வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (30/10/2017)

கடைசி தொடர்பு:14:24 (30/10/2017)

“எங்க பொழப்பே போச்சு!” - பாண்டி பஜார் வணிக வளாக வியாபாரிகளின் புலம்பல் #VikatanExclusive

சென்னை பாண்டி பஜார் வணிக வளாகம்

சென்னை பாண்டி பஜாரின் பரபரப்பான கடைகளுக்கு நடுவே ஆள் அரவமற்ற கட்டடமாக எழுந்துநிற்கிறது அந்த வணிக வளாகம். பார்க்கப்போனால், அந்தப் பகுதிகளின் வயதான கட்டடங்களில் பிரதானமாக அது இருக்கவேண்டும். 1800-களில் வெள்ளையர்களால் கட்டப்பட்ட கட்டடம் அது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தி.நகர் சாலையோர வியாபாரிகளுக்காக தி.மு.க ஆட்சிக்காலத்தில் வணிக வளாகமாகப் புதுப்பிக்கப்பட்டுக் கட்டித் தரப்பட்டது. அதன்பிறகு, பலகாலம் பூட்டிய நிலையிலேயே இருந்த அந்த வணிக வளாகம், மீண்டும் நவம்பர் 2013-ல் திறக்கப்பட்டு அதில் சாலையோர வணிகர்கள் அமர்த்தப்பட்டனர். தற்போது மூன்றடுக்கு மாடியில் மொத்தம் 629 கடைகள் உள்ளன. பரபரப்பான தி.நகரில் வாங்கக் கிடைக்காத பொருள்கள்கூட இந்த வணிக வளாகத்தில் கிடைக்கின்றன. ஆனால், மக்கள் கூட்டம் குறைவுதான் என்று அங்கலாய்த்துக்கொள்கிறார்கள் அங்கிருக்கும் வணிகர்கள்.

“ரோட்டுலேயே கடை இருந்திருக்கலாம்!” 

வணிகர்கள்

சாலையோரத்தில் 35 வருடங்களாகத் துணிக்கடை வைத்து நடத்திவந்த உஸ்மான் என்பவர், பிறகு பாண்டி பஜார் வணிக வளாகத்துக்குச் சென்றார். அங்கு, நான்கு வருடங்களாகக் கடை வைத்து நடத்திவரும் அவருக்கு, அவருடைய பிள்ளைகளுக்கான படிப்பு மற்றும் திருமணச் செலவுக்கு முழுக்கமுழுக்கக் கைகொடுத்தது துணிக்கடை வியாபாரம்தான் என்கிறார் அவர். "வெளியில கடை இருந்தவரைக்கும் ரோட்டுல போற வர்றவங்க துணியைப் பார்ப்பாங்க. பேரம் பேசியாவது வியாபாரம் நடக்கும். விதவிதமா துணி இருக்கறதால வாங்குறவங்களும் எவ்வளவு பேரம் பேசியாவது வாங்கிட்டுப் போவாங்க. ஆனா, காம்ப்ளக்ஸுக்குள்ள வந்தபிறகு தினம் சம்பாதிக்கறது கைக்கும் வயித்துக்குமே சரியா இருக்கு. இங்கே, துணிக்கடையோட பூக்கடைகளும் இருக்கு. அந்தக் கடையெல்லாம் வரிசையா இல்லாம அடைச்சு அடைச்சு இருக்கறதால வாங்க வர்றவங்களும் உள்ள வர யோசிச்சுட்டு அப்படியே போயிடறாங்க. வெளியில இருந்தவரைக்கும் ஒருநாளைக்கு 7,000/- ரூபாய்க்கு எல்லாம் வித்துருக்கேன். இங்க வந்து இருநூறு ரூபாய்க்கு விக்கறதே பெரும்பாடா இருக்கு" என்று புலம்புகிறார் உஸ்மான்.

“இதைவிட்டால் வேற வியாபாரமும் தெரியாது!”

