வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (23/10/2017)

கடைசி தொடர்பு:17:34 (23/10/2017)

“டெங்குவின் தொடர் பலிகள் கூட உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா?!’’ தமிழக அரசுக்கு ஒரு கேள்வி

டெங்கு

மிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பாதிப்பால், கடந்த இரண்டு நாள்களில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 'இப்படி கொத்துக்கொத்தாக மக்கள் மடியக் காரணம், உள்ளாட்சி அமைப்புகளில் போதிய சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படாததே' என கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். "இந்திய ஜனநாயகம் என்பது மத்தியில் அமர்ந்திருக்கும் 20 பேரால் கட்டமைக்கப்படுவது அல்ல; கிராமப் பஞ்சாயத்துகளைக் கட்டமைப்பதில் இருந்தே தொடங்குகிறது'' என்றார் மகாத்மா காந்தி. அப்படிப்பட்ட ஜனநாயகத்தின் வேர்களாக இருக்கக்கூடிய உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளை பலப்படுத்தாமல் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது  என்பதே சமூக ஆர்வலர்களின் வாதமாக உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததே டெங்கு பலிக்குக் காரணம்? 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட அரசாணையில், 'உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான பட்டியலில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை' என்று கூறி, உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தலை ஒத்திவைத்ததோடு, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. எனினும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதே தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து உயிரிழப்புகள் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவிக்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சி.வ. இளங்கோ.

"உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 4,000 கோடி ரூபாய் நிதி தர வேண்டும். ஆனால், முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதன் காரணமாக, மத்திய நிதி ஆணையம் நிதி வழங்கப் பரிந்துரை செய்தபோதிலும் மத்திய அரசு இத்தொகையைத் தர மறுக்கிறது. பதவியைக் காப்பாற்றுவதற்காகப் பலமுறை டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைக் கோராமல் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. பல மாநகராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. 

மாநிலத் தேர்தல் ஆணையம்

கோவை மாநகராட்சிக்கு வர வேண்டிய 60 கோடி ரூபாய் இதுவரை கிடைக்கவில்லை. இதனால், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 500 துப்பரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் தடுமாறிக் கொண்டுள்ளது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், துப்புரவுப் பணியாளர்களின் பற்றாக்குறையால் துர்நாற்றத்துடன் காணப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான குழப்பத்தால், ஏற்கெனவே உள்ளாட்சி நிர்வாகத்தில் இருப்பில் இருந்த பணத்தை அதன் நிர்வாகிகள் வாரி இரைத்துவிட்டனர். தமிழகத்தின் பல்வேறு உள்ளாட்சி  அமைப்புகளின் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.  அதிகாரப்பகிர்வின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள், 29 துறைகளைக் கவனித்துக்கொள்ள இந்திய அரசியல் சாசனப் பிரிவு (243) வழிவகுக்கிறது. அப்படி இருக்கும்போது, சுகாதாரத்தைப் பேணிக்காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணியாகும். 

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், குப்பைகளை  அள்ளுவதற்கும், சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கும்கூடப் பணம் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இருந்திருந்தால், குறைந்தபட்ச பணிகளாவது நடந்திருக்கும். ஆனால், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள், கிராம மக்களோடு தொடர்பில்லாமல் உள்ளதால், பல கிராமங்களில் அடிப்படைப் பணிகள் கூட நடைபெறவில்லை. 48 பஞ்சாயத்துக்களுக்கு ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள அவலமும் நீடிக்கிறது. 

தமிழகத்தில் ஒரு கிராமத்துக்கு சுமார் 20 பேருக்கு டெங்குக் காய்ச்சல் அறிகுறி உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சிவ இளங்கோகிராமங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் லட்சக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தொடர்ந்து மக்கள் உயிரிழக்கும் சூழலைக் கண்டு கொஞ்சம் கூட  வருத்தமோ அல்லது வெட்கமோ இல்லாமல் உள்ளனர் ஆட்சியாளர்கள்.

டெங்குக் காய்ச்சல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமெனில் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தலை அறிவித்து, விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். இதன்மூலம் போர்க்கால அடிப்படையில்  சுகாதார நடவடிக்கைளை விரைவு படுத்தமுடியும். மற்றொன்று டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் மாநில அரசு வெளிப்படையாக தெரிவித்து, மத்திய அரசு மற்றும் உலக  சுகாதார நிறுவனத்திடம் உதவிகள் கேட்பது. இந்த இரண்டில் ஒன்றை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே டெங்கு பாதிப்பில் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க முடியும்" என்றார். 

பதவிச் சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு பறிபோகும் உயிர்களைக்  காப்பாற்றுவார்களா ஆட்சியாளர்கள்?! 


டிரெண்டிங் @ விகடன்