வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (13/10/2017)

கடைசி தொடர்பு:17:35 (13/10/2017)

1996-ல் சசிகலா சிறை சென்றபோது என்ன நடந்தது. சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 53

சசிகலா, ஜெயலலிதா

டெல்லிக்கும் மன்னார்குடிக்கும் 30 ஆண்டு காலப் பகை! 
அந்தப் பகை இன்று ஏற்பட்டதல்ல; 1995-ன் இறுதியிலேயே  புகையத் தொடங்கிவிட்டது. அதற்கு முழுமுதல் காரணம், ஜெயலலிதா! 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, சசிகலாவையும் அவரது குடும்ப உறவுகளையும் அரணாக நிறுத்தித்தான், ஜெயலலிதா அரசியல் வெற்றிகளைப் பெறத் தொடங்கினார். ஜெ-சசி உறவைப் பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் அதைத் தெரிந்து வைத்திருந்தனர். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளும் அந்த வியூகத்தைப் புரிந்து வைத்திருந்தனர். அதனால், ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டுமானால், சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் முதலில் குறி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அதற்கு வசதியாக சசிகலாவின் குடும்பம் தவறுகளையும், ஊழல்களையும், சொத்துக்களையும் மூட்டை மூட்டையாக, கத்தை கத்தையாக கட்டியே வைத்திருந்தது. அதன்விளைவுதான், இன்றும் சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாராவில் அடைபட்டுக் கிடக்கின்றனர். அவர்கள் இன்று இப்படி இருப்பதற்குப் பின்னால், டெல்லி இருப்பது எல்லோரும் அறிந்ததே! இல்லையென்றால், ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தூசி படிந்துகிடந்த சொத்துக்குவிப்பு வழக்கை, சசிகலா முதலமைச்சராகப் பதவி ஏற்கப்போன நேரத்தில் தூசி தட்டி தீர்ப்புச் சொல்லி இருக்கமாட்டார்கள்! 

சசிகலா

மத்தியில் பி.ஜே.பி அரசாங்கம் இருக்கும் இன்றைய தேதியில் சசிகலா குடும்பம் சந்தித்துக் கொண்டிருக்கும் சோதனையை, மத்தியில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் இருந்தபோதும் சசிகலா குடும்பம் சந்தித்தது. இப்போது பிரதமர் மோடி; நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அப்போது பிரதமர் தேவேகௌடா; நிதியமைச்சர் ப.சிதம்பரம். இப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தினகரனும், பாஸ்கரனும் வழக்கு வாய்தா என்று அலைந்து கொண்டிருக்கின்றனர். அப்போது-அதாவது 95-ன் இறுதியில்-பாஸ்கரன், தினகரன், சசிகலா, சசிகலாவின் கணவர் நடராசன் சிறையில் அடைக்கப்பட்டனர். சுதாகரன், இளவரசி வழக்கு வாய்தா என்று அலைந்து கொண்டிருந்தனர். அன்று சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்தக் குடும்பம், அந்த நேரத்தில் காட்டிய விசுவாசம்தான், அவர்களை அடுத்த 25 ஆண்டுகள் கட்சியைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொடுத்தது. ஆட்சியில் அதிகாரம் செய்யும் ஆதிக்கத்தைக் கொடுத்தது! 

பாஸ்கரன்-தினகரன் கைது! 

சசிகலாவின் குடும்பத்தில் முதன்முதலில் பணமோசடிக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர் பாஸ்கரன். 1995 செப்டம்பர் 21-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பாஸ்கரன் அப்போது ஜெ.ஜெ டி.வியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். அந்த டி.வியின் ஒளிபரப்புக்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு பணம் கொடுத்ததில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி அவர் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில்தான் அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். பாஸ்கரனுக்கு அந்த வழக்கில், ஜாமீன் கிடைப்பதற்குள் அவருடைய அண்ணன் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம், உரிய அனுமதி இல்லாமல் சுமார் 65 கோடி ரூபாயை வெளிநாட்டில் அவர் முதலீடு செய்த குற்றச்சாட்டில் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதோடு காபிபோசா சட்டத்தின் கீழும் அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பாஸ்கரன், தினகரன் கைது செய்யப்பட்ட வழக்குகளில் சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அ.தி.மு.க ஆட்சி நடந்து கொண்டிருந்ததால், சசிகலா அதைச் சமாளித்துக் கொண்டிருந்தார். அமலாக்கத்துறைக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, தன் பதிலைச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்து கொண்டார். ஆனால், அந்த நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் வந்து அ.தி.மு.கை துடைத்தெறிந்தது. தி.மு.க, த.மா.க, ரஜினி வாய்ஸ் கூட்டணிபோட்டு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சி அமைந்தது. கருணாநிதி முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, சசிகலாவை நோக்கி அமலாக்கத்துறையின் பிடி இறுகத் தொடங்கியது. மத்தியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுபோல், வேலைகளை வேகப்படுத்தினார். காரணம் அப்போது ப.சிதம்பரம் , ஜெயலலிதா மீது ஜென்ம விரோதம் கொண்டிருந்தார்.

