வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (21/10/2017)

கடைசி தொடர்பு:17:20 (21/10/2017)

ஜல்லிக்கட்டு vs பீட்டா... மெர்சல் ரிலீஸ் பின்னணி!

மெர்சல் விஜய்

"நீ என்ன பெரிய வசூல் மன்னனா ? ஆமா அப்படித்தான் பேசிக்கிறாங்க'- இது பைரவா படத்தின் பன்ச் வசனம் மட்டுமல்ல. அந்த நாயகனை சுற்றிய சர்வதேச சந்தை மதிப்பு பற்றி  பேசுற உண்மையும் கூட. 'விஜய்'- இந்த மூன்றெழுத்துக்குள் வசூலை வாரிக்குவிக்கும் மந்திர சக்தி உள்ளது. அதனால்தான் அவரின்  ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பி, அதிலிருந்து அவரவர் தேவைக்கேற்ப ஆதாயத்தை அடைந்துகொள்கின்றனர்"- இது, மெர்சல் திரைப்பட தயாரிப்புக் குழுவில் உள்ள நமது நண்பரொருவர் ஆதங்கத்தோடு நம்மிடம் பகிர்ந்தவை. "முன்னெல்லாம் எங்க தளபதி படம் ஹிட் ஆகுமா ? ஆகாதான்னு பேசிப்போம். இப்போல்லாம் அவர் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?ன்னு யோசிக்கிறோம். அந்தளவுக்கு தவிச்சு கிடக்கிறோம் "- இது விஜயின் தீவிர ரசிகர் ஒருவரின் தவிப்பு. மேற்கண்ட இரண்டிலும் உண்மையில்லாமல் இல்லை. 'காவலனில்' தொடங்கி 'மெர்சல்' வரை விஜயின் ஒவ்வொரு படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பும், அவரின் ரசிகர்கள்  திக் திக் நிமிடங்களையே  சந்திக்கின்றனர்.

மெர்சல் எனது டைட்டில் என்று ஒருவர் வழக்கு போட்டார். பிறகு திரையரங்க கட்டணப் பிரச்னை எழுந்தது. திரையரங்கம் நிர்ணயித்த தொகையை விடக் கூடுதல் கட்டணம் பெறக்கூடாது என்றார் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால். இவையெல்லாம் ஒருவழியாக சரிக்கட்டி வந்த மெர்சல் குழுவுக்கு இறுதியில் பறவையின் பெயரில் புதுப் பிரச்னை றெக்கைகட்டி வந்தது. மேஜிக்மேனாக வரும் விஜய் பயன்படுத்தும் ஒரு புறா காட்சியையொட்டி விலங்குகள் நல வாரியம் எதிர்ப்புத் தெரிவித்தது. 'புறா காட்சி' கிராபிக்ஸ்தான் என்று மெர்சல் குழு தெரிவித்தாலும் அதை ஏற்கவில்லை விலங்குகள் நல வாரியம்.

படத்தில் இடம்பெறும் பாம்பு ராஜநாகம் என்பதற்குப் பதிலாக நாகப்பாம்பு என்று குறிப்பிடப்பட்டு இருந்ததையொட்டியும் வி.ந.வ   ஆட்சேபனை தெரிவித்தது. இதனால் சென்சார் போர்ட் படத்துக்கான சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைத்தது. இது விஜய் ரசிகர்களை பதற்றமடையச் செய்ய, நம்மிடம் பேசிய விஜய்க்கு நெருக்கமான நண்பரொருவர்  , "தமிழர் பெருமை பேசும் ஜல்லிக்கட்டு ஆதரவு மெரினா எழுச்சியில், தம் அடையாளத்தை மறைத்தபடி தேடிச் சென்று பங்கெடுத்தார் விஜய். ஒரு தமிழனா தனது உணர்வை வெளிக்காட்டினார் . அப்போது இருந்தே கடுப்பில் இருந்த பீட்டா அமைப்பு இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டது. அதுதான் புறா, ராஜநாகம் காரணத்தைக் கூறி பட ரிலீசுக்கு குடைச்சல் கொடுக்கின்றனர்" என்றார் வேதனை குரலில்.  

