வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (23/10/2017)

கடைசி தொடர்பு:10:47 (23/10/2017)

‘சாதியால் சாதிப்போம்!’ குஜராத் தேர்தலுக்கு ராகுல் வியூகம்

Modi

குஜராத் மாநிலத்துக்கு எந்தத் தேதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. ஆனால், டிசம்பர் 18-க்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து சர்ச்சையில் சிக்கியது.

பி.ஜே.பி பயந்து விட்டதா?  

குஜராத் மாநிலத்துக்கு பிரதமர் மோடி சலுகைகள் அறிவிப்பதற்காகவே தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டினர். இதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில நாள்களில் மூன்றாவது முறையாக குஜராத் பக்கம் மோடி எட்டிப் பார்த்திருக்கிறார். எதிர்பார்த்தபடி சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

மத்திய அரசு நினைத்தால் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தையும் மேலாதிக்கம் செய்ய முடியும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று மோடி திட்டமிட்டதில் இருந்தே குஜராத் மக்கள் எந்த நேரமும் காலை வாரி விடக் கூடும் என்று பி.ஜே.பி பயந்து விட்டதைத்தான் காட்டுகிறது. அதனால்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், குஜராத் மக்களை கவர்ந்துவிட வேண்டும் என்று பி.ஜே.பி திட்டமிடுகிறது. வேறு எந்த மாநிலத்தில் தோற்றாலும் பரவாயில்லை.பிரதமரின் சொந்த மாநிலத்தில் தோற்றுவிடக் கூடாது என்பதில் அமித்ஷா உள்ளிட்டோர் மிகுந்த அக்கறையுடன் இருக்கின்றனர்.

மோடி-அமித்ஷா

மோடி மூன்றாவது முறையாக குஜராத்தில் பயணம் மேற்கொண்டது மட்டுமின்றி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். மோடிக்கு அடுத்து பி.ஜே.பி-யின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் யோகி குஜராத் தேர்தலில் வாக்குகளைக் குவிக்க உதவுவார் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

ராகுல், அகமது படேல் கூட்டு முயற்சி

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, மோடியின் பூமியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் உறுதியாக இருக்கின்றனர். குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு அகமது படேல் போட்டியிட்டபோது, அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பி.ஜே.பி விலைக்கு வாங்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ராஜ்ய சபா தேர்தல் வரலாற்றிலேயே குஜராத் மாநிலத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தல்தான் பரப்பப்புடன் நடைபெற்றது. பி.ஜே.பி-யின் சூழ்ச்சியை மீறி அகமது படேல் வெற்றி பெற்றுவிட்டார்.

தாம் வென்றது முக்கியம் இல்லை. குஜராத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இழந்த காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் அகமது படேலும், ராகுலும் தீவிரமாக இருக்கின்றனர்.  இதனால், இதுவரை இரண்டு முறை குஜராத்தில் பிரசாரத்தை ராகுல் நடத்திவிட்டார்.

ராகுல்

சாதித் தலைவர்கள் ஒருங்கிணைப்பு  

காங்கிரஸ் தரப்பில் பி.ஜே.பி-க்கு எதிரானவர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் குஜராத் மாநிலத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் பாட்டீல் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் ஹர்திக் பாட்டீல், பி.ஜே.பி-க்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்வது என்று முடிவு செய்துள்ளார். அவர் காங்கிரஸ் சின்னத்தில் தேர்தலில் நிற்கக் கூடும் என்று தகவல் வெளியானது. ஆனால், இதை மறுத்துள்ள ஹர்திக், பி.ஜே.பி-க்கு எதிரான வாக்குகள் பிரியக் கூடாது என்பது உண்மைதான். ஆனால், நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. அதே நேரத்தில் பி.ஜே.பிக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார். எனவே, காங்கிரஸ் ஓரளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கிறது. முதல் கட்டமாக கோத்ராவில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் ஹர்த்திக், பி.ஜே.பி-க்கு எதிரான தமது பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார். 

தலித் தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான ஜிக்னேஸ் மேவானி என்பவரையும், இதரப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அல்பேஸ் தாக்கூர் என்பவரையும் காங்கிரஸ் கட்சி வளைத்துப் போட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடஉள்ளனர். 

பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு அலை?

காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா பி.ஜே.பி-க்கு சென்றதில் இருந்து குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். எப்படியும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தி விடுவது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மூத்த தலைவர் என்று அழைத்துக் கொண்ட சங்கர் சிங் வகேலா, இதுவரை குஜராத்தில் காங்கிரஸ் தரப்பில் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருந்தார். இப்போது அந்தத் தடை நீங்கிவிட்டதாகவே கருதுகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் சாதித் தலைவர்கள் மூவரும் இளைஞர்கள்தான். அவர்களை காங்கிரஸ் கட்சியின் இளம் நிர்வாகிகள்தான் பேசி அழைத்து வந்திருக்கின்றனர் என்று சொல்கிறார்கள்.

இதுதவிர பி.ஜே.பிக்கு எதிரான மக்கள் மனநிலையும் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. இந்தியாவில் வணிகர்கள் நிறைந்த மாநிலங்களில் ஒன்று குஜராத். ஜி.எஸ்.டி வரி விதிப்பால், குஜராத் வணிகர்கள் பி.ஜே.பி-க்கு எதிராகவே இருக்கின்றனர். அண்மையில் குஜராத் வணிகர்கள் சூரத் நகரில் நடத்தியப் பொதுக்கூட்டத்தில், “தாமரையை தேர்ந்தெடுத்து நாங்கள் தவறிழைத்து விட்டோம்” என்று சொல்லி இருக்கின்றனர். பி.ஜே.பி எதிர்ப்பு ஓட்டுகள் எல்லாம் தங்களுக்கு கிடைக்கும் என்பதில் காங்கிரஸ் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் 15-வது சட்டப்பேரவையில் ஆளும் கட்சி வரிசையில் உட்கார எந்த கட்சிக்கு மக்கள் வாய்ப்பு அளிப்பார்கள் என்பது தேசிய அளவிலான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்