை அழைத்துச் செல்லவில்லை என்றே சொல்லப்படுகிறது.

'மின்சாரத்துறை சார்ந்த கோரிக்கையோடு பிரதமரை சந்தித்த நீங்கள் உங்களோடு டெல்லியில் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை அழைத்துச் செல்லாமல், மைத்ரேயனை அழைத்துச் சென்றது ஏன்?' என்ற கேள்விக்கு வேறு கேள்வி இருந்தால் கேளுங்கள் என அலட்சியமாக கடந்து செல்கிறார் பன்னீர்செல்வம்.

ஓ.பன்னீர்செல்வம் மனு

ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கோரிக்கை மனு.

அரசியல் பேசவில்லை. மாநில நலன் பற்றியே பேசினோம் என்பதை உணர்த்த, பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவின் நகல் எனச்சொல்லி மனு நகல் ஒன்று செய்தியாளர்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் கொடுக்கப்பட்டது. பிரதமரிடம் கொடுக்கப்பட்டது என்பதற்கான எந்த அறிகுறியும் அதில் இல்லை. எழுத்துப்பிழைகளோடும், அடித்தல், திருத்தல்களோடும் இருந்தது அந்த மனு. துணை முதல்வரின் லெட்டர் பேடில் அந்த கோரிக்கைகள் கொடுக்கப்படவில்லை. மனுவில் துணை முதல்வர் பெயரே இல்லை. அரசு லோகோ இல்லை. அப்படி ஒரு மனுவை மாவட்ட குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கூட கொடுக்க முடியாது. ஆனால் அந்த மனு தான் பிரதமரிடம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்பதை உணர்த்த செய்தியாளர்களுக்கு இந்த மனுவின் நகல் கொடுக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் நிச்சயமாக அவர்கள் அரசியல் தவிர எதையும் பேசவில்லை என்பதை உறுதி செய்கிறது. செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்களும் கேள்வி பதில் வடிவில்.

செய்தியாளர் : பிரதமருடனான இந்த சந்திப்பு எதற்காக?

ஓ.பன்னீர்செல்வம் : தமிழகத்தின் உள்நாட்டு மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நிலக்கரி பெறுவதற்காகவே இந்த சந்திப்பு. அது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

செய்தியாளர் : எவ்வளவு நிலக்கரி கேட்டிருக்கிறீர்கள்?

ஓ.பன்னீர்செல்வம் : தேவைப்படும் அளவு நிலக்கரி வேண்டும் என கேட்டிருக்கிறோம்.

செய்தியாளர் : ?!?! அதுதான் எவ்வளவு கேட்டிருக்கிறீர்கள்?

ஓ.பன்னீர்செல்வம் : தமிழகத்துக்கு ஆண்டு முழுவதும் தேவைப்படும் நிலக்கரியில் சற்று குறைவாக வந்து கொண்டிருக்கிறது. அதை கேட்டிருக்கிறேன்.?!

செய்தியாளர் : இந்த சந்திப்பில் அரசியல் பற்றி விவாதிக்கப்பட்டதா?

ஓ.பன்னீர்செல்வம் : அரசியல் பற்றி பேசவில்லை.

செய்தியாளர் : மின்சாரத்துறை அமைச்சர் உங்களோடு வரவில்லை. அவரை சந்திக்க பிரதமர் மறுத்து விட்டாரா?

ஓ.பன்னீர்செல்வம் : அது உங்கள் கருத்தாக இருக்கலாம்.

செய்தியாளர் : அப்படியென்றால் துறை சார்ந்த அமைச்சரான தங்கமணியை ஏன் அழைத்துச் செல்லவில்லை?

ஓ.பன்னீர்செல்வம் : மாலை மத்திய மின்சாரத்துறை அமைச்சரை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்திக்கிறார்.

செய்தியாளர் : மைத்ரேயனை அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். ஏன் மின்சாரத்துறை அமைச்சரைச் செல்லவில்லை?

ஓ.பன்னீர்செல்வம் : வேறு கேள்வி இருந்தால் கேளுங்கள்.

செய்தியாளர் :எடப்பாடி பழனிசாமிக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் தான் பிரதமரைச் சந்தித்து பேசியிருக்கிறீர்கள் என சொல்லப்படுகிறதே?

ஓ.பன்னீர்செல்வம் : உங்கள் யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. 

செய்தியாளர் : எடப்பாடி அரசுடன் முரண்படுகிறார்களா? உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என மனவருத்தம் கொள்கிறீர்களா?

ஓ.பன்னீர்செல்வம் : மனவருத்தம் எதுவும் இல்லை. முரண்படவும் இல்லை.

செய்தியாளர் : உங்களின் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்டதா? தர்மயுத்தம் முடிந்து விட்டதா?

ஓ.பன்னீர்செல்வம் : தர்மயுத்தம் முடிந்து விட்டதால் தான் இணைந்திருக்கிறோம். 

செய்தியாளர் : உள்ளாட்சி தேர்தல் நடக்காததுதான் டெங்கு பாதிப்புக்கு காரணம் என மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?

ஓ.பன்னீர்செல்வம் : உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்கும் டெங்கு காய்ச்சலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?.

செய்தியாளர் : உங்களை மத்திய அரசுதான் இயக்குகிறது என சொல்லப்படுகிறதே?

ஓ.பன்னீர்செல்வம் : இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கிற மத்திய அரசு மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை குற்றமாக கருத முடியாது.

செய்தியாளர் : ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சைக்கலர் எல்லாம் காவி நிறமாக மாறுகிறதே?

ஓ.பன்னீர்செல்வம் : இது உங்கள் பார்வையில் உள்ள குறைபாடு. என்ன கேள்வி கேட்க வேண்டுமோ அந்த கேள்வியை கேட்கலாம். 

மோடி ஜெயலலிதா

இவற்றோடு பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டத்தைப் பற்றி சில நிமிடங்கள் புகழ்ந்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். இந்த பேட்டிக்கு பின்னரும், மோடியுடனான இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என உங்களால் நம்பமுடிகிறதா என்ன?. டெல்லி தலைவர்கள் தங்கள் அரசியல் தேவை வரும்போது தமிழகம் வந்தே தமிழகத் தலைவர்களை சந்தித்துப் போயிருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு இது மிகவும் பொருந்தும். மோடி முதல் பாரதிய ஜனதாவின் அனைத்து தலைவர்களும் ஜெயலலிதாவை போயஸ் இல்ல வீடு தேடி வந்தே சந்தித்திருக்கிறார்கள். கூட்டணி பேச்சாக இருந்தாலும், வேறு அரசியல் தேவையாக இருந்தாலும் டெல்லி தலைவர்கள் தமிழகம் வருவது தான் வழக்கம்.

இப்போது அந்த நிலை மாறுகிறது. அ.தி.மு.க.வின் இந்த பலவீனம் ஒன்றுதான், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கான ஒரே பலமாக இருந்து வருகிறது. இதை அ.தி.மு.க.வினர் உணர்ந்திருக்கிறார்களா என்பது தான் தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்