வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (24/10/2017)

கடைசி தொடர்பு:14:59 (24/10/2017)

“கௌசல்யா - சங்கர் சம்பவத்தை ஏன் ‘மகளிர் மட்டும்’ பின்னணி ஆக்கினேன்?” - கனக்கும் உண்மை சொல்கிறார் பிரம்மா! #VikatanExclusive

கேரள மற்றும் தமிழ்ப் பெண்களை ஒப்புமைப்படுத்தி ஒளிப்பரப்பப்பட இருந்த தொலைக்காட்சி நிகழ்வின் 'ப்ரமோ' முகநூலில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பெண்கள் அமைப்புகள் அதை எதிர்த்தன. இதனால் எழுந்த சர்ச்சை காரணமாகக் கடைசி நேரத்தில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை மிகப்பெரிய அளவில் அண்மையில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது #MeToo என்னும் முகநூல் ஹாஷ்டேக். இப்படிச் சமூகம் பெண்களின் மீது திணிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வெளியாகவே அண்மைக்காலங்களில் சமூக வலைதளங்கள் ஒருபுறம் இயங்கி வருகின்றன.

இந்த, சமூகவலைதளத்தையும் அதன்மூலம் மூன்று பெண்கள் தாங்கள் தொலைத்த பள்ளிக்கால தோழமைகளுடன் எப்படி இணைகிறார்கள் என்பதையும் அண்மையில் வெளியான 'மகளிர் மட்டும்' திரைப்படத்தில் ஒரு ஜாலி சிட்காம் வகையறாவாக எடுத்திருந்தார் 'குற்றம் கடிதல்' படத்தின் இயக்குநர் பிரம்மா. பெண்களுக்கான சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், அவர்களுக்கு அவசியம் இருக்கவேண்டிய சமூகப் பொறுப்புகளையும் இப்படம் பேசியிருந்தது. இத்திரைப்படம் குறித்த பெண் பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற இயக்குநர் பிரம்மாவுடன் உரையாடியதில் இருந்து..

" 'குற்றம் கடிதல்' போன்ற சமூக அக்கறையுடன் கூடிய படங்களை எடுத்த பிரம்மா எப்படி 'மகளிர் மட்டும்' போன்ற முற்றிலும் வேறான ஜாலி ஜானர் படங்களை எடுத்தார்?"

இயக்குநர் பிரம்மா

"குற்றம் கடிதல் வெளியானபோது ரோகிணி தியேட்டரில் படம் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போதுதான் ஒரு ஆடியன்ஸாக அந்தப் படம் என்ன உணர்வைத் தருகிறது என்கிற பார்வை நமக்குக் கிடைக்கும். படம் முடிந்து வெளியே வந்ததும் லுங்கி கட்டிக்கொண்டு ஒருநபர் வந்தார். அவரிடம் 'படம் எப்படி இருந்தது?' என்று கேட்டேன். அவர், “செமையா இருக்கு.... படத்தப் பார்க்கப் போயிடப் போற!” என்று ஒருவித சர்காஸத்துடன் படம் அவருக்குப் பிடிக்கவில்லை என்பதைச் சொன்னார். தேசிய விருது அளவுக்கு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றாலும் பெரும்பான்மையான பொதுமக்கள் இப்படியான பதிலைத்தான் வைத்திருந்தார்கள். ‘நீ யாரு எங்களுக்கு கருத்துச் சொல்ல?’ என்பதுதான் அவர்களுடைய மனநிலை. இந்தப் பெரும்பான்மைக்குச் சென்று சேர்வது மாதிரி ஜனரஞ்சகமாக ஒரு படம் எடுக்க நினைத்தேன். 'மகளிர் மட்டும்' சமூக அரசியல் ஜனரஞ்சகத் தன்மையுடன் உருவாக்கப்பட்ட திரைப்படம்".

" 'மகளிர் மட்டும்' டைட்டிலே பல தகவல்களைச் சொன்னது. ஆனால், இந்த ஒரு படத்தால் சமூகத்தை மாற்றிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?"

"நிச்சயம் இல்லை. இந்த ஒரு படம் அத்தனையையும் மாற்றிவிடாது. ஆனால், சமூகத்திடம் நமது எண்ணங்களை எடுத்துச் செல்வதற்கு சினிமா ஒரு வலிமையான ஊடகம். ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் பெரும்பாலான பெண்களுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் தாங்கள் வீட்டிலும் சமூகத்திலும் எதிர்கொள்வதை நகைச்சுவையுடன் சொல்லும்போது, அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்களுக்குப் படம் பிடிக்கவில்லை. பெண்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அவர்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறது எனது திரைப்படம். ஆனால், இந்த ஒரு படம் மட்டும் அத்தனையையும் மாற்றிவிடாது. இதுபோல இன்னும் இருநூறு, முந்நூறு படங்கள் வரவேண்டும். அதில் பெண்கள் எப்படிக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்கிற சமூகப் பொறுப்பு உணர்வு இருக்கவேண்டும். அத்தனைக்குமான ஒரு விதைதான் இந்தப் படம்".

