வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (25/10/2017)

கடைசி தொடர்பு:08:47 (25/10/2017)

“நேர்மையா வேலை பார்த்தா ட்ரான்ஸ்ஃபர்தான் பரிசா?!’’ - வனத்துறையில் தொடரும் தில்லுமுல்லு

கடந்த 17.07.2017-ம் தேதி விகடன் வலைத்தளத்தில் 'சோழிங்கநல்லூர் சதுப்பு நிலத்தில் சதுரங்கம் ஆடும் எல்காட்... வேடிக்கை பார்க்கும் வனத்துறை!' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைப் பதிவிட்டிருந்தோம். அதில், “பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எல்காட், துரைப்பாக்கம் எனப் பல இடங்களில் பரந்து விரிந்து கிடக்கிறது. எல்காட்டில் ஓர் ஓடை தயார் செய்யப்பட்டு, கழிவுநீரானது சதுப்பு நிலத்திலுள்ள நீருடன் கலக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பறவைகள் இங்கு அதிகமாக வருவதில்லை. இப்படியே விட்டால் இந்த நிலமும் பாழாகிவிடும். இங்கு இருக்கும் யாரும் இதைக் கண்டுகொள்வதில்லை. இதற்கு எல்காட் ஜிஎம் முதல் அனைவருக்கும் சரிசமான பங்கு போகிறது. வனத்துறை உயர் அதிகாரிகள் அடிக்கடி நோட்டீஸ் கொடுத்து வருகிறது. ஆனால், அவர்களின் கைகளும் இந்த விஷயத்தில் கட்டப்பட்டுத்தான் கிடக்கின்றன. யாராவது புகார் கொடுத்தால் அவர்களுக்கு மிரட்டல்கள் அதிகமாக வரும். இங்கே எல்காட் சார்பில் ஐடி நிறுவனங்களிடம் வாங்கவேண்டியதை வாங்கி தலைமைச் செயலகம் வரை கவனித்து விடுகின்றனர்" என்ற தகவலை அப்பகுதிவாசி ஒருவர் சொல்ல அதை நேரடி ரிப்போர்ட்டாகக் கொடுத்திருந்தோம். அப்போது எங்களை வனத்துறை பகுதிக்கு உள்ளே ரவிக்குமார் என்ற வனப்பாதுகாவலர் அனுமதித்தார். எந்த ஒரு தகவலும் நம்மிடம் சொல்லாத அவரைப் பந்தாடியிருக்கிறது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வனத்துறை. 

பள்ளிக்கரணை

இதுபற்றி பேசிய வனப்பாதுகாவலர் ரவிக்குமார், “சார், அன்னைக்கு நீங்க வந்துட்டு போனதுக்குப் பிறகு மூணு நாள் கழிச்சு வனத்துறை உயர் அதிகாரிகள் முதல் எல்காட் ஜி.எம் வரைக்கும் எல்காட் வனத்துறை அலுவலகத்துக்கு வந்தாங்க. அங்க நீங்க சொல்லியிருந்தது மாதிரி, கழிவு நீர் கலந்துகிட்டு இருந்துச்சு. அப்போ அதைப் பார்வையிட்டு அடைச்சாங்க. ஆனா, கலந்த கழிவுநீரை என்ன பண்ணுறதுன்னு யாரும் யோசிக்கவே இல்லை. எல்லோருடைய பார்வையும் என் பக்கமா திரும்பிச்சு. ஆனா, அந்த நேரத்துல யாரும் வெளிய சொல்லாம போயிட்டாங்க. பிறகு சில நாள் கழிச்சு, ஒரு கடிதம் வருது. அதுல உங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர்னு போட்டிருந்துச்சு. அந்த நேரத்துல நானும் லீவுல இருந்ததால, அந்தக் கடிதத்தை வாங்கப்போனேன். அடுத்த இரண்டு நாள் கழிச்சு மறுபடியும் ஒரு கடிதம் உங்களைத் திருச்சிக்கு மாத்திட்டோம்னு வந்துச்சு. எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியலை. அங்க நிறைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன. அதைச் செய்யுறவங்க எல்லோரும் ஒரு கூட்டமா அங்கதான் இருக்குறாங்க. நியாயமா வேலை பார்த்தா ட்ரான்ஸ்பர் பண்றாங்க" என்றார் கவலையுடன்.

“உயர் அதிகாரி முதல் அனைவருக்கும் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. அதேபோல எல்காட்டில் கட்டப்பட்ட பறவைகள் கண்காணிப்புக் கோபுரம் கட்டப்பட்ட சில ஆண்டுகளில் முடிவதற்குள் இடிந்து விழுந்து விட்டது. இதற்கும் அக்கட்டடம் கட்டுவதில் நடந்த ஊழல்தான் முக்கியக் காரணம். அங்கே வேலை செய்யும் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தனது அண்ணன் மகன் பெயரிலும், இன்னும் சில பெயர்களிலும் ஏலம் எடுத்துக் கட்டடம் கட்டினார். அதுதான் தற்போது தரைமட்டமாகியுள்ளது. இதுபோக பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இன்னும் ஏராளமாக நடக்கின்றன. சதுப்பு நில வாரியம் அமைத்துப் பல ஆண்டுகளாக வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், ஒரு சில இடங்களையே கைப்பற்றியுள்ளது. அதேபோல பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கழிவுநீர் கலப்பதையும் கண்டுகொள்ளவில்லை" என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத வனத்துறை அதிகாரி.

இதுபற்றி பள்ளிக்கரணை வனத்துறை மண்டல வன அதிகாரி அசோகனைத் தொடர்பு கொண்டோம். "ரவிக்குமார் கடந்த ஒரு வருடமாக எந்த வேலையும் செய்யாமல் இருந்து வந்துள்ளார். அதனால்தான் அவரை டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்கள். அவர்மேல் குற்றம் சாட்டப்பட்டதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. வேறு எந்த நோக்கமும் இந்த டிரான்ஸ்பரில் கிடையாது. யாரோ தவறாகக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை பள்ளிக்கரணையை மீட்டெடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறோம். 2013-ல் கட்டப்பட்ட எல்காட்டில் கட்டப்பட்ட கண்காணிப்புக் கோபுரம் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதம் அடைந்தது. அதன்பின்னர், ஏற்பட்ட வர்தா புயலில் அதிக சேதம் அடைந்தது. அதனால்தான் தற்போது இடிந்து விழுந்திருக்கிறது" என்றார்.

பள்ளிக்கரணை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட இக்குழு, தனது பாதையிலிருந்து விலகிச் செல்லாமல், சரியான பாதையில் பயணித்து பள்ளிக்கரணையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்