மெர்சல்

இந்தப் பரபரப்பான சூழலில் அக் 16-ம் தேதி, டெல்லியில் இருந்து  விலங்குகள் நலவாரியத்தின் சிறப்பு அதிகாரிகள் குழுவினர், சென்னை வந்தனர்.  'சொன்னபடி தீபாவளிக்கு எப்படியும் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும்' என மெனக்கெட்ட  மெர்சல் குழுவினர் , 'கிராபிக்ஸ் காட்சிகளுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர். அதேநேரம் , சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்கள் பார்வையிட்டனர். வெளியே ரசிகர்கள் மட்டுமல்ல தயாரிப்புக் குழுவும் நகம் கடித்தபடியே இருக்க, இறுதியாக சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு கட் கொடுத்துவிட்டு மெர்சலுக்கு அனுமதி கொடுத்தனர்.  சென்சார் போர்டும் மெர்சலுக்கு U/A சான்றிதழை வழங்க ஒருவழியாக நிம்மதி அடைந்துள்ளனர் ரசிகர்களும், மெர்சல் குழுவினரும். முதல்நாளே, சமூக வலைதளங்களில் வழக்கம்போல டிக்கெட்டுக்களை படம் பிடித்து பதிவுகளாக போடத் தொடங்கிவிட்டனர். படமும் ரிலீசாகி ரசிகர்களின் ஆராவாரத்தைப் பெற, மெர்சல் கொண்டாட்டத்தில் இருந்த  விஜயின் மக்கள் இயக்கத்தினரிடம் பேசினோம். "தொடர்ந்து விஜய் படங்கள் வெளியாவதில் ஏற்படும் பிரச்னை குறித்து என்ன சொல்கிறீர்?" என்றோம். உணர்ச்சிபூர்வமாக பேசத்தொடங்கிய குருசரண் ,

மெர்சல் விஜய் ரசிகர்கள்

"எளிமையான, இனிமையான இரக்க குணமுள்ளவர் எங்க தளபதி விஜய். ரசிகர் மன்றமாக மட்டுமல்லாமல், இயக்கமாக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்து வர்றார். ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்குறது மட்டுமல்ல, பலரைப் படிக்க வைக்கவும் செய்றாரு. ஏழை, எளிய பெண்மணிகளுக்குத் தையல் மிஷின் வழங்குறது, இயலாதவர்களுக்கு மூணு சக்கர வண்டி வழங்கியதுன்னு நிறைய சொல்லிட்டே போகலாம். மக்கள் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் கருத்துத் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் உடனே அந்த இடத்தில் ஆஜராகி முடிந்ததைச் செய்கிறார். தங்கை அரியலூர் அனிதா தற்கொலையின்போது கூட உடனே அவர்கள் வீட்டுக்குத் தேடிச் சென்று ஆறுதல் அளித்தார். இந்த நற்குணத்தால் அவருக்குக் கிடைக்குற மதிப்பு, மரியாதை, மக்கள் செல்வாக்கை ஒருசிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மேலும், அவரோட  மாபெரும் வளர்ச்சியைப்  பொறுக்கமுடியாமலும்  அவருக்கு எதிரான வேலைகள் எப்பவும் நடந்துகிட்டு இருக்கு.  யார் எது சொன்னாலும்   எந்தத் தடையையும் தவிடுப்பொடியாக்கிவிடுவார் எங்க தளபதி." என்றார். மற்றொரு ரசிகரான கேசவன், "நான் சினிமாத்துறையில்தான் எடிட்டிங் பிரிவுல  இருக்கேன். அவரோட தீவிர ரசிகனா இருக்க, அவர் படம் மட்டுமல்ல அவரோட நல்ல குணங்களும் காரணம். எங்க துறையில 20- க்கும் மேற்பட்டப் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர் விஜய் சார். வேலை பாக்குறவங்கள மரியாதையோடு நடத்துவாரு. பந்தாக் காட்டமாட்டார். எந்த உதவினாலும் கேட்டா, அதுல உண்மை இருந்தா நிச்சயம் செய்வாரு. அவர் படம் ஓடுறதால சினிமாவ நம்பிய சின்னச் சின்ன ஆர்டிஸ்டுக்கும் உதவியா இருக்கு. ஈழத் தமிழர்கள் பிரச்னையப்போ தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தார்.  இப்படி பல நல்ல குணங்கள் அவர்கிட்ட இருக்கிறதாலதான் அவர் படத்துக்கு பிரச்னை வந்துகிட்டே இருக்கு. மெர்சல் ஆடியோ ரிலீசப்போ , யார் எதைச் சொன்னாலும் காதுல போட்டுக்காதிங்க. கத்தி கத்தி அவங்களே ஓஞ்சு போயிடுவாங்க. நீங்க உங்க வேளையில் மட்டும் கவனமா இருங்க' ன்னு விஜய் சார் பேசினார். அதைத்தான் அவர் பட ரிலீசுக்கு எதிரா வேலை பாக்குறவங்ககிட்டயும் கடைபிடிக்கிறோம்" என்றார் உணர்வுபூர்வமாக.

"சினிமாவில் மட்டுமல்ல மக்கள் பிரச்னைகளுக்காக நிஜத்திலும் இறங்கி குரல் கொடுப்பவர் எங்க தளபதி விஜய். இந்த மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்து அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதற்கான மெசேஜ் மெர்சலில் இருக்கு. அதுவே, அவரை எதிர்ப்பவர்களுக்கான  பதிலடி. எங்க பாதையில் இனி தெளிவாகப் பயணிப்போம் "  என்கின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சில இளம் நிர்வாகிகள். 

திரையரங்குகளை கடந்தும்  அல்லு சில்லு கெளப்பிக்கொண்டிருக்கிறான் மெர்சல் அரசன்.


டிரெண்டிங் @ விகடன்