திருச்சியில் வைத்து ப.சிதம்பரம் தாக்கப்பட்டது, அதன்பிறகும் விடாமல் ஜெயலலிதா சிதம்பரத்துக்குக் கொடுத்த குடைச்சல்களால் அவர் கொதித்துப் போய் இருந்தார். ஜெயலலிதா மீதான அவருடைய அந்தக் கோபம், சசிகலா குடும்பத்தின் மேல் திரும்பியது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே சிதம்பரத்தின் கோபம் வெளிப்பட்டது. அவர் பேசிய இடங்களில் எல்லாம், சசிகலா குடும்பத்தின் சொத்துக்களைப் பட்டியல் போட்டுத்தான் ஜெயலலிதாவை உலுக்கி எடுத்தார். அவர் வெற்றி பெற்று மத்திய நிதியமைச்சரானதும் விடுவாரா? பாஸ்கரன் கைதில் தன் ஆட்டத்தை ஆரம்பித்து, பிறகு தினகரனை வளைத்துப் பிடித்து, சசிகலாவை சிறையில் அடைத்து, ஜெயலலிதாவை சிக்க வேண்டும் என்று வேலைகள் நடந்தன. 

பாஸ்கரன் விசாரணைக்கு வந்தபோது

பாஸ்கரன் கைது செய்யப்பட்டது ஜெ.ஜெ டிவி வழக்கு. அதில் பெரா சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.  பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தியபோது, ஒரு பேக்ஸ் நகல் சிக்கியது. அது மணிலாவில் இருந்து பாஸ்கரன், சசிகலாவுக்கு அனுப்பியது.  அதில் ‘அன்புள்ள சித்தி’ என்று ஆரம்பித்து, ‘கோலாலம்பூர் ராஜூ மூலம் ஜெ.ஜெ டிவி ஒளிபரப்புக்கான பணம் கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று பாஸ்கரன் குறிப்பிட்டு இருந்தார். அந்தச் சித்தி சசிகலா என்பதில் யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பே இல்லை! அதனால், அந்தப் பணப் பரிவர்த்தனை பற்றி, ‘தனக்கு எதுவும் தெரியாது’ என சசிகலாவால் மறுக்க முடியவில்லை. அதன் அடிப்படையில் பெரா சட்டம் 8(1)-ன்படி சசிகலாவின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஜெ.ஜெ.டிவிக்கு மற்ற உதிரிபாங்கள் வாங்க 1 லட்சத்து 36 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் கொடுக்கப்பட்ட விவகாரமும் அமலாக்கத்துறையிடம் சிக்கியது. அதுகுறித்து சிங்கப்பூர் ராமச்சந்திரனுக்கு பாஸ்கரன் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘இந்தத் தொகையை சித்தி உங்களிடம் கொடுக்கச் சொன்னார்’ என்று பாஸ்கரன் குறிப்பிட்டு இருந்தார். 

