வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (27/10/2017)

கடைசி தொடர்பு:16:08 (27/10/2017)

‘கு.ம.செ.’ குழுவிடமிருந்து யாரும் தப்பமுடியாது! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! - அத்தியாயம் - 3

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

குடும்ப மருத்துவர் - செவிலியர் திட்டமானது கியூபாவில் வந்திருக்காமலும் போயிருக்கலாம் அல்லது இந்த வடிவில் வராமல் போயிருக்கலாம். குடிமக்களின் நலவாழ்வில் பொதுவாக காஸ்ட்ரோ அரசானது அக்கறையோடும் விழிப்போடும் இருந்ததானது, புதியத் திட்டங்களின் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தது இதைப் பொறுத்தவரை மெய்யோ மெய்! 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கியூபாவுக்குள் தங்கத்தைத் தேடவந்த ஐரோப்பியர் உட்பட்ட அயலவர்கள், கையோடு புதுப்புது நோய்களையும் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். சில பத்தாண்டுகளுக்கு முன்னர்வரை அதன் துயர விளைவுகள் கியூப மக்களைப் பீடித்திருந்தன. அதிக அளவு புகையிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாற்றப்பட்ட கியூபாவில், சுவாச நோய் பரவலாக இருந்தது. இதைப்போல இன்னும் சில இறக்குமதி செய்யப்பட்ட நோய்களும் பட்டியலில் இடம்பிடித்தன. நோய்கள் பரவிய அளவுக்கு சிகிச்சை வசதிகள் இல்லை. ஹவானா போன்ற நகரங்களில் மட்டுமே மருத்துவ வசதி கிடைத்தது. இதைக் கருத்தில்கொண்ட புதிய அரசு, ஊரகப் பகுதிகளுக்கும் நகர்ப்புறத்தில் எளிய மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க முன்னுரிமை அளித்தது. 

தேசியச் சுகாதாரச் சேவையில் 70-களிலும் 80-களின் தொடக்கம்வரையிலும் செய்த பணிகளால், வளர்ந்த நாடுகளின் நிலையை எட்டியது. குடிமக்களின் நலவாழ்வை உறுதிப்படுத்த முடிந்த அதேசமயத்தில் சிறப்பு மருத்துவர்களின் சேவையை தொடக்கநிலை மருத்துவர்கள் ஒருங்கிணைக்காமல் இருக்கின்றனர் எனப் புகார்கள் எழுந்தன. தொடர்சிகிச்சை பெறுவது சிரமமாகவும் அவசரசிகிச்சைப் பிரிவை கூடுதலாகப் பயன்படுத்துவதுமாக நிலைமை மாறியது. நாடு முழுவதும் உண்டான இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதில் கியூப அரசு இறங்க, ’குடும்ப மருத்துவர்- செவிலியர்’ திட்டம் உருவானது. 

ஹவானாவில் உள்ள ஒரு பகுதியில் 1983-ம் ஆண்டு உள்ளூர் பாலிகிளினிக்கை மையமாகக் கொண்டு, 15 மருத்துவர்-செவிலியர் குழுக்களை வைத்து தொடங்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் வெற்றியும் கிடைக்கவே நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, கன்சல்ட்டோரியோ எனப்படும் குடும்ப மருத்துவர் - செவிலியர் அலுவலகத்திலேயே, அதில் பணியாற்றும் மருத்துவரும் செவிலியரும் வசிக்க வேண்டும். ஒவ்வோர் அலுவலகமும் 120 முதல் 150 குடும்பங்களின் அதாவது 500- 800 பேரின் நலத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

