வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (14/10/2017)

கடைசி தொடர்பு:14:56 (14/10/2017)

தியேட்டர்களில் கட்டணக் கொள்ளை! இன்றைக்கு விஷால் சொல்கிறார்... அன்றைக்கே சொன்னது ஜூ.வி

தியேட்டர்

“அரசு நிர்ணயம்செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டுமென்றும்,  கேன்டீன்களில் எம்.ஆர்.பி விலைக்குதான் பொருள்களை விற்க வேண்டும். அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும். தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது. விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்” என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் அறிக்கை ஒன்றில் இப்போது கூறி இருக்கிறார்.

இன்றைக்கு விஷால் கூறியதை சில மாதங்களுக்கு முன்பு ஜூனியர் விகடன் இதழில் பார்க்கிங் முதல் பாப்கார்ன் வரை... - தியேட்டர் கொள்ளைகளுக்குத் தீர்வு என்ன? என்ற தலைப்பில் கடந்த ஜூன் 18-ம் தேதியிட்ட இதழில் சொல்லி இருக்கிறோம்.

மீண்டும் அந்த கட்டுரை வாசகர்களின் பார்வைக்கு....

திரையரங்குகளுக்குப் படம் பார்க்கச் செல்லும் ரசிகர்களைக் கிட்டத்தட்ட வில்லன்களாகக் கருதி சோதனை செய்யும் நடைமுறை  திரையரங்குகளில் பரவி வருகிறது. 

தியேட்டர்களுக்குள் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காகவே இவ்வாறு சோதனை செய்கிறார்கள். தியேட்டர் கேன்டீனில் அதிக விலையில் விற்கப்படும் பொருட்களை ரசிகர்களை வாங்க வைக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கமாக இருக்கிறது.  இது மட்டுமல்ல. புதிய படங்கள் வெளியாகும்போது, வழக்கமான கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றனர். சினிமாவை வாழவைக்கும் ரசிகர்களை மொட்டையடிக்கும் இந்த செயல் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுதவிர பார்க்கிங் கட்டணம் என்ற பெயரிலும் கொள்ளையடிக்கின்றனர். சென்னையில் உள்ள மால்களில் செயல்படும் தியேட்டர்களில் மீட்டர் வட்டி, ரன் வட்டி என்பது போல மணிக்கு மணி பார்க்கிங் கட்டணம் எகிறுகிறது. சினிமா கட்டணத்தை விட பார்க்கிங்கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் மால்களும் உள்ளன. இந்த அநியாயங்களுக்கு விடிவு தேடும் வகையில் தியேட்டர்களுக்கு உள்ள விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தமிழக அரசிடம் தகவல்கள் கேட்டிருந்தோம். அவர்கள் அளித்த பதில்களைப் படித்தபோது, நமக்கு மயக்கம் வராத குறைதான். அரசு விதிமுறைகளில் உள்ள தகவல்களுக்கும், தியேட்டர்கள் உண்மையில் நடந்து கொள்வதற்கும் ஏகபட்ட விதிமீறல்கள் இருக்கின்றன. திரையரங்குகளில் விதிகளைக் கடைபிடிக்கிறார்களா என்று சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள சில திரையரங்குகளுக்கு நேரில் சென்று, விகடன் ஆர்.டி.ஐ டீம் ஆய்வு செய்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாம் அனுப்பிய மனுவுக்கு தமிழக அரசு அளித்த பதில்கள் இவைதான்...  

கட்டணக் கொள்ளை

புதிய படம் வெளி வந்த இரண்டு வாரங்களுக்கு அரசின் கட்டண நிர்ணயத்தைவிட தியேட்டர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கலாம் என்று தமிழக அரசு விதிமுறையைத் திருத்தி உள்ளது.(அதிக கட்டணத்துக்கு உச்ச வரம்பு) இந்த புதிய விதிமுறை கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால்தான் புதிய படங்கள் ரிலீசான முதல் இரண்டு வாரங்களுக்கு தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். பல திரையரங்குகள் முதல் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஒரு திரைப்படத்தைத் திரையிடுகின்றனர். பல தியேட்டர்களில் இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் அதிகக் கட்டமே வசூலிக்கின்றனர். அரசு உத்தரவு எதையும் அவர்கள் மதிப்பதில்லை.

