சர்ச்சை வசனங்கள் நீக்கப்படுமா? - அனல் கிளப்பும் 'மெர்சல்' அரசியல்

 

விஜய்

டைகளைத் தாண்டி 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளியன்று தமிழகத்தில் வெளியானது. அந்தப்படம்தான் தற்போது அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. அந்தத் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப்பற்றியும் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ள காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

''7 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூர், மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தர்றப்போ, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியலை? மெடிக்கலுக்கு 12 பெர்சன்டாம்... ஆனா தாய்மாருங்க தாலிய அறுக்கிற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாது. ஜனங்க நோயைப் பார்த்து பயப்படுறதைவிட, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பார்த்து பயப்படுறதுதான் அதிகம். அந்த பயம்தான்... பிரைவேட் ஹாஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்ட்மென்ட்!'' என்று படத்தில் விஜய் பேசுகிற வசனங்களுக்குத் திரையரங்குகளில் பலத்த கைத்தட்டல்கள் கிடைக்கின்றன. ஆனால், அனலைக் கிளப்பும் இந்த வசனத்துக்கு எதிர்ப்பாக   பி.ஜே.பி போர்க்கொடி தூக்கியுள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''நடிகர்கள் கமல், விஜய் அரசியலுக்கு  வரட்டும். ஆனால், பொய்யானக் குற்றச்சாட்டை திரைப்படங்கள் வாயிலாகத் தெரிவித்து மத்திய அரசுமீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார். பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசுகையில், ''விஜய் முறையான விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பாரா? அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு? அதற்கு முறையாக வரி கட்டுகிறாரா? என்பதையெல்லாம் விஜய் தெரிவிக்க வேண்டும். விளம்பரத்துக்காக இவ்வாறு பொய்யான கருத்துகளை மக்கள் மனதில் பதியவைக்க வேண்டாம்'' எனக் கூறியுள்ளார். 

கமல் டிவிட்

கருத்துச் சுதந்திரத்துக்குக் குண்டு?

இதேபோன்று 'மெர்சல்' திரைப்படத்தில், மருத்துவத்துறையை அவமதிக்கும் கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவற்றையும் நீக்கவேண்டும் என்றும் மருத்துவர் சங்கம் ஆவேசமாகியுள்ளது. இப்படிப் பலவித எதிர்ப்புகள் இருந்துவரும் நிலையிலும், மெர்சல் படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கிவிட மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கு எதிர்வினையாக, 'சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை நீக்க வேண்டாம்' என்று அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் பதில் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல் பதிவிட்டுள்ள டிவிட்டரில் 'மெர்சல் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. படத்தை மறுபடியும் தணிக்கை செய்யவேண்டாம். எதிர் விமர்சனம் தர்க்க ரீதியான விமர்சனமாக இருக்க வேண்டும். விமர்சிப்பவர்கள் வாயை அடைக்காதீர்கள். வெளிப்படையாகப் பேசும்போதுதான் இந்தியா ஒளிரும்' என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ''பட அதிபர்கள் இனி அரசைப் பாராட்டி டாக்கு மென்ட்ரி எடுக்கலாம்" என்று தமது டிவிட் பதிவில் கருத்துத்தெரிவித்துள்ளார். 

சிதம்பரம் டிவிட்

'தற்போது பராசக்தி படம் வெளியாகியிருந்தால், அனுமதிப்பார்களா? என்ன நிலை ஆகியிருக்கும். மற்றொரு பதிவில் கூறியுள்ளார்  சிதம்பரம். கருத்துச் சுதந்திரத்துக்கு பி.ஜே.பி குண்டு வைத்துள்ளது' என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். கருத்து  தெரிவித்துள்ளார் 

ஜி.எஸ்.டி குறித்து தவறாக இல்லை... 

இப்படி மெர்சல் படத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் வலுத்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளன. உண்மையில் அந்தக் காட்சிகள் சர்ச்சைக்குரிய காட்சிகள்தானா ? அப்படியானால், இந்தப் படம் தணிக்கை செய்யப்படும்போது என்ன தவறு நேர்ந்தது? என்ற நமது சந்தேகங்களைத் தணிக்கைக் குழுவின் மண்டல அதிகாரி மதியழகனிடம் கேட்டோம். 

விஜய்  மெர்சல்

"மெர்சல்  படத்தில் வருகிற வசனங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தரமான கமிட்டி கூடிதான் அந்தப் படத்தை தணிக்கை செய்துள்ளது. படம் முழுவதையும் பார்த்துவிட்டு அதன் பின்னர் ஆலோசித்துதான் அனுமதி வழங்கப்பட்டது. அந்தப் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து விஜய் பேசியுள்ள வசனம் தவறாகவோ அல்லது பாதிப்பை ஏற்படுத்துகிற நிலையிலோ இல்லை என்றுதான் கமிட்டி எண்ணியது. இந்த நிலையில், அந்தப்படம்  சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தின்படி அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து காட்சிகள் நீக்கம் மற்றும் அழித்தல் கோரி விண்ணப்பம் வந்தால், அதைத் தணிக்கை குழு ஏற்று நடவடிக்கை எடுக்கும்'' என்றார். 

இந்த நிலையில் மெர்சல் படத்திலிருந்து  நான்கு காட்சிகளை நீக்க  தயாரிப்பாளர்கள் தரப்பில் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கக் கோரும் கடிதம், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தணிக்கை குழுவிடம் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளியைத் தொடர்பு கொண்டு பேச  முயற்சி செய்தோம். 'சில மணி நேரம் கழித்து அழைக்கவும்' என்ற குறுஞ்செய்தி மட்டும் அவரிடமிருந்து பதிலாக நமக்கு வந்துசேர்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!