டெங்கு

காலை முதல் மதியம்வரை அலுவலகத்தில் இருக்கும் இந்தக் குழுவினர், பிற்பகலில் முதியோர், அவதியுறும் நோயாளிகளைக் கவனிக்க அழைப்பின்பேரில் அவர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். இதன்மூலம் கிராமப் பகுதியினர் தொலைவாகச் சென்றுதான் மருத்துவரைப் பார்க்கவேண்டும் எனும் அவதி இல்லாமல் போனது. இத்துடன், அந்தந்தப் பகுதிக்கு உட்பட்ட தொழிற்சாலைகள், பள்ளிகள், கப்பல்கள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள், முதியோர் இல்லங்களிலும் கு.ம.செ. குழுவின் முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்தக் குடும்ப ம./செ. குழுவினர் அந்தந்தப் பகுதியில் உள்ள தனி நபர்களின் நல விவரங்களைப் பதிவுசெய்வார்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்ட விவரப் பதிவைப் போல, எல்லா வயதினருக்குமே அவர்களின் சத்துக்குறைவு உட்பட உடலின்நிலை, தொற்றும்-தொற்றா நோய் பாதிப்பு நிலவரம், வாய்ப்பு, சிகிச்சைத் தேவைகள் உட்பட உரிய விவரங்கள் அனைத்தும் ஆவணமாகப் பதியப்படும். ஒவ்வொருவரையும் ஆண்டுக்கு இரு முறையாவது கு.ம.செ. குழுவினர் கட்டாயம் சந்தித்து, நிலவரத்தைப் பதியவேண்டும். பிள்ளைப்பூச்சி பயம் கண்டு மிரளும் குழந்தைகளைப் போல, கு.ம.செ. குழுவினரைச் சந்திக்க விரும்பாத புகைப்போர், மதுக்குடிப்போர் இருந்தாலும், இவர்களைச் சந்திக்காமல் இருக்கமுடியாது. யாரேனும் அடம்பிடித்தால்கூட, அவர்களை விரட்டிப்பிடித்தாவது கு.ம.செ. குழுவினர் சுகாதாரச் சந்திப்பை நிகழ்த்திவிடுவார்கள் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

டெங்கு

சுற்றுமுறைப்படி ஒவ்வொருவரையும் சந்திக்கும் கு.ம.செ. குழுவினர், நோயறிதல், ஆய்வகச் சோதனை, பிசியோதெரப்பி, பல் மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு/ பெண்கள் மருத்துவம், மனநல மருத்துவம் ஆகியவற்றுக்காக, பாலிகிளினிக்குகளுக்குப் பரிந்துரைசெய்து அனுப்பிவைப்பார்கள். ஒவ்வொரு கன்சல்ட்டோரியாவிலிருந்து வருவோருக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமன்றி, தலா 30 கன்சல்ட்டோரியாக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பும் பாலிகிளினிக்குகளுக்கு உண்டு. இதற்காக, பாலிகிளினிக்கின் ஒரு மருத்துவர் தலைமையில், வட்டார அளவில் அடிப்படைப் பணி குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் செவிலியர் மேற்பார்வையாளர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், உளவியல் ஆலோசகர்,  சமூகப் பணியாளர் இருப்பார்கள். மாதம்தோறும் ஒவ்வொரு கன்சல்ட்டோரியாவின் பணிகள் குறித்தும் அடிப்படைப் பணி குழுக்கள் கூடி ஆலோசனையும் ஆய்வும் செய்யும். 

ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குப்படி, கியூபாவின் மொத்த பாலிகிளினிக்குகளின் எண்ணிக்கை 488. இவை ஒவ்வொன்றும் 20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேரின் நலத்தை கவனித்துக்கொண்டது. 

இத்துடன், புதிய மருத்துவக் கல்வி முறையில், ஆறு ஆண்டுகள் இளநிலை மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் குடும்ப மருத்துவக்கல்வி/பயிற்சியையும் கற்க வேண்டும்; இதை முடித்தபிறகே அவர்கள் முதுநிலைப் பட்டத்துக்கு விண்ணப்பிக்கவே முடியும் என மாற்றியமைக்கப்பட்டது. இதற்கான காரணம், சுவாரஸ்யமானது. 

(தொடரும்)

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்...


டிரெண்டிங் @ விகடன்