இது தவிர வழக்கமான நாட்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதையும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் என்பது ஏசி வசதி உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் 10 ரூபாய் இருக்க வேண்டும். அதிகபட்சம் 50 ரூபாய் இருக்க வேண்டும். ஏசி வசதி இல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்சம் 7 ரூபாய், அதிகபட்சம் 30 ரூபாயும் இருக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம், அதிக பட்சம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று தமிழ அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. (கிராபிக்ஸ் தகவல்கள் பார்க்கவும்). ஆனால், அரசு குறிப்பிட்டிருக்கும் கட்டணத்தைவிட பல மடங்கு கட்டணங்களைத்தான் தியேட்டர்கள் வசூலிக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. 

சென்னையில் திரையரங்குக்குச் செல்பவர்கள் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்துதான் படம் பார்க்கச் செல்கின்றனர். ஆன்லைனில் 100 ரூபாய், 120 ரூபாய் டிக்கெட்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்த டிக்கெட்களுக்கு இணையதள கையாளும் கட்டணம் 34 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. டிக்கெட்விலை 200 ரூபாய்க்கு அதிகம் என்றால் இணையதள கையாளும் கட்டணம் 41 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரசு உத்தரவுப் படி பல திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய் டிக்கெட் இருக்கிறது. ஆன்லைனில் சில திரையரங்குகளில் 10 ரூபாய் டிக்கெட்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வருகிறது. AVIALABLE என்று காட்டும் இணையதளங்களில் முன்பதிவு செய்ய முயற்சி செய்தால், 10 ரூபாய் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாத நிலைதான் உள்ளது. பெரும்பாலான திரையரங்குகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே நொறுக்குத்தீனிகளுக்கும் ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்தவும் வசதி இருக்கிறது. குளிர் பானங்கள், பாப்கான் ஆகியவற்றையும் ஆன்லைனிலேயே முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். எனவே, ஒரு டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம், நொறுக்குத்தீனி என 300 ரூபாய்க்கு மேல் ஆகிவிடும். 

தியேட்டர்

உணவு பொருட்கள் கொண்டுசெல்லலாம்.

சினிமாவுக்கு செல்பவர்கள் தங்கள் வீட்டில் இருந்து அல்லது வெளியில் உள்ள கடைகளில் இருந்து வாங்கிய சிற்றுண்டிகள், உணவுப் பொருட்களை திரையரங்குகளுக்குள் கொண்டு செல்லக்கூடாது என்று தமிழ்நாடு திரைப்பட (ஒழுங்கு) விதிகளின் கீழ் எவ்வித கட்டுபாடும் விதிக்கப்படவில்லை.

ஆனால், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளிப்பதில்லை. சென்னையில் ஆவடியில் ஒரு திரையரங்கில் டிக்கெட்டிலேயே உணவுப் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று அச்சடித்துள்ளனர்.

சென்னையில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அம்பா ஸ்கைவாக் மாலில் உள்ள  பி.வி.ஆர் தியேட்டரில் ‘கடம்பன்’ திரைப்படத்துக்கு ஆர்.டி.ஐ டீம் சென்றது. முன்னதாக தியேட்டருக்கு வெளியே கடைகளில் நொறுக்குத் தீனி பாக்கெட்கள் வாங்கிக்கொண்டோம். தியேட்டருக்குச் செல்லும் நுழைவு வாயிலிலேயே இரண்டு செக்யூரிட்டிகள் நிற்கிறார்கள். நம்மிடம் டிக்கெட் இருக்கிறதா என்று சரிபார்த்த அவர்கள், நாம் வைத்திருந்த நொறுக்குத் தீனி பாக்கெட்களை உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினர். 

