டெங்கு மரணங்களில் மத்திய, மாநில அரசுகளின் முரண்பாடான புள்ளிவிவரங்கள்..! அலசும் மருத்துவர் | Dengue death details, sate, central government statistics differ, who tells truth?

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (19/10/2017)

கடைசி தொடர்பு:12:04 (19/10/2017)

டெங்கு மரணங்களில் மத்திய, மாநில அரசுகளின் முரண்பாடான புள்ளிவிவரங்கள்..! அலசும் மருத்துவர்

கொசு

மிழகத்தில், வேகமாகப் பரவி வரும் டெங்குக் காய்ச்சல் காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. கொத்துக் கொத்தாக மடியும் உயிர்களால், தமிழகமெங்கும் மரண ஓலம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில், ‘உயிரிழந்தவர்களின் உண்மையான விவரங்களைக்கூட வெளியிடாமல், அரசு நிகழ்ச்சிகளில் சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆளும் கட்சியினர்’ என கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'நாள்தோறும் 10 பேர் என்ற அளவில், இதுவரை 400 பேர் இறந்துள்ளனர்' என பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியிருக்கிறது. இப்போது கூட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துக்காட்டும் முயற்சியில், சுகாதாரத்துறை அமைச்சரும், செயலரும் ஈடுபட்டுள்ளனர்' என்று கூறியுள்ளார். அமைச்சர்களோ இந்தப் புகார்களை மறுத்துவந்தனர். இதற்கிடையில், கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன், “நடப்பாண்டில் 35 பேர் மட்டும் டெங்குக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளனர். மற்ற காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கம் காரணமாக 85 பேர் வரை இறந்துள்ளனர்'' என்று கூறியிருந்தார். 

தமிழக அரசு புள்ளி விவரம்

இந்த நிலையில், தற்போது தமிழக அரசு, டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த விவரப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அரசு சொல்லும் புள்ளி விவரம்....

2012-ல் டெங்கு  காய்ச்சலால் 13,204 பேர் பாதிக்கப்பட்டனர்; 66 பேர் உயிரிழந்தனர்.

2013-ல் 6,122 பேர் பாதிக்கப்பட்டனர்.

2014 ல் 2,804 பேர் பாதிக்கப்பட்டனர்; 3 பேர் உயிரிழந்தனர்.

2015-ல் 4,535 பேர் பாதிக்கப்பட்டனர்; 12 பேர் உயிரிழந்தனர். 

2016-ல் 2,531 பேர் பாதிக்கப்பட்டனர்; 5 பேர் உயிரிழந்தனர். 

2017-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை 11,744 பேர் பாதிக்கப்பட்டனர்; 44 பேர் உயிரிழந்தனர். - இவ்வாறு அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.

பிற காய்ச்சல்களால் ஏற்பட்ட பாதிப்பு விவரம்...

மலேரியா :

2012-ல் 18,869 பேர் பாதிக்கப்பட்டனர்.

2013-ல் 15,081 பேர் பாதிக்கப்பட்டனர்.

2014-ல்  8,729 பேர் பாதிக்கப்பட்டனர்.

2015-ல்  5,587 பேர் பாதிக்கப்பட்டனர்.

2016-ல் 4,341 பேர் பாதிக்கப்பட்டனர்.

டெங்கு காய்ச்சல்

2017-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை 3,524 பேர் பாதிக்கப்பட்டனர். - என்கிறது இந்தப் புள்ளிவிவரம். மேலும், கடந்த 6 ஆண்டுகளாக மலேரியா காய்ச்சலினால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது. 

சிக்குன் குனியா :

2012-ம் ஆண்டு 514 பேர் பாதிக்கப்பட்டனர்.

2013-ம் ஆண்டு 559 பேர் பாதிக்கப்பட்டனர்.

2014-ம் ஆண்டு 543 பேர் பாதிக்கப்பட்டனர்.

2015-ம் ஆண்டு 329 பேர் பாதிக்கப்பட்டனர்.

2016-ம் ஆண்டு 86 பேர் பாதிக்கப்பட்டனர்.

2017-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை 85 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் :

2012-ம் ஆண்டு 33 பேர் பாதிக்கப்பட்டனர். 5 பேர் பலியானார்கள்.

2013-ம் ஆண்டு 33 பேர் பாதிக்கப்பட்டனர்.

2014-ம் ஆண்டு 36 பேர் பாதிக்கப்பட்டனர். 3 பேர் உயிரிழந்தனர்.