தினகரன் கைது செய்யப்பட்டது, சென்னை அபிராமபுரம் வங்கியில் ஆர்.சுசீலா என்பவர் பெயரில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு இருந்தது. அதில், சுசீலா பெயரில் 3 கோடியே 29 லட்சம் ரூபாய் சிங்கப்பூரின் பினாங்கு நகரில் இருந்து வந்ததாக டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அதைக்காட்டி அதே வங்கியில் ‘பரணி பீச் ரிசாட்ஸ்’ என்று நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டு இருந்தது. அந்த ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவும் ஒரு பங்குதாரர். அந்தக் கடனில் வாங்கப்பட்டதுதான் கொடநாடு டீ எஸ்டேட். இது கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் வித்தை என்று அமலாக்கத்துறை சட்டங்களைக்காட்டி குற்றம் சாட்டியது. வெளிநாட்டில் வசிக்கும் என்.ஆர்.ஐ-க்கள் சொல்லும் ஆட்களுக்கு சசிகலா தனது கறுப்புப் பணத்தை இந்தியாவில் கொடுத்துவிடுவார். அதற்கு இணையான தொகையை, வெளிநாட்டில் வசிப்பவர்கள் டாலரில் டி.டி. எடுத்து சசிகலாவுக்கு அனுப்பி விடுவார்கள். இப்படி வரும் தொகையை அந்த என்.ஆர்.ஐ-க்கள் பெயரிலேயே வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அவற்றில் முதலீடு செய்து, அதன் மூலம் வங்கிகளில் லோன் வாங்குவதும், சொத்துக்கள் வாங்குவதும் நடந்தன. இதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது அமலாக்கத்துறை! பாஸ்கரன், தினகரன் கைது செய்யப்பட்ட இரண்டு வழக்குகளிலும் சசிகலாவுக்குச் சம்பந்தம் இருந்ததை ஆவணங்கள் உறுதி செய்தன. 

நான் போகிறேன் அக்கா...
 
1996  ஜூன் மாதம் 20-ம் தேதி அதற்கு நாள் குறிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் மோப்பம் பிடித்துவிட்ட நடராசன், சசிகலா கைதைத் தடுக்க 10 நாட்களுக்கு முன்பே டெல்லியில் போய் முகாமிட்டார். அங்கு அவர் அதிகம் நம்பியது முன்னாள் உத்தரபிரதேச முதல்வர் முலாயம்சிங் யாதவ் மூலம் காய் நகர்த்தினார். காரணம், அன்றைய தேவேகௌடா அரசாங்கத்தில், முலாயம்சிங் யாதவ் ராணுவ அமைச்சராக இருந்தார். அவர் மூலம் ப.சிதம்பரத்தின் கோபத்தைத் தணிக்கலாம் என திட்டமிட்டார் நடராசன். முலாயம்சிங்கும் நடராசனுக்கு நம்பிக்கை வார்த்தைகளைக் கொடுத்தார்; ப.சிதம்பரத்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரின் கோரிக்கையை மறுத்த சிதம்பரம், “அந்தக் குடும்பம் தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம்... உங்களுக்கு முழுமையாகத் தெரியாது; அதனால்தான் என்னிடம் அவர்களுக்காகப் பேசுகிறீர்கள். நான் தேர்தல் வேட்பாளராக இருந்தபோதே, அதிகம் விமர்சித்தது, சசிகலாவின் குடும்பத்தைத்தான்; கேள்வி கேட்டது அவர்கள் சம்பாதித்த சொத்துக்களைப் பற்றித்தான்; இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் நான்தான் இருக்கிறேன்; நானே அவர்களைத் தப்பிக்கவிட்டால் தமிழகத்தில் என்னைப்பற்றி என்ன பேசுவார்கள்?” என்று கறாராகக் கையை விரித்துவிட்டார். அதன்பிறகு நடராசன் ஒரு முடிவுக்கு வந்தவராய், சென்னை திரும்பினார். “சசிகலாவை அமலாக்கத்துறை கைது செய்ய வருவதற்கு முன், நாமே அவரை அமலாக்கத்துறையிடம் ஆஜர்படுத்தி, வழக்கைச் சந்திக்கலாம்” என்பதுதான் நடராசனின் திட்டம்; சசிகலா அதற்குச் சம்மதித்தார்; ஜெயலலிதா தவித்துப் போனார்!

தடுத்த ஜெயலலிதா... தவிர்த்த சசிகலா!  