“திரைப்படத்தின் இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக வாங்கினோம். தியேட்டர் கேன்டீனில் அதிக விலை கொடுத்து வாங்க முடியாது” என்று சொன்னோம். “இல்லை அதெல்லாம் அனுமதிக்க முடியாது” என்று தியேட்டர் வாசலில் வைத்திருந்த அறிவிப்பு பலகையைக் காட்டினர். அதில் தியேட்டருக்குள் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது என்று அறிவிப்பை எழுதிவைத்திருந்தனர். தியேட்டர் மேலாளரிடம் முறையிட்டபோதும்,  “நொறுக்குத் தீனி பாக்கெட்களை உள்ளே கொண்டுபோகக் கூடாது. அதற்கான அரசு உத்தரவுகள் இருக்கிறது” என்றார். நாம் “எந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உத்தரவு நகல் இருந்தால் கொடுங்கள். பார்க்கலாம்” என்று கேட்டோம். “உத்தரவு இருப்பது உண்மை. ஆனால், அது குறித்தத் தகவல்கள் எனக்குத் தெரியாது. நீங்கள் கண்டிப்பாக நொறுக்குத் தீனி பாக்கெட்களை தியேட்டருக்குள் கொண்டு செல்ல முடியாது” என்றார் கறாராக. “ஏன் இப்படிக் கட்டுப்பாடு விதிக்கிறீர்கள்” என்று கேட்டோம். “எங்களை நம்பி தியேட்டரில் கடைவைத்திருப்பவர்கள்தான் எங்களுக்கு முக்கியம். இது எல்லாமே வியாபாரம்தான். அதனால்தான் இந்தக் கட்டுப்பாடுகள்” என்று சொன்னார். நாம் வேறு வழியின்றி நொறுக்குத் தீனி பாக்கெட்களை செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டுச் சென்றோம். இடைவேளையின்போது ஒரு காபி 40 ரூபாய்க்கு வாங்கினோம். அதே போல நொறுக்குத் தீனிகள் 100 ரூபாய், 150 ரூபாய் என்று விற்றனர். திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது செக்யூரிட்டியிடம் கொடுத்த நொறுக்குத் தீனி பாக்கெட்களை திரும்ப வாங்கிக்கொண்டோம். தமிழக அரசு நம்முடைய ஆர்.டி.ஐ கேள்விக்கு அளித்திருக்கும் பதிலில் தியேட்டருக்குள் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதை தியேட்டர்காரர்கள் அப்பட்டமாக மீறுகிறார்கள் என்பதை நாம் நேரடி அனுபவத்தில் உணர்ந்தோம்.

இதன் தொடர்ச்சியாக சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஐமேக்‌ஸ் திரையரங்குக்கு இரண்டு குழுவாகப் பிரிந்து சென்றோம். முதலில் சென்ற குழுவில் இருந்தவர்கள் உணவுப் பொருட்களுடன் சென்றனர். தியேட்டர் நுழைவு வாயிலில் வழிமறித்த பாதுகாவலர்கள், உணவுப் பொருட்களை உள்ளே கொண்டுசெல்ல அனுமதி இல்லை என்றார். நாங்கள் உள்ளே கொண்டு போவோம் என்று சொன்னோம். உணவுப் பொருட்களை உள்ளே கொண்டுசெல்லக் கூடாது என்று விதிமுறை இருக்கிறது என்றார். குழுவில் இருந்த ஒருவரைக் காட்டி, இவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இடையில் சாப்பிடாவிட்டால், மயக்கம் வந்துவிடும். எனவே உணவுப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்றோம். சரி கொண்டு போங்கள் என்று பாதுகாவலர் அனுமதி அளித்தார். 

அடுத்ததாக இரண்டாவது குழுவில் இருந்தவர்கள் குளிர்பானங்களுடன் உள்ளே சென்றனர். வழிமறித்த பாதுகாவலர், குளிர்பானங்களை எல்லாம் உள்ளே கொண்டு போகக் கூடாது என்றார். நமது குழுவில் இருந்த பெண், எனக்கு பவன்டோதான் பிடிக்கும். உங்கள் திரையரங்கில் உள்ள கேன்டீனில் பவன்டோ இருக்கிறது என்று சொன்னால், நான் இதை இங்கே உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகிறேன் என்றார். கேன்டீனில் பவன்டோ இல்லை என்றவர். சரி நீங்கள் உள்ளே எடுத்துப் போங்கள் என்று அனுமதித்தார்.

காரணங்கள் சொன்னபிறகே ஐமேக்ஸ் தியேட்டரில் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர். உள்ளே உணவுப் பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது என்று சொன்னவுடன் பெரும்பாலானவர்கள் சரி என்று பாதுகாலவரிடமே உணவுப் பொருட்களை கொடுத்துவிட்டுச் செல்லும் பரிதாபக் காட்சிகளைக் காணமுடிகிறது.  

மதுரையில்...

மதுரையில் உள்ள வில்லாபுரம் வெற்றி திரையரங்குக்கு கடந்த மே மாதம் 19-ம் தேதி  நமக்குத் தெரிந்த குடும்பத்தினரை ‘பாகுபலி’ திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றோம். டிக்கெட் ஒரே விலைதான். 120 ரூபாய். இரண்டாம் வகுப்பு கிடையாது. டூவீலரை பார்க் செய்ய 30 ரூபாய் கட்டணம்.

