வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (26/10/2017)

கடைசி தொடர்பு:16:17 (26/10/2017)

கடல் குதிரையும்... நாப்கின் கழிவுகளும்..! பெசன்ட் நகர் பீச்சின் அதிகாலை! #VikatanExclusive

சுற்றிலும் இளம் அடர் நீலத்தில் தூய்மையாகத் தெரியும் கடல்நீர்; அதில், மெல்லியதாகத் தெரியும் ஒரு கடல்குதிரையின் உருவம். மெல்ல அசைந்துசெல்லும் அதன் உடலுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு பொருளை அதன் வால் பகுதியால் சுருட்டிக்கொண்டு தாங்கிச் செல்கிறது. அந்தப் பொருள் மனிதர்கள் காது குடைய உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஆன 'இயர்பட்’. 

மனதை நெருடும் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்துவிட்டீர்களா. 2017-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வைல்டு லைஃப் புகைப்படங்களுக்கான விருதில், இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கும் ஜஸ்டின் ஹாஃப்மேன் என்னும் சூழலியல் புகைப்படக்காரர் இந்தோனேசியத் தீவுகளில் தற்செயலாக எடுத்த புகைப்படம்தான் அது. 

கடல் குதிரை

Credits : Justin Hoffman

கடலில் அளவுக்கு அதிகமாகக் கழிவுகளைக் கொட்டும் நாடுகளின் பட்டியலில், இந்தோனேசியாவுக்கு முதலிடம். அதுமட்டுமல்லாமல், இப்படிக் கடலை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருப்பது தெற்காசிய நாடுகளே. இந்தியாவைப் பொறுத்தவரை, பெருநகரங்களின் பட்டியலில் மும்பை நாளொன்றுக்கு 2,100 மில்லியன் லிட்டர் மனிதக் கழிவுகளைக் கடலில் கலக்கிறது. அதற்கடுத்து, பட்டியலில் இருப்பது உலகின் இரண்டாவது மிகநீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள சென்னை. ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு 413 டன் அளவுக்குக் கழிவுகள் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகத் தரவுகள் சொல்கின்றன. 

சென்னையின் கடற்கரைக்குக் காலைச் சூரியன் உதிப்பதைப் பார்ப்பதற்குச் சென்றால், அந்த நேரத்துக்கே சீருடை அணிந்தபடி துப்புரவாளர்கள் கரையோரம் இருக்கும் குப்பைகளை அகற்றிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருப்பார்கள். அப்படியான மூன்று பெண்களைத்தான் பெசன்ட் நகர் கடற்கரையில் ஓர் அதிகாலை வேளையில் சந்தித்தோம்.

பெசண்ட் நகர் கடற்கரை  

“நீ மட்டும்தான் உட்கார்ந்துட்டே வேலை செய்யற” என்று தனது அருகில் நின்று குப்பைகளைக் கூட்டிக்கொண்டிருந்த தன் தோழியிடம் சிரித்தபடியே வம்பு பேசிக் கொண்டிருந்தார் அவர்களில் ஒருவர். பெயர் லீலா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். அருகில், உட்கார்ந்தபடி வேலை செய்துகொண்டிருந்தவரின் பெயர் தீபா. இவர்கள் இருவரின் பேச்சுக்கு இடையே தனது கடமையே கண்ணாகக் கடற்கரை மண்ணில் கிடந்த ஓலைகளைக் கூட்டி வாரிக்கொண்டிருந்தார் மூன்றாமவர் லட்சுமி.

எங்க எல்லாருக்கும் ஒரே கதைதான்” என்றபடி பேசத் தொடங்கினார் லட்சுமி. “காலையில ஆறு மணிக்கு வருவோம். மதியம் இரண்டு மணிவரைக்கும் கரையில் இருக்குற குப்பைகளை எல்லாம் அகற்றிச் சுத்தம் செய்வோம். நடுவில் ஒரு மணிநேரம் சாப்பாட்டுக்கு” என்று சொல்லிவிட்டுச் சிரிப்பவருக்கு ஏழு பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். மூன்று மகன்கள் வேலைக்குச் சென்றும் குடும்ப வருமானம் போதாமல் இருப்பதால் 59 வயதில் தானும் வேலை செய்கிறார். 

