வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (24/10/2017)

கடைசி தொடர்பு:12:24 (24/10/2017)

ஆன்டி இந்தியன்... தமிழ் பொறுக்கீஸ்... ஜோஸப் விஜய்... பதில் சொல்வாரா பிரதமர் மோடி?!

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இந்தியாவின் பலம் வேற்றுமையில் ஒற்றுமை; இந்தியன் என்ற உணர்வால் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்று பள்ளிப் பாடப்புத்தகங்கங்கள் நம் குழந்தைகளுக்குப் போதிக்கின்றன. ஆனால், இந்த கொள்கைகளுக்கு முரணாக இருக்கின்றன, மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்களின் பேச்சுக்கள். பொறுப்புமிக்க தலைவர்கள் உதிர்க்கக்கூடிய சொற்களாக அவை இல்லை என்பது வருத்தத்துக்குரியது. 

ஜோஸப் விஜய்!

விஜய்

‘மெர்சல்’ படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு நீக்கம் குறித்த வசனங்கள் இடம்பெற்றதற்காக, நடிகர் விஜய்மீது பி.ஜே.பி-யினர் பாய்கிறார்கள். அவரை, மதரீதியான உள்நோக்கத்துடன் தாக்குகிறார்கள். பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா, ‘ஜோஸப் விஜய்’ என்று குறிப்பிடுகிறார். இதன் நோக்கம் என்ன? இது, அரசின் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சிக்கிற வசனங்கள் பற்றிய சர்ச்சை. இதில், எங்கிருந்து வந்தது மதம்? இந்தியாவில், 2015 ஜனவரி முதல் 2016 மே வரை, 18 மாதங்களில் 1,029 மதக்கலவரங்கள் நடந்துள்ளன. அவற்றில், 135 பேர் உயிரிழந்துள்ளனர். மத நோக்கத்துடன் பேசும் இந்தத் தலைவர்கள், ஏன் இந்த மதக்கலவரங்களைத் தடுக்கவில்லை. உலகளவில், மதக் கலவரங்களால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதற்கு, இந்தத் தலைவர்கள் என்ன பதில் சொல்வார்கள்?

ஆன்டி இந்தியன்!

உயர்மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகு, பல வாரங்களுக்கு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-கள் முன்பாக லட்சக்கணக்கான மக்கள் காத்துக்கிடந்த துயரத்தை ஒருபோதும் மறக்க முடியாது. பிரதமரின் அறிவிப்பு வெளியாகி, முதல் 50 நாள்களில் 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததை மறைக்கவும் முடியாது. மக்களை வெகுவாகப் பாதித்த அந்த நடவடிக்கைக்காகப் பிரதமரை விமர்சித்தவர்களை, ‘ஆன்டி இந்தியன்’ என்று பி.ஜே.பி தலைவர்கள் முத்திரை குத்தினார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை பி.ஜே.பி-யினர் எதிர்க்கவில்லையா? பிரதமரையும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டவர்களையும் பி.ஜே.பி-யினர் கடுமையாக விமர்சிக்கவில்லையா? அந்த பி.ஜே.பி தலைவர்களும் ஆன்டி இந்தியர்கள்தானா?

மோடி

தமிழ் பொறுக்கிகள்! 

கலாசாரம், பண்பாடு, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளுக்காகத் தமிழக மக்கள் போராடுகிறபோதெல்லாம், அவர்களைப் ‘பொறுக்கிகள்’ என்று பொறுப்பில்லாமல் வசைபாடுவதை வழக்கமாக வைத்துள்ளார், ‘மூத்த’ தலைவர் ஒருவர். அனைத்து மாநில மக்களுக்கும் தங்களது உரிமைகளை அரசிடம் கேட்கிற, அதற்காகப் போராடுகிற உரிமைகளை அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது. அந்த வகையில், தங்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க வேண்டும் என்று ஒட்டுமொத்தத் தமிழகமும் கிளர்ந்தெழுந்துப் போராடியது.  இந்தப் போராட்டத்தை நடத்தியவர்களையும், அதற்கு ஆதரவளித்தவர்களையும் ‘தமிழ் பொறுக்கிகள்’ என்று குறிப்பிட்டார் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. 

அரசின் திட்டங்கள், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், அதை எதிர்த்துப் பாதிக்கப்படுகிற அந்த மக்கள் போராடுவது தவறா? கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். விளைநிலங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது என்பதற்காக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் மக்கள் போராடுகிறார்கள். மீத்தேன் திட்டத்துக்கு எதிராக தஞ்சை, நாகை மாவட்டங்களில் விவசாயிகள் போராடுகிறார்கள். ஒரு விஷயம் தங்களை பாதிக்கிறது என்றால், அதற்கு எதிராகப் போராடாமல் என்ன செய்வார்கள்? ஜனநாயக முறைப்படி, அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி, போராடுகிற மக்களை, பொறுக்கிகள் என்று சொல்வது நாகரிகமான செயல்தானா?  

இப்படி ஒருவரது மதம், ஒரு மாநில மக்களின் உரிமை, ஒரு நாட்டின் குடிமகன் என்ற விஷயங்களை எல்லாம் நீங்கள் கொச்சைப்படுத்துவீர்கள். ஆன்டி இந்தியன்... தமிழ் பொறுக்கிகள்... ஜோஸப் விஜய்... இன்னும் என்னவெல்லாம் பி.ஜே.பி தலலைவர்கள் தமிழக மக்களை விமர்சிப்பார்கள்.. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஒரு இந்திய குடிமகனாய் பிரதமர் மோடிக்கும் இருக்கிறது. பதில் சொல்லுங்கள் பாரதப் பிரதமரே!


டிரெண்டிங் @ விகடன்