டிக்கெட் வாங்கியவுடன் உடனே அரங்குக்குள் சென்றுவிட முடியாது. ஏர்போர்ட்டுக்குள் செல்லும்போது பல கட்ட சோதனைகளை கடந்து செல்ல வேண்டும். அதே போலத்தான் தியேட்டரிலும் யூனிபாஃர்ம் அணிந்த செக்யூரிட்டிகள் வரிசை கட்டி நின்றார்கள். 

திரைப்படம் பார்க்கவரும் ஆண்களை உடல் முழுவதும் தடவி சோதனை செய்கிறார்கள். பெண்களிடம் ஹேண்ட்  பேக்கை திறந்து சோதிக்கிறார்கள். ஸ்நாக்ஸ் பாக்கெட்கள் இருந்தால் அதைக் கொண்டு செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள். நாம் அழைத்துச் சென்ற குடும்பத்தினர் ஒரு பையில் இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகள், முறுக்கு பாக்கெட்டுகளை கொண்டு வந்திருந்தனர். அதைத் திரையரங்குக்குள் கொண்டு செல்லக்கூடாது என்று சொல்ல, “சார் சின்ன பையனுக்கு வேற ஸ்நாக்ஸ் ஒத்துக்காது, அதான் கொண்டு வந்தோம். பெரியவங்க நாங்க உள்ளே விக்கிற ஸ்நாக்ஸை கண்டிப்பா வாங்குறோம்” என்று சொன்னதை அவர்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை. “அதெல்லாம் முடியாது. பையைக் கொடுத்து டோக்கன் வாங்கிக்குங்க. திரைப்படம் முடிந்து போகும்போது வாங்கிட்டுப் போங்க” என்றார்கள். அருகிலிருந்த அறையில் பையைக் கொடுத்துவிட்டு டோக்கன் வாங்கிக்கொண்டனர். அடுத்ததாக மெட்டல் டிடெக்டர் சோதனை, சோதனை முடித்து ஒரு வழியாக அரங்குக்குள் அமர்ந்தோம்.

பட இடைவேளையின்போது கேண்டீனில் என்னென்ன கிடைக்கும் என்பதை திரையில் காட்டுகிறார்கள். கேன்டீன் என்பது ஃபுட்கோர்ட் மாதிரி வரிசையாக பல கடைகள் உள்ளன. பப்ஸ், சான்ட்விச், ப்ரெஞ்ச் ப்ரை, பாப்கார்ன், ஐஸ் க்ரீம், காபி, கூல்டிரிங்க்ஸ் என்று எல்லாமே கிடைக்கிறது. ஆனால், விலைதான் தொண்டையை அடைக்கிறது. ஐம்பது ரூபாயிலிருந்துதான் விலையே தொடங்குகிறது. பப்ஸ் ஐம்பது ரூபாய், பாப்கார்ன் 90, 100,110 ரூபாய் என்று மூன்று வெரைட்டியாக உள்ளது. மற்ற அனைத்து ஸ்நாக்ஸ்களுமே 60 ரூபாய்க்கு மேல்தான் தொடங்குகிறது. வீட்டிலிருந்து கொண்டு வரும் தின்பண்டங்களுடன், திரையரங்கில் பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு விற்கும் சமோசா, முட்டை போண்டா, பாப்கார்ன் வாங்கி தின்ற மதுரை மக்கள் வேறு வழியில்லாமல் இந்த கொடூர விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் நிலைதான் பாவமாக இருக்கிறது. ஐந்து ஸ்நாக்ஸ் வாங்கினாலே 500 ரூபாய் காலியாகிவிடும். பெரும்பாலான பெற்றோர்கள் கொண்டு வந்த ஸ்நாக்ஸை கீழே பறிகொடுத்துவிட்டு கேண்டீனை வேடிக்கை மட்டும் பார்க்கும் வேதனையை அனுபவிக்கிறார்கள்.  நாம் அழைத்துச் சென்ற குடும்பத்தினர் நான்கு பேருக்கு முடிந்தவரையில் சிக்கனமாக ஸ்நாக்ஸ் வாங்கியே எண்ணூறு ரூபாய் வந்து விட்டது. எப்படா படம் விடுவார்கள் என்று நினைக்க வைத்து விடுகிறார்கள். படம் விட்டதும் சிறையிலிருந்து விடுதலை ஆன உணர்வு. போதும்யா உங்க தியேட்டர்ல படம் பார்த்த அனுபவம்னு புலம்பிக்கிட்டே வீடு வந்து சேர்ந்தோம்.

