வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (24/10/2017)

கடைசி தொடர்பு:09:49 (24/10/2017)

“தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வர அவர்கள் யாரும் தேவையில்லை!” - தமிழிசை சௌந்தரராஜன் 

மெர்சல்

'நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் அரசியலுக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு சேவை செய்யவரும் அனைவரையும் வரவேற்போம். ஆனால், திரைப்படத்தின் கவர்ச்சி மட்டும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மூலதனமாக இருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். அவர், இப்படிக் கருத்து தெரிவித்த சில நாள்களுக்குள்ளாகவே தற்போது நடிகர் விஜய் மற்றும் பி.ஜே.பி-யை இணைத்து பரபரப்பான செய்தி ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளார்.

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம், தீபாவளி தினத்தன்று வெளியானது. இந்தப் படம் தமிழக அரசியல் அரங்கில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் விஜய் பேசியிருக்கும் ஜி.எஸ்.டி. குறித்த வசனமே பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் காரணமாக அமைந்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரி முறையை விமர்சனம் செய்து விஜய் அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் பேசியிருப்பார். ஜி.எஸ்.டி. வரி விதிப்புமுறை குறித்து ஏற்கெனவே கமல் உள்ளிட்ட நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், 'மெர்சல்' திரைப்படத்திலும் இந்த வரிமுறைக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருப்பது அரசியல் களத்தை அதிரச் செய்துள்ளது. இதற்கு பி.ஜே.பி சார்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

விஜய்

பி.ஜே.பி-யின் கண்டனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விஜய்-க்கு ஆதரவாகவும் பல தரப்பிலும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. நடிகர்கள் கமல், ரஜினி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

திருமாவளவன் "தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. டெங்குவால் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது வேதனை அளிக்கிறது. டெங்கு குறித்து ஆய்வு நடத்த தமிழகம் வந்த மத்தியக் குழுவினர் இதுவரை எந்த அறிக்கையையும் அளிக்கவில்லை. டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிவிட்ட மத்திய-மாநில அரசுகள், அந்தப் பிரச்னையை திசைதிருப்புவதற்காகவே  தற்போது 'மெர்சல்' பட சர்ச்சையை கையில் எடுத்துள்ளன.

இதைவிட அரசியலை விமர்சித்த படங்களைப் பற்றிக் கண்டுகொள்ளாதவர்கள், தற்போது மெர்சல் படம் குறித்து விமர்சிப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. தணிக்கை செய்யப்பட்டே இப்படம் வெளியாகியுள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்று மறைமுக ஆதரவைத் தருகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களை வளைத்துப் போட்டு, அவர்கள் மூலமாக தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது" என்றார் திருமாவளவன். 

அவரின் இந்தக் கருத்து பற்றி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “ ‘நடிகர்களை வளைத்துப் போட பி.ஜே.பி.  பொன் ராதாகிருஷ்ணன் முயற்சிக்கிறது' என்று அண்ணன் திருமாவளவன் பேசியதாகக் கேள்விப்பட்டேன். திருமாவளவனும் திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் அவரையும்கூட பி.ஜே.பி-யில் வளைத்துப்போட நான் முயற்சிக்கிறேன் என்பதே அவருக்கு என்னுடைய பதில். யாருடனும் பகையை வளர்க்க பி.ஜே.பி. விரும்பவில்லை. எங்களுடைய கொள்கையும் அதுவல்ல. மெர்சல் திரைப்பட விவகாரத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட யார் மீதும் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்பு ஏதும் கிடையாது. எந்தக் காரணத்துக்காகவும் யாரையும் ஒழிக்கவேண்டும் என்றோ அல்லது அதட்டிவைக்க வேண்டும் என்றோ பி.ஜே.பி. எண்ணியது கிடையாது" என்றார்.

இதுகுறித்து பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் பேசியபோது, "சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தவறான கருத்துகளை பதிய வைக்கக்கூடாது என்று தணிக்கைக் குழுவின் விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு படத்தை முறையாகத் தணிக்கை செய்திருந்தால் குறிப்பிட்ட அந்தக் காட்சி இடம்பெற்றிருக்காது. சில காட்சிகள் மூலம் மக்கள் மனதில் தவறான கருத்துகள் பதியப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் மெர்சல் படத்தில் வரும் வசனங்களை எதிர்க்கிறேன். இது யதார்த்தமான ஒன்றுதான். என்னுடைய எதிர்ப்பைச் சுட்டிக்காட்டி, பலரும் எவ்வளவு ட்வீட் செய்ய முடியுமோ, அவ்வளவு ட்வீட் செய்கிறார்கள். இதுபோன்று ஆளாளுக்கு ஓர் திரைக்கதை, வசனம் எழுதினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. யார் வேண்டுமானாலும் எந்தவொரு திரைக்கதை, வசனத்தை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். ஜி.எஸ்.டி. போன்ற நல்லதொரு திட்டத்தின் உண்மைத்தன்மையை மறைத்து பொய்யான தகவலை அந்தப் படத்தில் சொல்லியிருப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அனைத்துப் பொருள்களுக்கும், அனைவரும் 28 சதவிகித வரி கட்டுவது போன்றும், இந்த நாட்டில் இலவச மருத்துவமே இல்லை என்பது போன்றும் அந்த வசனம் அமைந்துள்ளது. இது எந்தவகையில் நியாயம்? தமிழகத்தில் டயாலிசிஸ் சென்டர் குறைவாக இருப்பது தொடர்பாக நான் எழுதிய கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன் அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. என்னுடைய கருத்தில் யதார்த்தமான எதிர்ப்பு மட்டுமே உள்ளது. அதுபற்றி மற்றவர்களின் எதிர்விமர்சனங்களுக்கு நான் பதிலளிக்க முடியாது. உண்மைக்கு புறம்பான கருத்தை திருமாவளவன் சொன்னால், அதற்குப் பதில் சொல்ல முடியாது. எங்களின் நாயகர்களாக பிரதமர் மோடியும், பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷாவும் உள்ளனர். இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வரத்தான் போகிறது. நடிகர்களை பி.ஜே.பி-க்கு அழைத்துதான் நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில்லை" என்றார் தடாலடியாக.

எது எப்படியோ, 'மெர்சல்' படம் பற்றி அறியாதவர்கள்கூட, "அப்படி என்னதான்யா நடிகர் விஜய் பேசியிருக்கிறார்?" என்ற ஆர்வத்தை அனைத்துத் தரப்பினரிடத்திலும் தூண்டிய பெருமை தமிழக பி.ஜே.பி. நிர்வாகிகளையே சேரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


டிரெண்டிங் @ விகடன்