'மக்களே... இப்போதாவது கோபப்படுங்கள்!' - ட்ரிக்கர் அன்புமணி ராமதாஸ்

 

 

அன்புமணி

டெங்குக் காய்ச்சல் பாதிப்புகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசு செலவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களுக்குத் தாங்களே விழா எடுத்துக் கொண்டிருப்பது கேலிக்கூத்தானது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குறைகூறியுள்ளார். டெங்கு தவிர, நீட் தேர்வு, டாஸ்மாக் போன்ற எண்ணற்ற பிரச்னைகள் தமிழ்நாட்டில் உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அடிபணிந்து செல்வதைக் கண்டித்து, இனிமேலாவது மக்கள் அரசுக்கு எதிராக கோபப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் விழாவில் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ''இந்திய மருத்துவத் துறையில் தமிழக அரசு சாதனை படைத்துவருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் தமிழகத்தில் ஏராளமான திட்டங்களை சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. உலக நாடுகளுக்கு இணையாக நம்முடைய சுகாதாரத்துறை வளர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், சத்தமில்லாமல் தமிழக சுகாதாரத்துறை புரட்சி செய்துகொண்டிருக்கிறது" என்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் தன் பேச்சில் அள்ளிவிட்ட புள்ளிவிவரங்களை மறுத்து சென்னையில் நடந்த டெங்குக் காய்ச்சல் கண்டன கூட்டத்தில் பேசினார் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

 

விஜயபாஸ்கர்

 

''தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க உடனே நடவடிக்கை எடுங்கள் என்று ஐந்து மாதங்களுக்கு முன்பே தமிழக அரசை எச்சரித்தோம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் டெங்கு பரவி வருகிறது என்று அப்போதே சொன்னோம். அதற்கு ஒரு அமைச்சர், 'தமிழ்நாட்டில் டெங்கு இல்லை' என்றார். ஆனால், இன்னோரு  அமைச்சரோ, 'எங்க அம்மா ஆட்சியில் டெங்கு உள்ளே வராது' என்று சொன்னார். இப்படியெல்லாம் அமைச்சர்கள் பதில் சொன்னார்கள். இதுதான், தமிழ்நாட்டின் தலையெழுத்து என்ற வேதனைதான் ஏற்பட்டது. ஆனால், தற்போது டெங்கு தீவிரமாகி மரணங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. எத்தனையோ முறை சொல்லியும் போராட்டம் நடத்தியும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்கவே இல்லை. எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லிவந்தார். இன்று என்ன சொல்கிறார் என்றால், '11,000 பேருக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு; 40 பேர் சாவு' என்று அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். எங்கள் கணக்குப்படி 40,000 பேருக்குமேல் டெங்கு நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது 500 பேராவது உயிரிழந்திருக்கிறார்கள். 

கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 50 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு மாதமாக விஜயபாஸ்கர் 40 பேர்தான் இறந்துள்ளனர் என்று சொல்கிறார். மக்கள் செத்தாலும் பரவாயில்லை; அமைச்சர் பதவிதான் முக்கியம் என்று அவர் திரும்பத் திரும்ப பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். தமிழக சுகாதாரத்துறை புரட்சி செய்துகொண்டு இருப்பதாக வேறு தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். புரட்சி எதில் நடக்கிறது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இப்போது உடனடியாக டெங்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதிகாரிகள் ஆய்வுசெய்து அபராதம் போடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. டெங்குவுக்கு பொதுமக்கள்தான் காரணம் என்று அபராதம் விதிப்பது தவறு. இந்தளவு பாதிப்பு ஏற்படுவதற்கு அரசாங்கம்தான் காரணம். இன்னும் டெங்குப் பிரச்னை முடிந்துவிடவில்லை. உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. எனவே, டெங்குக் காய்ச்சல் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். டெங்கு, விவசாயிகள் பிரச்னை, நீட் பிரச்னை, கந்துவட்டி, டாஸ்மாக் பிரச்னை, ஊழல் என்று தமிழக அரசு நிர்வாகமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துக்  கிடக்கிறது. ஆனால், இந்த அரசு, மாநிலம் முழுவதும் அரசு செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழவை கொண்டாடிக்  கொண்டிருக்கிறது. ஊர், ஊராக போய் பள்ளிக் குழந்தைகளை, கல்லூரி மாணவர்களை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கூட்டம் நடத்துகிறார்கள். பத்து அடிக்கு ஒரு டிஜிட்டல் பேனர்; இந்த ஆடம்பரங்கள் இப்போது தேவையா? 

கட் அவுட்

ஒரு தலைவருக்கு நூற்றாண்டுவிழா நடத்தும்போது அந்தத் தலைவரின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா என்ற போர்வையில் முன்னிலைப்படுத்துகிறார்கள். தங்களின் கட்-அவுட்டுகளை 60 அடி உயரத்துக்கு அமைத்துக்கொண்ட பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களின் காலடியில் ஐந்து அடி உயரத்துக்கு எம்.ஜி.ஆரின் பதாகைகளை அமைத்தனர். இதைவிட யாரும் எம்.ஜி.ஆரை இழிவுபடுத்த முடியாது. நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு மானியத்தை ரத்து செய்ததால் இந்த விலை உயர்வு என்று சொல்கிறார்கள். மொத்தம் உள்ள இரண்டு கோடி ரேஷன் கார்டுகளில் 18 லட்சத்து 60 ஆயிரம் கார்டுகளைத் தவிர மற்ற அனைவரும் சர்க்கரையை கிலோ 25 ரூபாய் கொடுத்துதான் வாங்கியாக வேண்டும். மத்திய அரசு என்ன சொன்னாலும் வாயைப் பொத்திக்கொண்டு எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடுகிறார். மோடி அரசுக்கு அடிமையாக இந்த அரசு இருக்கிறது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. அதைத் தீர்க்காமல், அரசாங்க செலவில் தங்களுக்குத் தாங்களே விழா எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, இப்போதாவது அரசுக்கு எதிராக கோபப்படுங்கள் மக்களே!'' என்று பேசினார். 

மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!