கொசுக்கடி, டாஸ்மாக், ஜி.எஸ்.டி. தாக்கம்... அப்படியே இருக்கும் ஆர்.கே.நகர்! #SpotVisit | R.K.Nagar pre by-election analysis

வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (28/10/2017)

கடைசி தொடர்பு:11:17 (30/10/2017)

கொசுக்கடி, டாஸ்மாக், ஜி.எஸ்.டி. தாக்கம்... அப்படியே இருக்கும் ஆர்.கே.நகர்! #SpotVisit

ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகரில், மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கப்போகிறது இடைத்தேர்தல் எனும் அமர்க்களம். வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இடைத் தேர்தல் வாக்குப்பதிவு, தேர்தல் ஆணையத்தால் திடீரென ரத்துசெய்யப்பட்டது.

பிரச்னைகளைத் தீர்ப்பது யார்?

முதல்வர் ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்ததால் அதிர்ஷ்டத் தொகுதியாக இருந்த ஆர்.கே.நகர் கடந்த 11 மாதங்களாக எம்.எல்.ஏ- இல்லாமல் இருக்கிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கவுன்சிலர்கள்தான் இல்லை. இங்கே கவுன்சிலர்களும் இல்லை. எம்.எல்.ஏ-வும் இல்லை.

இதனால், தங்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது யார் என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள் தொகுதிவாசிகள். இப்படியான ஒரு சமயத்தில்தான், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

காக்கை எனும் குறியீடு

தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது என்று அறிய ஆர்.கே.நகருக்கு விசிட் அடித்தோம். பாரிமுனையைத் தாண்டி தொகுதிக்குள் நுழையும் முன்பு ஒரு சிக்னலில் காத்திருந்தோம். சிக்கனில் குப்பை லாரியும், குடிதண்ணீர் லாரியும் அடுத்தடுத்து நின்றிருந்தன. காக்கை ஒன்று குப்பை லாரியில் இருந்த ஏதோவோர் உணவுப் பொருளின் மிச்சத்தை தன் அலகால் கொத்தித் தின்று விட்டு, தண்ணீர் லாரிக்கு இடம் பெயர்ந்தது. தண்ணீர் லாரியின் மூடியில் சிதறியிருந்த தண்ணீரை தன் அலகால் உறிஞ்சிக் குடித்தது. பின்னர் தன் அலகை வானத்தை நோக்கி திருப்பி தண்ணீரை உள்ளுக்குள் வாங்கியது. இது ஆர்.கே.நகரின் குறியீடு போலவே நமக்குத் தோன்றியது.

ஆம். ஆர்.கே.நகரில் குப்பைகளுக்குப் பஞ்சம் இல்லை. தண்ணீருக்கோ கடுமையான பஞ்சம். குடிநீர்க் குழாயில் சாக்கடை நீர்தான் வருகிறது. லாரிகளில்தான் மெட்ரோ வாட்டர் விநியோகம் நடைபெறுகிறது. காக்கையைப் போலவே குப்பைகளுக்கு இடையே வாழ்க்கையை நடத்தும் தொகுதி வாசிகள் ஆளுக்குக் கொஞ்சமாகக் குடங்களில் குடிநீர் எடுத்துச் செல்கிறார்கள்.

ஜி.எஸ்.டி-யின் தாக்கம்

தெருக்கள்தோறும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் செய்யும் பட்டறைகள். தூக்குவாளி, வாளி, டிபன் பாக்ஸ், தட்டுகள் என்று விதம் விதமான பாத்திரங்கள் தயாராகின்றன. ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பின்னர் தொழில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை என்கிறார்கள் பட்டறைகளின் உரிமையாளர்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கிறார்கள். இதனால், விற்பனை குறைந்திருக்கிறது என்பதால், வேலைவாய்ப்பும் குறைந்திருக்கிறது என்கிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், புத்தம் புதிய இரண்டு இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் சர்வ சாதாரணமாக வாக்காளர்களிடம் திணிக்கப்பட்டன என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

கொசுக்கள் ஓட்டுப்போடுமா?

குப்பைகள், சுகாதாரமற்ற நிலை காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. கொசுக்களுக்கு மட்டும் வாக்களிக்கும் சக்தி இருந்தால், தங்களை அபாரமாக வளரவிட்ட, ஆளும் கட்சிக்குத்தான் அவை ஓட்டுப்போடும். மாலை நேரத்தில் கொசுக்கடியால் துன்புறும் ஆர்.கே.நகர் வாசிகளின் துயரத்தைப் போக்க குறைந்தபட்சம் கொசு மருந்து அடிப்பதைக் கூட மாநகராட்சி முறையாகச் செய்யவில்லை.  

கொசு மருந்து அடிக்கச் சொல்லி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சொன்னால், “இதோ வந்துட்றோம்பா...” என்று சொல்கிறார்கள். ஆனால், சொன்ன நேரத்துக்கு வருவதில்லை என்கிறார்கள் ஆர்.கே.நகர் வாசிகள். கொசுக்கடியால் மலேரியா, டெங்குக் காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்திருக்கிறது என்கின்றனர்.   

ஆர்.கே. நகர்

பகல் போதை

தொகுதிக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளின் விளைவாகக் கூலித்தொழிலாளர்களின் உழைப்பு எல்லாம் மதுபோதையின் வழியே அரசாங்கத்துக்குப் பணமாகிறது. மாலை மூன்று மணிக்கெல்லாம் தெருக்களில் பல ஆண்களை போதையின் கிறு, கிறுப்பில் காணமுடிகிறது. இடைத்தேர்தல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று, போதையில் தள்ளாடிய சிலரிடம் கேள்வி கேட்டு சிக்கிக்கொண்டோம். அவர்களின் புலம்பல்களிலிருந்து தப்பிப்பது பெரும் பாடாக இருந்தது.  

ஆர்.கே.நகரின் தற்போதைய பிரதான கோரிக்கை, கொசுக்களைத் தோற்றுவிக்கும் குப்பைகள் அள்ளப்பட வேண்டும். கால்வாய் அடைப்புகள் சரி செய்ய வேண்டும் என்பதுதான். இதைத் தேர்தல் முடிந்த பிறகு வரப்போகும் எம்.எல்.ஏ-தான் செய்ய வேண்டும் என்பதில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா, அம்மா என்று அழைக்கும் அருமை பாசமலர்களான இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் விசுவாசிகள், அம்மா இல்லாமல் தவிக்கும் ஆர்.கே.நகர் தொகுதிவாசிகளை இப்போதேனும் கண்டுகொள்வார்களா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close