வணிகர்கள்

''எனக்கு வளாகத்தின் மேல்மாடியில் கடை இருந்ததால், அதை விட்டுவிட்டு வளாகத்தின் காம்பவுண்ட் சுவரோரம் கடைவைத்து அமர்ந்திருக்கிறேன்'' என்கிறார்  பூ, தேங்காய் விற்கும் ராசாத்தி அம்மா. 'எங்க வீட்டுக்காரு இங்க பல வருஷமா கடை வெச்சிருந்தாரு. அவர் இறந்ததுக்கப்புறம் இந்தக் கடையை நான் எடுத்து நடத்துறேன். என் பொண்ணு எனக்கு உதவியா இருந்து பாத்துக்குறா. இந்த வளாகம் கட்டின பிறகு எங்க பூ வியாபாரத்த மேல் மாடியில ஒரு கடையில வெச்சுக்கச் சொல்லி கொடுத்தாங்க. பூவை ரோட்டுல போட்டு விக்கிறப்பவே வாங்குறவங்க எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு. இதுல மேல்மாடியில கடை வெச்சா யாருங்க வாங்குவாங்க? செவ்வாய், வெள்ளிக்கிழமையில கோயிலுக்கு வாங்குறவங்க எண்ணிக்கையும் அதனால குறைஞ்சது. அதனால மேல இருந்த அந்தக் கடையை விட்டுட்டு இங்க கீழ காம்பவுண்ட் ஓரமா சின்னதா கடை போட்டு உட்கார்ந்துட்டேன். இப்பவும் வியாபாரம் பெருசா இல்லை. ஆனா, நாள் கிழமையில பூ தேங்காய் வாங்குறவங்க வியாபாரம் தடைபடுறது இல்லை. கடை அமைச்சு கொடுத்தவங்க கடமைக்குனு கொடுத்துருக்க வேண்டாம். எங்களை ரோட்டுலேர்ந்து காலி செய்ய நினைச்சாங்களே தவிர, காம்ப்ளக்ஸுக்குள்ள எந்தக் கடை எங்க இருந்தா நல்லாயிருக்கும்னு அவுங்க யோசிச்சு இடம் அமைச்சு கொடுக்கலை'' என்று கவலையோடு பேசுகிறார் ராசாத்தி அம்மா.

''கல்யாணம்... சாவுக்குதான்... வருமானம் பார்க்கலாம்!”

வணிகர்கள்

''இங்க இருக்கறவங்களிலேயே இந்த ஏரியாவுல அதிக நாள் கடை வெச்சிருக்கறது நான்தான்’' என்றபடி நாற்பது வருடங்களாக அங்கே பூக்கடைகளில் மாலைகட்டித் தருவது குறித்துப் பேசத் தொடங்குகிறார் பொன்னுசாமி. ‘'காம்ப்ளக்ஸுக்கு வெளியே கடை வெச்சிருக்கோம். ஆனா, உள்ளதான் பூக்கட்டுற வேலை எல்லாம் நடக்கும். கல்யாணம் இல்லைனா கருமாதி அப்பத்தான் எங்களுக்கு வருமானம் அதிகமா இருக்கும். அதுவும் சென்னையில கல்யாணத்தைவிடச் சாவுதான் அதிகம். ஒருநாளைக்கு அதிகபட்சமா 25 பேர் வந்து மாலை வாங்கிட்டுப் போவாங்க. சில நாள் வியாபாரமே இருக்காது. வியாபாரம் இருக்கு இல்லைங்கறது ஒருபக்கம் இருந்தாலும், இங்கே இருக்கற கடைகளுக்கு அடிப்படை வசதியே இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னாடி காம்ப்ளக்ஸுக்கான கரன்ட் பில் கட்டலைனு கரன்ட்டை கட் செய்துட்டு போயிட்டாங்க. ஆனா, காம்ப்ளக்ஸில் நாங்க எல்லோரும் வசூலித்துப் பணம் கட்டின பிறகும் இன்றுவரைக்கும் மின்சார வசதி சரிசெய்யப்படலை. அப்புறம், மக்கள் எப்படி உள்ளே வாங்க வருவாங்க? கார்ப்பரேஷனில் நாங்க இருக்கோமா செத்தோமானுகூட கண்டுக்கிறது இல்லை” என்கிறார். 

இப்படி உள்ளே இருக்கும் அத்தனை பேருக்கும் பிழைப்புச் சரிவர இல்லையே என்கிற சோகம் இருக்கிறது. இப்போது விட்டால்கூட அவர்கள் சாலையில் கடை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், வயிற்றுப் பிழைப்புக்கு அப்படிச் செய்வதைச் சட்டம் அனுமதிக்கவில்லை. இந்த அறுநூற்றுச் சொச்சம் பேரையும் அப்படியே விட்டுவிடாமல்... ஆவன செய்யுமா சென்னை கார்ப்பரேஷன்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்