வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (20/10/2017)

கடைசி தொடர்பு:12:00 (21/10/2017)

"கருணாநிதி சிரித்தார்..!" முரசொலி அலுவலக வருகை சுவாரஸ்யங்கள்

'நான் பெற்ற முதல் குழந்தை!’ தி.மு.க தலைவர் கருணாநிதி 1942ல் தனது 18 வது வயதில் முதன்முதலில் வெளியிட்ட அரசியல் ஏடான ‘முரசொலியை’ அவர் இவ்வாறுதான் வர்ணிப்பார். இது முரசொலியின் பவள விழா ஆண்டு. தான் ஆட்சியில் இல்லாத காலகட்டங்களில் ஒருநாள் கூட முரசொலி அலுவலகம் வருவதைத் தவிர்த்திராத கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தபோதும் வாரம் ஒருமுறையாவது முரசொலி அலுவலகத்திற்கு விசிட் செய்துவிடுவார். ’ஓய்வும் சலிப்பும் தற்கொலைக்குச் சமம்’ என்னும் பெரியாரின் வார்த்தைக்கு ஏற்ப இத்தனை ஆண்டுகால ஓட்டத்திலும் ஓய்வின்றியும் சலிப்பின்றியும் முழுதுமாய் இயக்கத்திலேயே இருந்தவர் கருணாநிதி.

இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குப்பின்னர் தற்போது சென்னை கோபாலபுரத்திலுள்ள தனது இல்லத்திலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கடந்த பத்து மாதங்களாக கோபாலபுரம் இல்லத்தை விட்டு வெளியே செல்வதும் முழுவதுமாகக் குறைந்திருந்தது. இதற்கிடையே மு.க.தமிழரசுவின் பேரனைப் பார்த்து கருணாநிதி சிரிக்கும் ஒரு வீடியோ வாட்சப்பில் பகிரப்பட்டு அண்மையில் வைரலானது. 

முரசொலி பவளவிழா கருணாநிதி

இதற்கிடையே நேற்று சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்திற்கு கருணாநிதி சென்று வந்த செய்தி கட்சித் தரப்பினரிடையே பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. பத்து மாதகாலமாக ஓய்வில் இருந்தவர் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டார் என்று கட்சித் தரப்பு வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஆங்காங்கே செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் பிறந்தது. இதுகுறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்தார் தி.மு.கவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரசன்னா. 

பிரசன்னா“ பலமாதங்கள்  கழித்து தனது முதல் குழந்தையைப் பார்க்க வந்த கலைஞர் அவரே குழந்தையாக மாறிவந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பவளவிழாவை அடுத்து முரசொலி அலுவலகம் வரவேண்டும் என்கிற எண்ணம் கலைஞருக்கு இருந்தது. இதையடுத்து முரசொலி அலுவலகம் செல்லலாம் என்று நேற்று சைகை காட்டியதும் ஸ்டாலின் மற்றும் செல்வி எனத் தனது பிள்ளைகள் இருவருடன் டாக்டர். கோபால், துரைமுருகன் மற்றும் எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் புடைசூழ மாலை 6:45க்குக் கோபாலபுரம் இல்லத்திலிருந்து கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்திற்குப் புறப்பட்டார். 7 மணிக்கு முரசொலி அலுவலகத்தை வந்தடைந்தவருக்கு ஏற்கெனவே ஸ்டாலின் திட்டமிட்டிருந்தபடி பவளவிழா நுழைவு வாயிலிலிருந்து அனைத்தையும் சுற்றிக் காண்பிக்கத் தொடங்கினார் ஸ்டாலின்.

முரசொலியைக் கையால் அச்சிடத் தொடங்கிய இடம் மற்றும் அங்கே இருக்கும் ‘முரசொலி’ மாறன் சிலையை முதலில் பார்வையிட்டவர், மாறனின் சிலையை நீண்டநேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். பிறகு சட்டபேரவையில் முரசொலி ஆசிரியர் கூண்டிலேற்றப்பட்ட நிகழ்வைக்காட்டும் மாதிரி வடிவம். முரசொலி கட்டடம் இடிக்கப்பட்டது தொடர்பான மாதிரி உள்ளிட்ட காட்சிகளைப் பார்வையிட்டார். பிறகு முரசொலிக் கட்டடத்தில் இருக்கும் பயாஸ்கோப் அறையில் ‘முரசொலி’ ஏடு தொடர்பான காணொளியைப் பார்த்தவர் அந்தக் காணொளி எடுக்கப்பட்ட விதத்தை வெகுவாகப் பாராட்டினார். அதற்குப் பிறகுதான் சுவாரஸ்யமான பல விஷயங்கள் நிகழ்ந்தன” என்று மேலும் தொடர்ந்த பிரசன்னா, “இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு முரசொலி அலுவலக அறையில் தன்னைப் போன்றதொரு மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். அதையே பார்த்துக் கொண்டிருந்தவர், சட்டென புன்னகைத்துவிட்டு ‘எனக்கு எதற்கு சிலை?’ என்று சைகையால் கேட்டார். எம்.ஜி.ஆர் இறந்த சமயத்தில் கருணாநிதியின் சிலை தாக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதற்குப் பிறகு அவருக்கு எங்கும் சிலை நிறுவப்படவில்லை. மிக நீண்டகாலத்திற்குப் பிறகு வரலாற்றுச் சாட்சியமாய் நிறுவப்பட்டது அந்த மெழுகுச் சிலை. 

அதன்பிறகு ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த சிலையில் இருப்பது போலவே கையில் பேனாவையும் லெட்டர் பேடையும் வாங்கிக் கொண்டவர், தனது கையெழுத்தை அதில் இட்டார். இவை அத்தனையும் சுமார் அரை மணி நேரம் நிகழ்ந்திருக்கும். நிகழ்வை முடித்துவிட்டு வெளியே வந்து காரில் ஏறிப் புறப்பட்டு வீடு வந்தவரை கட்சியைச் சேர்ந்த அனைவரும் வரவேற்கக் காத்திருந்தார்கள். மக்கள் அனைவரையும் பார்த்ததும் இயல்பாகவே முகத்தில் சிரிப்பு தோன்ற மூன்று விரல்கள் மேல்நோக்கியும் சுட்டுவிரலும் கட்டைவிரலும் கீழ்நோக்கியுமாக தான் தொண்டர்களைப் பார்த்து எப்போதும் கையசைப்பது போலவே கையசைத்து விட்டுச் சென்றார்.  ஸ்டாலினைப் பற்றி விமர்சனம் செய்தவர்களுக்குத் தந்தைக்கு மகன் ஆற்றும் கடனாக அவர் நோய்வாய்பட்டது முதல் இன்றுவரை உடனிருந்து பார்த்துக்கொள்வதுதான் தக்க பதில். ஸ்டாலினிடம் தந்தை தனயனாக மாறினார் என்றே சொல்லவேண்டும்” என்று கூறிமுடித்தார்.

”மருத்துவர் ஒருவாரத்திற்குள் இன்னும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயங்கள் நடக்கும் என்றாரே?” என்று வினவியதற்கு, “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!..” என்று தொடங்கும் அந்த கரகரப்பான ஒற்றைக் குரல் அன்றி மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக வேறு என்ன இருந்துவிடப் போகிறது” என முடித்தார் பிரசன்னா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்