சசிகலா கைது செய்யப்பட்டபோது

நடராசன் திட்டத்தை சசிகலா, ஜெயலலிதாவிடம் சொன்னார். ஆனால், ஜெயலலிதாவுக்கு அதில் உடன்பாடு இல்லை. “பிரதமர் தேவேகௌடாவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பொறு சசி” என சசிகலாவுக்குச் சமாதானம் சொன்னார் ஜெயலலிதா. அந்த நேரத்தில், ‘ஜெயலலிதாவுக்குச் சாதகமான சூழல் டெல்லியில் இல்லை’ என்பது சசிகலாவுக்குப் புரிந்தது. அதனால், “இல்லை அக்கா... அவர் வந்து அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லிருக்கார்... நான் பார்த்துக் கொள்கிறேன். என்னால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது” என்று சொல்லிவிட்டு அமலாக்கத்துறையிடம் ஆஜராகக் கிளம்பினார். நடராசனும் சசிகலாவோடு கிளம்பினார். அந்த நேரத்தில் புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதுவும் கில்லாடி நடராசனின் திட்டம்தான். ஒருவேளை பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பெரிதாகி, சசிகலாவின் ஆஜர் விவகாரம் சிறிதாகும் என்பது அவர் எண்ணம். அன்று காலை, 11.05 மணிக்கு சசிகலா, ஜெயலலிதாவுக்கு ராசியான பச்சைக் கலர் புடவை-ஜாக்கெட் அணிந்து அமலாக்கத்துறை பிரிவு விசாரணைக்கு வந்தார்.

இரண்டு கண்டஸா கார்கள், இரண்டு அம்பாசிடர் கார், ஒரு டாடா சுமோவில் சசிகலாவின் குடும்பம் அவருக்கு அரணாக வந்தது. சசிகலாவும் நடராசனும் கண்டஸா காரில் வந்தனர். அவர்களோடு சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன், விநோதகனின் மகன் மகாதேவன், நடராசனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன், மைத்துனர் காளிதாஸ், வழக்கறிஞர்கள் ஜீனசேனன், தளவாய் சுந்தரம், போஸ் உள்ளிட்டவர்கள் வந்தனர். சசிகலா காரைவிட்டு இறங்கியபோது அவரை அணைத்துக் கொண்டு சென்றார் நடராசன். அதன்பிறகு ஜெ.ஜெ டி.வி-க்கு வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கியது, அபிராமபுரம் வங்கியில் பல கோடி ரூபாய் வெளிநாட்டுப் பணம் முதலீடு செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களைக் கேட்டு, 9 பக்கம் அறிக்கை தயார் செய்யப்பட்டது. எழுத்துப்பூர்வமாக அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொன்னார் சசிகலா. இரவு சுமார் ஒன்பதே முக்கால் மணிக்குத்தான் சசிகலாவிடம் விசாரணை முடிந்தது. அதன்பிறகு, “உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் உங்களை நாங்கள் கைது செய்கிறோம்; மற்றபடி உங்களுக்கான உரிமைகள் அனைத்தும் கொடுக்கப்படும்” என்றார் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அதைக்கேட்ட சசிகலா லேசாகக் கலங்கி அழுதார். 

சசிகலா, நடராசன் கைது! 

சசிகலா, தினகரன், நடராசன்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சசிகலாவை ஏற்றிச் சென்ற ஜீப்பில், அப்போதைய அமைச்சர் இந்திரகுமாரியும் ஏறிக் கொண்டார். அந்தநேரத்தில் அதைப் படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை நடராசனின் ஆட்கள் தாக்கினர். அதில் நடராசன் மீது பத்திரிகையாளர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், நடராசனை விசாரணை செய்ய சென்னை மாநகர இணை போலீஸ் கமிஷ்னர் அமித்வர்மா அழைத்துச் சென்றார். நடராசன் ஏற்றப்பட்ட ஜீப் அண்ணாநகர் நோக்கிப் போனது. சசிகலா ஏற்றப்பட்ட ஜீப் சூளைமேட்டுக்குப் போனது. காரணம், இரவாகிவிட்டதால் மஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி சசிகலாவை ரிமாண்ட் செய்வதற்காக அங்கு கொண்டு போனார்கள். மாஜிஸ்திரேட் சசிகலாவை 15 நாட்கள் ரிமாண்ட் செய்வதாக அறிவித்தார். அதைக் கேட்டதும் மயக்கம் வந்தவரைப் போல் சசிகலா அங்கிருந்த பெண் காவலர்களின் தோளில் சாய்ந்தார். மேலும், அப்போதே சசிகலாவுக்கு கண்ணில் பிரச்னை இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட்டிடம் சசிகலாவின் வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர். அப்போது சசிகலா மாஜிஸ்திரேட்டிடம் வந்து, “என் கண்ணில் 20 தையல் போடப்பட்டுள்ளது. அதனால், வழக்கமாக என்னைப் பரிசோதிக்கும் டாக்டர்கள்தான் இனியும் எனக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கேட்டார். அதைக் கேட்ட மாஜிஸ்திரேட், “சிறை அதிகாரிகள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார். 

