கசக்கும் சர்க்கரை... ரேஷன் மானியத்துக்கு முடிவுகட்டும் திட்டமா?

காட்சி 1; இது 2016 நவம்பர் 1-ம் தேதி

முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை வகித்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அதில் மத்திய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கடைபிடிப்பது என்று முடிவு எடுக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ரேஷனில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்” என்று கூறப்பட்டது.

சர்க்கரை

இந்த ஒன்றாவது காட்சிக்கு அன்றைக்கே எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. “உணவுப் பாதுகாப்பு சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா எதிர்த்துவந்த நிலையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது இப்படி ஒரு முடிவை எடுத்தது நல்லதல்ல. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்” என்று எதிர்கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். “மத்திய அரசிடம் தமிழக அரசு மண்டியிட்டு விட்டது” என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

அவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் 5 பக்க அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று வாக்குறுதி அளித்தது.

காட்சி 2 ஜனவரி 2017 பருப்பு வகைகள் நிறுத்தம்

திடீரென ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்றவை நிறுத்தப்பட்டன. ஒரு சில கடைகளில் துவரம் பருப்பு ஒரு மாதம் மட்டும் வழங்கப்பட்டது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது மைசூர் பருப்பு போடுகிறார்கள். இதற்கும் எதிர்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால், வழக்கம் போல தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.

காட்சி 3 யாருக்கு ரேஷன் அரசாணை

யாருக்கெல்லாம் ரேஷன் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. அதில் வீடு வைத்திருப்பவர்களுக்கு, அரசு வேலையில் இருப்பவர்களுக்கு, வருமானவரி கட்டுபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை சும்மா வெளியிடப்பட்டது. இதைச் செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்தார். ஆனால், அடுத்த காட்சியில் முதல் கட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

அமுதம்

காட்சி 4 சர்க்கரை விலை உயர்வு

மூன்றாவது காட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின் தொடர்ச்சியாக வரும் 1-ம் தேதி முதல் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள சராசரியாக 17 லட்சம் குடும்பத்தினருக்கு மட்டும் சர்க்கரை, 13.50 விலையில் வழங்கப்படும். மீதி 90 சதவிகித ரேஷன் கார்டுதாரர்களுக்கு 25 ரூபாய்க்கு ரேஷன் சர்க்கரை வழங்கப்படும் என்று தமிழக அரசு சொல்லி இருக்கிறது.

2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதிக்கும் 2017-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதிக்கும் இடையே ஆளும் தமிழக அரசு நான்கு காட்சிகளை நிகழ்த்தி இருக்கிறது. இந்த நான்கு காட்சிகளுமே ரேஷன் கடைகளைப் படிப்படியாக மூடுவதற்கான முன்னோட்டம்தான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், உணவு அமைச்சர் காமராஜும் என்னதான் சொன்னாலும், உணவுபாதுகாப்பு சட்டத்தில் உள்ளதையும், அதில் தமிழக அரசு கையெழுத்து இட்டிருப்பதையும் இனி மாற்ற முடியாது.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படாது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சர்க்கரைக்கான மானியம் ரத்து என்று அறிவித்திருக்கிறார். இதுவும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் ஒரு அம்சம்தான். இப்போது சர்க்கரை கசக்க ஆரம்பித்திருக்கிறது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்தி தமிழக ரேஷன் கடைகளை மூடுவதுதான் இந்த ஆட்சியின் திட்டம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!