திருச்சியில்...

திருச்சியில் உள்ள தியேட்டர்கள் குறித்த உண்மை நிலைமை அறிந்துகொள்ள, கடந்த 6-ம் தேதி நண்பர்கள் சகிதமாக கிளம்பினோம். வெளியில் கடைகளில் பிஸ்கட் பாக்கெட்கள், தண்ணீர் பாட்டில், திராட்சை, நொறுக்குத் தீனிகள் எனத் தனித்தனியே வாங்கி எடுத்துக்கொண்டு, திருச்சி சோனா மீனா தியேட்டருக்கு சென்றோம்.

10 ரூபாய் கொடுத்து பார்க்கிங் டோக்கன் வாங்கிய நாம், அடுத்து 120 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தோம். டிக்கெட் எடுத்த நம்மை, வாசலில் நின்றுகொண்டிருந்த ஜிம்பாய்ஸ், வாயை ஊதுங்க என்றபடி, மேலோட்டமாக தடவி சோதித்தார்கள். லேசாக மதுவாசனை வந்தால், அப்படியே வெளியே அனுப்பிவிடுவோம், எத்தனை பேருடன் வந்தாலும் சம்மந்தப்பட்டவர்கள் மட்டும் அனுமதியில்லை என்றார்கள். அதேபோல்,அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர், பெண்களின் பைகளை சோதித்தபின் உள்ளே அனுப்பினார்.

சோதனை முடித்து, உள்ளே நுழைந்த நம்மை, எதிரில் நின்று கொண்டிருந்த பாய்ஸ், “கையில் வைத்திருக்கும் பொருட்களை அவங்கிக்கிட்ட கொடுங்க,. படம்முடிந்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள்  பொருட்கள் பத்திரமாக இருக்கும்” என்றார்கள். சட்டென அந்தப் பெண் ஊழியர், நம்மிடம் இருந்த திராட்சையை வாங்கி வைத்தார்.

“மேடம், நான் சாப்பிடல. ரொம்ப பசியா இருக்கிறது. பசி அதிகமானால், படபடப்பு அதிகமாக இருக்கும்” என்றேன். “அப்படியென்றால், இந்தாங்க வெளியில் போய் சாப்பிட்டு வாங்க. நான் வேண்டாம்னு சொல்லலையே” என்றார். “இவ்வளவையும் உடனே சாப்பிட முடியாதே, பொறுமையாகப் படம் பார்த்துக்கொண்டே சாப்பிடத்தான் வாங்கி வந்தேன்” என்றேன். “சர்க்கரை நோய் இருக்கு, உடல்நிலை சரியில்லை” என நீண்ட நேரம் அவரிடம் வாதாடியும்  மனமிறங்கவே இல்லை. இதேபோல், பிஸ்கெட் பாக்கெட் தண்ணீர் பாட்டிலுடன் வந்த நமது புகைப்படக்காரரிடம், பிஸ்கட் பாக்கெட் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என அதை வாங்கி வைத்துக்கொண்டார்கள்.

எங்களுக்குப் பின்னால், ஒரு வயதான பெண் ஒருவர், கையில் உனவுப்பொட்டலத்தோடு வந்தார். அவரும், தனது நிலமையைச் சொல்லி, ரொம்பப் பசியாக இருக்கும்மா, படத்துக்கு நேரம் ஆகிவிட்டது என்று பிள்ளைகள் சத்தம் போட்டதால், பொட்டலம் கட்டிக்கிட்டு வந்தோம். என் சூழலை புரிஞ்சிக்கம்மா எனக் கெஞ்சினார். ஆனாலும் அந்தப் பெண் ஊழியர், அனுமதிக்கவில்லை. கடுப்பான அந்தப் பெண், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதும் அந்தப் பெண், மனமிரங்கவில்லை. வேறு வழியில்லாமல் பசியோடு உள்ளே போனார். அடுத்த சில நிமிடங்களில், அவர் கொண்டுவந்த, பொட்டலத்தைத் தரையில் வைக்கப்பட்டது. அந்தச் சின்ன அறையில், பாதுகாப்பு பெட்டக வசதிகள் இல்லை. வெறுமனே, டோக்கன் கொடுத்து அனுப்புவதோடு சரி. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கெடுபிடி கொஞ்சம் குறைவு.