மகளிர் மட்டும்

" 'மகளிர் மட்டும்' திரைப்படம் உண்மைச் சம்பவமா?" 

"கிட்டத்தட்ட அப்படித்தான் என்று சொல்லலாம். ஒரு மூன்று வருடத்துக்கு முன்பு என்னுடைய அம்மாவுக்கு ‘tab' வகை போன் வாங்கிக் கொடுத்தேன். அதை உபயோகிக்க என் மனைவி கற்றுக் கொடுத்தாங்க. 36 வருடங்களுக்குப்பின் அம்மாவுக்கு அவரின் இரண்டு தோழிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்தது ஃபேஸ்புக். அந்தச் சம்பவத்தை கதையாகச் சொல்லத் தோணுச்சு. மட்டுப்படுத்தப்பட்டு எமோஷனலாகவும், அறிவாலும் குட்டப்பட்டே வாழ்ந்த இந்த மூன்று பேர் கதையும் சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?. அவங்க தொலைச்ச சின்னச்சின்ன மொமன்ட்ஸைக் கண்டுபிடித்து, திரைப்படம் வழியா மீண்டும் உருவாக்கினால் எப்படி இருக்கும்? அதைத்தான் படமாக உருவாக்கினேன். என்னைப் பொறுத்தவரை, இது டாக்குமென்ட்ரி".

"உடுமலைப்பேட்டை சங்கர்- கௌசல்யாவுக்கு நிகழ்ந்ததைப் படத்தில் கொண்டுவரும் எண்ணம் எப்படித் தோன்றியது?"

கௌசல்யா சங்கர்

"ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஒரு பதிவாகப் படத்தில் பேசற மாதிரி எளிதாக சங்கர் - கௌசல்யா, சம்பவத்தைப் பதிவு செய்துவிட்டுக் கடந்துவிட முடியாது. பெண் அடிமைத்தனம் வீட்டில் மட்டுமல்ல சமூகத்திலும் இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான், இங்கு ஜாதி அரசியலே இயங்குகிறது. ஜாதி ஒழிய வேண்டும் என்றால் கலப்புத் திருமணம் நிகழ வேண்டும் அது காதல் திருமணமாக இருக்க வேண்டும். அதற்கு அடிப்படையாகப் பெண் சுதந்திரம் தேவை. இதையெல்லாம் உணர்ந்த சில சாதிகள்தான் பெண்களை அடிமைப்படுத்தி வெச்சிருக்காங்க. அதற்கு அடிப்படைதான் வீட்டார் பார்த்து செய்துவைக்கும் திருமணங்கள்.

ஒரு பெண் தான் விருப்பப்படும் ஆணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தால் இங்கே ஆணவக் கொலைகள்தான் அதற்குப் பதிலாக இருக்கு. பெண்ணை அடிமைப்படுத்துவது பற்றி படம் எடுக்கும்போது, எப்படி ஆணவக் கொலை பற்றி அதில் பேசாமல் இருக்கமுடியும். சங்கரும், கௌசல்யாவும் கையெழுத்து போடுவதுபோல வரும் காட்சியில், மொத்த யூனிட்டும் அழுதோம். சங்கர் அந்த இடத்தில் வெட்டப்படும்போது, அதை வேடிக்கை பார்த்துவிட்டு கடந்தவர்களுடன் சேர்த்து நாம் எல்லோருமே ஒருவகையில் அந்தக் குற்றத்துக்குக் காரணமானவர்களாகிறோம். படத்தை முடித்ததும் கௌசல்யாவைத் தேடிப்பிடித்து படத்தை அவருக்குத் திரையிட்டுக் காண்பித்தேன். என்னைப் பொறுத்தவரை, ‘மகளிர் மட்டும்’ சாதி அரசியல் பேசும் படம்தான்”.

ஏதோ ஒருவகையில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதே ஒரு கலைப்படைப்பின் உண்மையான வெற்றி. திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கௌசல்யா தனது முகநூலில் ‘மகளிர் மட்டும்- சங்கர் உயிருடன்!’ என்று பதிவிட்டார். ஆயிரம் வலிகளைக் கடத்தியது அந்த ஒற்றைப் பதிவு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்