சிறையில் சலுகைகள்! 

அதன்பிறகு சசிகலா சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறைக் கண்காணிப்பாளராக இருந்த ராஜ்குமார், சிறையில் நகைகள் அணிய அனுமதி இல்லை என குறிப்பிட, “என் நகைகள் காணாமல் போனால்கூட நான் புகார் சொல்லமாட்டேன். ஆனால், நகைகள் என்னிடமே இருக்கட்டும்” என்று குறிப்பிட, அதன்பிறகு அதிகாரிகள் பொறுமையாக சிறை விதிகளை எடுத்துச் சொல்லி உள்ளனர். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த சசிகலா, “என்ன விதி? யார் சொன்னது? உங்க சி.எம்-கிட்ட வேண்டும் என்றாலும் நான் பேசுகிறேன்’’ என்று பிடிவாதம் பிடித்துள்ளார். அதன்பிறகு அதிகாரிகள் பேசிப்புரிய வைத்ததும், “அவரே தன் கையில் இருந்த வளையல், காதில் இருந்த தோடு, கழுத்தில் இருந்த செயினைக் கழற்றிக் கொடுத்துள்ளார். அந்த நகைகள் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மூலம் போயஸ் தோட்டத்துக்குச் சென்றன. அதன்பிறகு அப்போது இருந்த ராஜ்குமார் சசிகலாவுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுத்தார். ஜெயலலிதாவும் சசிகலாவும் கோலேச்சிய அ.தி.மு.க ஆட்சியில், தினகரன் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என அந்த ராஜ்குமார் தூக்கியடிக்கப்பட்டவர் என்பது தனிக்கதை! நடராசன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதேநேரத்தில், ஜெயலலிதாவின் வளர்பபு மகனும், சசிகலாவின் அக்காள் மகனுமான சுதாரகனுக்கும் அமலாக்கத்துறை ஒரு சம்மனை அனுப்பியது. அவர் விசாரணைக்குப் போய்க்கொண்டு இருந்தார். 

ஜெயலலிதாவிடம் சசிகலா சொன்ன ரகசியம்! 

ஜூன் 21-ம் தேதி, சசிகலாவைச் சிறையில் போய்ச் சந்தித்தார் ஜெயலலிதா. உணர்ச்சிகரமான அந்தச் சந்திப்பு அப்போதைய சிறைக் கண்காணிப்பாளர் அறையில் நடந்தது. சசிகலாவைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று கறாராகச் சொன்னதால் அந்த ஏற்பாடு. ஏ.சி. இல்லாத கண்காணிப்பாளர் அறையில் வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தார் ஜெயலலிதா. தனியாகச் சந்திக்க வேண்டும் என்றாலும், யாராவது ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்பது சிறை விதி. அதனால், சிறைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் மட்டும் ஜெ.-சசி சந்திப்பில் உடன் இருந்தார். சசிகலாவைக் கண்டதும், கதறி அழுதுவிட்டார். அதற்குச் சாட்சியாக அமர்ந்திருந்தவர் ராஜ்குமார். உணர்ச்சிகரமான அந்தச் சந்திப்பில் மேலும் வலுப்பட்டது ஜெ.-சசி நட்பு. காரணம், அப்போது ஜெயலலிதாவிடம் சசிகலா சொன்ன ரகசியம்தான். அதைக்கேட்டதும் ஆடிப்போனார் ஜெயலலிதா. இனி எந்த நிலையிலும் சசிகலாவைவிட்டுப் பிரியக்கூடாது என்று ஜெயலலிதா முடிவெடுத்த அந்தத் தருணம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று! 

ஜெயலலிதாவிடம் சசிகலா சொன்னது என்ன? 

தொடரும்... 

(இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளீக் செய்யவும்)


டிரெண்டிங் @ விகடன்