“ஜெயலலிதாவுக்குப் பயந்தவர்கள் பா.ஜ.க-வை விமர்சிக்கிறார்கள்!” - 'மெர்சல்' தமிழிசை

மெர்சல் திரைப்படம்

ண்மைகாலமாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளைத் தமிழ்த்திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் கமல் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து ‘மெர்சல்’ மூலம் நடிகர் விஜய்யும் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிடத் தொடங்கிவிட்டார்.

அந்தத் திரைப்படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பற்றியும் கேலி செய்து வசனம் பேசியுள்ளார். ஜி.எஸ்.டி வரி விதிப்புமுறை குறித்து ஏற்கெனவே கமல் உள்ளிட்ட நடிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மெர்சல் திரைப்படத்திலும் எதிர்ப்பு வசனங்களை வைத்திருப்பது அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்துள்ளது. மத்திய அரசு மீதான விஜய்யின் இந்த எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து பி.ஜே.பி தரப்பில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பேசியபோது, ‘விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் உண்மைத்தன்மையை மறைத்து மக்கள் மனதில் மாற்றுக்கருத்துகளைப் பதிய வைக்கக் கூடாது.

போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது. அவ்வாறு நீங்கள் சொல்கிற அனைத்துக் கருத்தையும் ஏற்றுக்கொண்டு பி.ஜே.பி அமைதி காக்கும் என்றும் நினைக்க வேண்டாம். இவர்கள் ஒன்றும் நேற்றோ, இன்றோ அறிமுகமானவர்கள் அல்ல. 50 ஆண்டுகாலமாகக் களத்தில் இருக்கக் கூடியவர்கள். பல ஊழல்களையும் மிகப் பெரிய மக்கள் பிரச்னைகளையும் இந்த நாடு சந்தித்துள்ளது. அப்போது எல்லாம் கருத்துச் சொல்லாதவர்கள். தற்போது பி.ஜே.பி-யைக் குறைசொல்லி விளம்பரம் தேட முயற்சி செய்கிறார்கள். அதுதான் உண்மை. மத்திய அரசு கொடுங்கோல் ஆட்சி செய்வது போன்றதொரு நிலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்படித் தவறான கருத்துகளை மக்கள் மனதில் பதிவு செய்வதற்கு பி.ஜே.பி என்றும் அனுமதிக்காது” என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். 

தமிழிசை சவுந்திர ராஜன்

“மத்திய அரசின் நிறை, குறைகளைப்பற்றி சுட்டிக் காட்டுவதற்கு உரிமை இல்லையா? இதுதானே கருத்துச் சுதந்திரம்?’’

‘‘ ‘விஸ்வரூபம்’ படத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு உரிமையில்லையா? சோனியா காந்தி குறித்து தவறான கருத்தை வெளியிட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் போராட்டம் நடத்தவில்லையா? இதில் எல்லாம் எங்கே போனது கருத்துச் சுதந்திரம்?

இந்தநாட்டை சரியான பாதையில் வழி நடத்த வேண்டும் என்பதற்காக திட்டங்களைச் செயல்படுத்தும் போது தவறான கருத்துகளைச் சொல்லி அந்தத் திட்டத்தைச் சிதைக்கும் செயலை அனுமதிக்க முடியாது.’’

‘‘ஜி.எஸ்.டி குறித்து திரையுலகில் உள்ளவர்கள் மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சாமான்யர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதற்கு உங்கள் பதில் என்ன?’’

‘‘ஏழு வரிகளையும் உள்ளடக்கிய வரி விதிப்பு முறைதான் ஜி.எஸ்.டி அதில் வீட்டு உபயோகப் பொருள்களுக்கு ஜீரோ வரி விதிக்கப்பட்டுள்ளது. பொத்தாம் பொதுவாகத் தவறான கருத்துகளைச் சொல்லிவிட்டுப் போகக் கூடாது என்றுதான் சொல்கிறோம். ஜி.எஸ்.டி மக்களுக்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பது குறித்துப் புரியவைக்கும் பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் திரைப்படத்தில் இவ்வாறான வசனங்கள் வந்தால் மக்கள் மனதில் விஜய் சொல்லும் வசனங்கள் இடம் பெறும். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.’’

விஜய்

‘‘கமல், விஜய் மட்டும் மத்திய அரசை எதிர்த்துப் பேசவில்லை பெரும்பாலான நடிகர்கள், இயக்குநர்கள் மத்திய அரசை எதிர்க்கிறார்களே?’’

‘‘உண்மையில் சமூக அக்கரையோடு செயல்படுகிறார்கள் என்றால் ஜெயலலிதா இருந்தபோது எத்தனையோ முறைகேடுகள் தமிழகத்தில் நடந்தன. அதையெல்லாம் பேசாதவர்கள் தற்போது ஏன் பேசுகிறார்கள்? மத்திய அரசை எதிர்த்துப் பேசினால் தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக இவ்வாறு பேசுகின்றனர்” 

“அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதில் சொல்லாத பி.ஜே.பி, நடிகர்களைக் கண்டு பயப்படுகிறதா?’’

‘‘நிச்சயமாக இல்லை. தவறான கருத்துகளை அவர்கள் சொல்லும்போது அதைச் சுட்டிக்காட்டுகிறோம். எதிர்மறைக் கருத்துகளை மக்கள் மனதில் பதியவைக்க வேண்டாம் என பதில் தருகிறோம். திரைப்படங்கள் வாயிலாக வரும் வசனங்கள் மக்கள் மனதில் அப்படியே பதிந்துவிடும் என்ற காரணத்தினாலேயே ஆழமாக அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!