பார்க்கிங் கொள்ளை 

உண்மையில் திரையரங்குகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரியுமா. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கார்களுக்கு 3 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களுக்கு இரண்டு ரூபாய், சைக்கிளுக்கு ஒரு ரூபாயும் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

அதிகக் கட்டணம் தவறுதான்

இது தொடர்பாக, சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதனிடம் பேசினோம். “திரையரங்குகளுக்குள் உணவுப் பொருட்களை  கொண்டு போகலாம், கொண்டு போகக் கூடாது என்று சட்டத்தில் கூறப்படவில்லை. 15 வருடங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள திரையரங்கில் ஒரு சம்பவம் நடந்தது. திரையரங்குக்கு வந்த ஒருவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பக்கத்தில் உட்கார்ந்த பெண்ணிடம் கொடுத்திருக்கிறார். அந்த பெண் மயக்கமான பின்னர், அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. 4 சம்பவங்கள் இது போல நடந்தது. எனவே திரையரங்குகளுக்குள் வெளி உணவுகளைக் கொண்டு வருவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தான் இப்போது கடைபிடிக்கிறோம். திரையரங்குக்கு வருபவர்களில் யார் நல்லவர், கெட்டவர் என்று அடையாளம் காணமுடியவில்லை. யார் என்ன உணவுகள் கொண்டு வருவார்கள் என்றும் தெரியவில்லை. இதனால்தான் இந்த முடிவை எடுத்தோம். 

சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் அவர் திரையரங்குக்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்லலாம். அதே போல குழந்தைகளுக்கு பால் கொண்டுபோவது, குழந்தைகளுக்கு உணவு கொண்டு போவதை யாரும் தடுப்பதில்லை. தமிழகத்தில் ஆயிரம் தியேட்டர்கள் இருக்கின்றன. யாரோ ஒரு சிலர் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்கின்றனர். நோயாளிகள், குழந்தைகள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். 

புதிய திரைப்படங்கள் வெளிவந்த இரண்டு வாரங்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கலாம் என்ற சட்டம் இப்போது அமலில் இல்லை. (நாம் மேலே குறிப்பிட்ட சட்டம், நமக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆர்.டி.ஐ தகவலில் கூறப்பட்டுள்ளது)அரசு நிர்ணயித்த கட்டணங்கள்தான் வசூலிக்கின்றனர். நியாயமாகப் பார்த்தால், அதிகக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால் தவறுதான். கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டுமானால், சென்னையைப் பொறுத்தவரை போலீஸ் கமிஷனர்,  பிற மாவட்டங்களில் மாவட்டக் கலெக்டர்களுக்கு எழுதி, அவர்கள் அனுமதி கொடுத்தால் வசூலிக்கலாம். 

அரசு விதிகளில் கூறியிருப்பது, பரிந்துரைக்கப்பட்ட சராசரி கட்டணம்தான். இதற்கு மேல் வசூலிக்க வேண்டுமானால், மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறவேண்டும். திரையரங்குகளில் கேன்டீன்களில் பாப்கார்ன் அதிக விலைக்கு விற்பதாக எனக்குத் தெரியவில்லை. பாப்கார்ன் அதிகபட்சம் 60 ரூபாய் வரைதான் விற்கின்றனர். (180 ரூபாய், 200 ரூபாய்க்கு எல்லாம் பாப்கார்ன் விற்கிறார்கள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்)பாப்கார்ன் அதிகம் விற்பதற்கு காரணம் இருக்கிறது. வெளியில் கடைகளில் 10 மணி நேரம் பாப்கார்ன் விற்கலாம். திரையரங்குகளில் இடைவேளை என்பது 20 நிமிடம் இருக்கிறது. நான்கு காட்சிகள் என்றால், விற்பனை என்பது 80 நிமிடம்தான். கடையில் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். எனவே, கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கு அதிகமாக விற்பது நியாயம் அல்ல” என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார். 