2015-ம் ஆண்டு 53 பேர் பாதிக்கப்பட்டனர்.

2016-ம் ஆண்டு 51 பேர் பாதிக்கப்பட்டனர்.

2017-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை 64 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதுதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக முழுமையான புள்ளி விவரம்...

இந்தியா முழுவதும் 2010 -ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை  1,438 பேர் டெங்குக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், கேரளாவில்  கடந்த  ஐந்தாண்டுகளில் 155 பேர் இறந்துள்ளதாக அந்தப் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில், 41 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் மொத்தம் 122 பேர் டெங்குக் காய்ச்சல் காரணமாக  மரணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.  

சுகாதாரத்துறை  அமைச்சக   புள்ளிவிவரம்

வருட வாரியாக தமிழகத்தில் டெங்கு பாதிப்பின் விவரம் :

2010 -ல் 2,051 பேர் பாதிக்கப்பட்டனர்; 8 பேர்  உயிரிழந்தனர்.

2011 -ல்  2,501 பேர் பாதிக்கப்பட்டனர்; 9 பேர் உயிரிழந்தனர்.

2012 -ல் 12,826 பேர் பாதிக்கப்பட்டனர்; 66 பேர்  உயிரிழந்தனர்.

2013 -ல்  6,122 பேர் பாதிக்கப்பட்டனர்; உயிரிழப்பு ஏதும் இல்லை.

2014 -ல்  2,804 பேர் பாதிக்கப்பட்டனர்; 3 பேர்  உயிரிழந்தனர்.

2015 -ல் 4,535 பேர் பாதிக்கப்பட்டனர்; 12 பேர் உயிரிழந்தனர்.

2016 -ல் 2,531 பேர் பாதிக்கப்பட்டனர்; 15 பேர்  உயிரிழந்தனர். 

நடப்பாண்டில் 11,552 பேர் பாதிக்கப்பட்டனர். 18  பேர் இறந்துள்ளனர். - இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. 

நடப்பாண்டில் கேரளாவில் 18 ஆயிரத்து 272 பேரும், கர்நாடகாவில் 13 ஆயிரத்து 16 பேரும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், கேரளா முதலாவது இடத்திலும், கர்நாடகம் இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

கவலை தெரிவித்துள்ள உலக சுகாதாரத்துறைஅமைப்பு :

இப்படி மத்திய அரசு ஒரு புள்ளி விவரத்தையும், மாநில அரசு ஒரு புள்ளி விவரத்தையும் வெளியிட்டு முன்னுக்குப் பின் முரணான செய்திகளை அளித்துவருகிறது. அரசுத் தரப்பில், வெளியாகும் இந்தப் புள்ளி விவரம் உண்மையானதுதானா... நம்பத்தகுந்ததா... என சமூக டாக்டர் ரவீந்திரநாத்சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசியபோது, “மத்திய -மாநில அரசுகள் வழங்கி வரும் புள்ளி விவரங்கள் உண்மையானது இல்லை. டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில், அரசு வெளிப்படைத் தன்மை இல்லாமல் முரண்பட்ட தகவலை வழங்கிவருகிறது. காய்ச்சல் காரணமாக இறந்துபோனவர்களின் புள்ளி விவரங்களைத் திரட்டும் முழுமையான வசதியை மாநில சுகாதாரத்துறை ஏற்படுத்தவில்லை. அதேபோன்று டெங்குக் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் பாதிப்பு மற்றும் இறப்பு விவரத்தை சரிவர தெரிவிப்பதில்லை. அப்படியே தெரிவித்தாலும் அதை தமிழக சுகாதாரத்துறை தனது புள்ளிவிவரத்தில் சேர்த்துக்கொள்வதில்லை. 

குறிப்பாக இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. மக்களை திருப்திபடுத்தவே இப்படியான புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. நோய் இறப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்துப் பேசும் உலக சுகாதார அமைப்பு, 'பல நாடுகள் உண்மை விவரங்களை வெளியிடுவதில்லை' என்று கவலை தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவும் இடம் பெறும்" என்றார். 

கடந்த 10 -ம் தேதி மட்டும் தமிழகத்தில் ஒன்பது பேர் டெங்குக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்றால், கடந்த 10 மாதங்களில் 44 பேர் இறந்துள்ளதாகச் சொல்லியுள்ள புள்ளி விவரம் உண்மைதானா சுகாதாரத்துறை அமைச்சரே?


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close