இடைமறித்துப் பேசிய லீலா, “நாங்க, இங்க பக்கத்துல ஊரூர் குப்பத்துலதான் இருக்கோம். வீட்டு ஆம்பிளைங்க எல்லாம் காலையிலயே சரக்கு அடிக்கப் போயிடுவாங்க. அதனால பெரும்பாலும் லேடீஸ் நாங்கதான் குப்பைகளைச் சுத்தம் செய்ய வருவோம். வாரநாளில் அவ்வளவு குப்பைகள் இருக்காது. ஆனா, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை இந்த மூணு நாளும் அவ்வளவு குப்பைங்க கிடக்கும்” என்று கூறிவிட்டுக் கையிலிருக்கும் துடைப்பத்தால் மீண்டும் சுத்தம் செய்யத் தொடங்குகிறார். 

கடற்கரையில் சந்தித்த துப்புரவாளர்கள் மூன்று பேர்

அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பேசத் தொடங்கிய லட்சுமி, “குழந்தைகளுக்கு உபயோகிக்கிற டயாபர், குடிக்கிற பாட்டில், மாதவிடாய்க் காலத்துல உபயோகிக்கற நாப்கினு... இப்படிக் கையால எடுக்கவே முடியாத அளவுக்குக் குப்பைகள் எல்லாம் கிடக்கும். கடற்கரையில் அமர்ந்து குழந்தைகளுக்கு டயாபர் மாட்டிவிட்டிருப்பாங்க. அதனால் இங்கே டயாபர் கிடப்பதில் லாஜிக் இருக்கிறது. ஆனா, வீட்டுப் பாத்ரூம்ல தூக்கி எறியற நாப்கின்லாம் இங்கே எப்படிம்மா கரையோரம் ஒதுங்கிக் கிடக்குது. ஒருநாளைக்கு எண்ணமுடியாத அளவுக்கு நாப்கின்களைக் கடற்கரையோரத்துலேர்ந்து அள்ளுறோம்” என்று கூறிவிட்டுக் குப்பைகளை அள்ளத் தொடங்குகிறார்.

“கடல்ல குப்பைகளைப் போடக்கூடாதுனு நாங்க சொல்லியா கேட்கப் போறாங்க? நாம இப்படி அசுத்தம் செய்யுறோமே... அதை அள்ளுறவங்களுக்குத்தான கஷ்டம்னு அவங்களுக்கே தெரியணும். குப்பைகளைப் போடுறவங்க எவ்வளவு சம்பாதிக்கிறாங்கனு தெரியாது. ஆனா, குப்பை பொறுக்குவது ஈஸினு நெனச்சிக்குறாங்க. எங்களுக்கெல்லாம் சம்பளம் குறைவுதான். மாசம் 5,500 ரூபாதான் வாங்குறேன். ஆனா, ஒருநாளைக்குப் பத்து மூட்டை அளவுக்குக் குப்பைகளை இங்கிருந்து சுத்தப்படுத்துறேன். தெருவுல குப்பை சுத்தம் செய்யுறவங்களுக்கும் எங்களுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு. அவங்களுக்குக் குப்பை மலம் எல்லாத்தையும் அள்ளிட்டா... சாப்பாடே தொண்டைக்குள்ள இறங்காது. ஆனா, எங்களுக்குக் கடல் தண்ணி இப்படிக் கரையோரமா அடிச்சுட்டு வர்ற நாப்கின்களையும் டயாபர்களையும் பார்த்தாலே குடிக்கிற தண்ணிகூடத் தொண்டைக்குள்ள இறங்க மாட்டேங்குது. குடிக்கிற தண்ணியைப் பார்க்கும்போதெல்லாம் கடல் அலை அத்தனை கழிவையும் கரையில ஒதுக்கிவிடுறதுதான் நினைவுக்கு வரும்” என்ற லட்சுமி, மீதம் இருக்கும் கழிவுகளை அள்ளுவதற்கு அங்கிருந்து நகர்ந்துசெல்கிறார். உணர்வுகள் மரணித்துவிட்டதன் சாயல் அவர் முகத்தில் தெரிகிறது.

கழிவைத் தூக்கிச் செல்லும் கடல்குதிரையைப் படம்பிடித்த ஜஸ்டின் ஹாஃப்மேன், தான் எடுத்த புகைப்படம் பற்றி இப்படியாகப் பதிவுசெய்திருந்தார், “இந்தக் காட்சி நிகழ்ந்திருக்கக் கூடாதுதான். துரதிர்ஷ்டவசமாக அது நிகழ்ந்துவிட்டது. நான், அதைப் படம்பிடிக்க வேண்டியதாகவும் ஆகிவிட்டது”.

பெரும்கடல் கரைஒதுக்கிய மொத்தக் குப்பைகளையும் அள்ளிக்கொண்டிருந்த அந்த மனிதர்களைப் பார்க்கும்போது ஜஸ்டின் ஹாஃப்மேன் சொன்னதுதான் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்