இது தொடர்பாக தமிழக அரசின் நில நிர்வாக ஆணையகத்தின் உயர் அதிகாரியிடம் பேசினோம். ‘‘தியேட்டர்களுக்கான விதிமுறைகள் வெளியிடுவது மட்டும்தான் எங்களுடைய பணிகள். விதிமுறைகளை திரையரங்குகளில் முறையாகக் கடைபிடிக்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க வேண்டியதும், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் சென்னை என்றால் போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்று எங்களுக்குப் புகார்கள் வந்திருக்கின்றன. அதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி சொல்லி இருக்கிறோம். தியேட்டர்களுக்குள்  உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது பற்றி இதுவரை எங்களுக்குப் புகார் வரவில்லை. துறையின் தலைமை அலுவலகம் என்ற வகையில் எங்களுக்கு வரும் புகார்களை உரிய நபர்களுக்கு அனுப்பி வைப்போம்” என்று முடித்துக்கொண்டார். 

இது தொடர்பாக சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் கேட்டோம். "திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிப்பது பற்றியும், அதிக கட்டணங்கள் வசூலிப்பது குறித்தும் பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றவர், "மேலும் தகவல்களுக்கு நீங்கள் இணை ஆணையர்(தெற்கு-சட்டம் ஒழுங்கு) சங்கரிடம் விளக்கம் பெறுங்கள்" என்றார். 

நாம்  இணை ஆணையர் சங்கரிடம் பேசினோம். "நீங்கள் கொடுத்த ஆர்.டி.ஐ தகவல்களை படித்தேன். இதில் உள்ள தகவல்களும், அரசின் விதிமுறைகளில் உள்ள தகவல்களையும் நான் ஆய்வு செய்கிறேன். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்"  என்றார். 

கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்

நாம் இது சம்பந்தமாக மதுரை கலெக்டர் வீரராகவ ராவிடம் பேசினோம், " புதுப்படங்கள் ரீலிசாகும்போது இதுபோல் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று புகார் வருகிறது. ஆனால் எப்போதுமே அதிக கட்டணம் என்பது விதி மீறலாகும்.நாங்களும் தொடர்ந்து அரசு நிர்ணயித்த கட்டணங்களை வாங்க வேண்டுமென்று அறிவிக்கிறோம். தற்போது தியேட்டர்களை தொடர்ந்து கண்கானிக்க அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க உள்ளோம். இனி முறைகேடாக நடந்துகொள்ளும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும். படம் பார்க்க செல்பவர்கள் ஸ்நாக்ஸ் கொண்டு செல்ல கூடாது, குடி நீர், குழந்தைக்கு பால கொண்டு செல்லக்கூடாது என்று தியேட்டர்காரர்கள் தடுக்க முடியாது. இதை நானே நேரில் ஆய்வு செய்கிறேன். தியேட்டர் கட்டணம், உள்ளே கேண்டீனில் ஸ்நாக்ஸ்களின் விலை நியாயமானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால்  நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

அதிக விலைக்கு விற்றால் புகார் அளிக்கலாம்

திரையரங்குகளில் உள்ள கேன்டீனில் உணவுப்பொருட்களில் அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லரை விலை (MRP)-க்கு அதிகமாக பொருட்கள் விற்கப்பட்டால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி(Controller of Legal Metrology (Weights & Measures))-யிடம் புகார் செய்ய வேண்டும். புகாரில் உண்மை இருக்கிறதா என்பதைக் கண்டறிய தொழிலாளர் நலத்துறை ஆய்வாளரை சம்பந்தப்பட்ட திரையரங்குக்கு அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். சென்னையில் மால்கள், கோயம்பேடு பேருந்துநிலையம், திரையரங்குகளில் அடிக்கடி சோதனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறினார்.  

நுகர்வோர் நீதிமன்றங்களை நாடலாம்

தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலித்தால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வழி இருக்கிறது. சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரலில் ரஜினிமுருகன் படத்துக்குச் சென்றிருக்கிறார். டிக்கெட் கட்டணம் 40 ரூபாய்தான். ஆனால், கூடுதலாக 60 ரூபாய் சேர்த்து 100 ரூபாய் வசூலித்துள்ளனர். இது குறித்து தியேட்டர் மேலாளரிடம் கேட்டதற்கு அவமானப்படுத்தும் வகையில் பேசி இருக்கின்றார். இதனால், ராமலிங்கம் இது குறித்து செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து சேவைக்குறைபாடு இழப்பு மற்றும் இன்னல்களுக்கு 25 ஆயிரம் தர வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. வழக்கின் செலவுத் தொகை, டிக்கெட் இழப்பீடு தொகையாக 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்