Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற முயற்சி... பி.டி விதைகளை ஊடுருவலுக்கான வழியா?!

விவசாயம்

ல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றி, பல்வேறு மாநிலங்களைப் பாதிக்கும் கல்வி குறித்த கொள்கைகளை மத்திய அரசு பிடிவாதமாக அமல்படுத்தி வருகிறது. பொதுப்பட்டியல் அல்லது மத்தியப் பட்டியலில் விவசாயம் சேர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

"மாநிலத்துக்கு உட்பட்டதல்ல..."

அதன் முதல் கட்டமாக, நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "விவசாயத்தை மாநிலப் பட்டியலிலிருந்து, பொதுப்பட்டியல் அல்லது மத்திய அரசுப் பட்டியலில் மாற்ற வேண்டும்" என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்.  
மேலும், "விவசாய பொருள்களை வர்த்தகம் செய்வது என்பது ஒரு மாநிலத்துக்குள் உட்பட்டது அல்ல. இப்போது பஞ்சாப்பில் உற்பத்தி செய்யப்படும் அரிசி என்பது வெளி மாநிலங்களுக்கும் செல்கிறது. எனவே, விவசாயம் என்பது ஒரு மாநிலத்துக்கு உட்பட்டது என்று சொல்ல முடியாது. மேலும், உணவுப் பதப்படுத்தும் தொழிலில் நூறு சதவிகிதம் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயத்தை மாநிலப்பட்டியலில் வைத்திருப்பது சரியல்ல" என்றும் சொல்லியிருக்கிறார்.

தலைவர்கள் எதிர்ப்பு

இது மாநிலத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல் என்று தி.மு.க செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். தவிர, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கல்வி இப்போது பொதுப்பட்டியலில் இருக்கிறது. இதனால், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறது. விவசாயத்தையும் பொதுப்பட்டியலிலோ அல்லது மத்திய பட்டியலிலோ சேர்க்கும் பட்சத்தில் விவசாயிகளின் பிரச்னைகளில் தன்னிச்சையான முடிவுகளை மத்திய அரசு எடுக்கக்கூடும். ஏற்கெனவே துயரத்தில் இருக்கும் விவசாயிகளின் நிலை மேலும் கவலை அளிக்கக் கூடியதாக மாறும்.

விவசாயிகள் நிர்கதியாவார்கள்

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.சண்முகத்திடம் கேட்டோம். “மத்திய அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல. நாடு முழுவதும் விவசாயிகள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருந்து கொண்டு வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறது. விவசாயிகளை நெருக்கடிகளிலிருந்து மீட்கவோ, தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கவோ, பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கோ எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுப்பதில்லை. விவசாயம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் போகும்போது நாடு முழுவதும் விவசாயிகள் நிர்கதியாக நடுத்தெருவில் நிறுத்தப்படுவார்கள்.

விவசாயி

அதிகாரப்பறிப்பின் இன்னொரு வடிவம்

மாநிலப் பட்டியலில் இருப்பதால்தான் அரசியல் காரணங்களுக்காக, தேர்தல் நேரத்திலாவது மாநில அரசுகள் கடன் தள்ளுபடியை அறிவிக்கின்றன. ஏற்கெனவே மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து, மத்திய அரசு அதிகாரங்களைக் குவித்து வருகிறது.
விவசாயிகள், இப்போது மத்திய அரசின் உதவி இல்லாமலேயே ஆன்லைன் டிரேடிங் முறையில் உலகம் முழுவதும் விளைபொருள்களை விற்பனை செய்கின்றனர். எனவே, மத்திய அரசின் முயற்சிக்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு செய்வது, மாநில அதிகாரப் பறிப்பின் இன்னொரு வடிவம். இதற்குத் தமிழக அரசு கடுமையான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

மரபணு மாற்ற விதைகள் ஊடுருவும்

இது குறித்து தமிழ் தேச பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமனிடம் பேசினோம். “விவசாய விளைபொருளுக்கான விலையைத் தீர்மானம் செய்ய வேண்டும். அதற்காகத்தான் மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்தக் காரணம் பொய்யானது. அனைத்து விவசாய விளைபொருள்களுக்கான விலையை மத்திய அரசுதான் இப்போது தீர்மானிக்கிறது.
ஆனால், மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையை மாநிலங்கள் மறுக்கலாம், அல்லது அந்த விலையை விட அதிகமாகவும் கொடுக்கலாம். விவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்த்து விட்டால், அவர்கள் நிர்ணயிக்கும் விலையை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். விவசாயத்தை நவீனப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் மரபணு மாற்ற விதைகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யவே, மத்திய அரசுப் பட்டியலில் விவசாயத்தைச் சேர்க்க முயற்சி செய்கின்றனர். 

விளை நிலங்கள் பறிபோகும்

விவசாயம் மாநிலப்பட்டியலில் இருப்பதால்தான் பி.டி கத்திரிகாய் போன்ற மரமணு மாற்ற விதைகளுக்கு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியின் போது பி.டி.கத்தரிக்காய் விதைகளை அறிமுகப்படுத்த முயற்சி நடந்தது. அப்போது, உத்தரபிரதேச முதல்வராக இருந்த மாயாவதி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். கேரள மாநிலமும் எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது முதல்வராக இருந்த, ஜெயலலிதாவும் எதிர்ப்புத் தெரிவித்தார். வெளிநாட்டு விதை கம்பெனிகள் பி.டி விதைகளைக் கொண்டுவர நினைக்கின்றன. அதற்கு மத்திய அரசு துணைபோகத் துடிக்கிறது.

பஞ்சு

இது தவிர இன்னோர் ஆபத்தும் இருக்கிறது. விவசாயத்தை மத்தியப் பட்டியலில் கொண்டு வந்து விட்டால், விவசாய நிலங்களையும் மத்திய அரசு எளிதாகக் கையகப்படுத்த முடியும். விவசாயத்தை மத்தியப் பட்டியலில் கொண்டு வர, நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. லோக்சபாவில் பி.ஜே.பி பெரும்பான்மையுடன் இருக்கிறது. அங்கு எளிதாக நிறைவேற்றி விட முடியும்.  ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் வென்றது போல, இதையும் நிறைவேற்றி மத்தியப் பட்டியலுக்கு மாற்றிவிடலாம் என்று நினைக்கின்றனர். இதைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து விவாதித்து கூட்டறிக்கை வெளியிட வேண்டும். சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement