கனமாகப் பொழியும் வடகிழக்குப் பருவமழை... பாதிப்பு தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!

பருவமழை

திடீரென மேகம் கூடுவதும், மழை பெய்வதும்... பின்னர் மேகம் விலகி சிறிது நேரம் கழித்து மீண்டும் மழை தொடருவதும் என வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது.

கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின் படி இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கியிருக்கிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழை, 30-ம் தேதி காலை முதல் அடைமழையாக மாறியிருக்கிறது.
சென்னை வானிலை மையத்தின் கணிப்பின்படி 30-ம் தேதி(இன்று) முதல் தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யத் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. அதன்படி சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. வரும் 5-ம் தேதி வரை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் மாவட்டத்தில் மழை பெய்யுமா என்பதை இங்கே உள்ள வரைபடத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். வரைபடத்தில் காவி நிறத்தில் உள்ள மாவட்டங்களில் மிக, மிக கனமழை பெய்யும். மஞ்சள் நிறத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறுகிறது.

மழை அளவு வரைபடம்

 

மழை அளவுகள்  

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 30-ம் தேதி(இன்று) காலை 8.30 மணி வரை தமிழகத்தில் 138.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 263.6 மி.மீ மழை பெய்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 219 மி.மீ, விழுப்புரம் மாவட்டத்தில் 210.8 மி.மீ மழையும், வேலூர் மாவட்டத்தில் 209 மி.மீ மழையும் பெய்திருக்கிறது. சென்னையில் 134.9 மி.மீ மழை பெய்திருக்கிறது.

மழை தொடரும்

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரனிடம் கேட்டோம். "இப்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள மேலடுக்குச் சுழற்சி காரணமாகத்தான் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாள்களுக்குத் தொடரும். இப்போதைக்கு வங்கக் கடலில் தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புகள் இல்லை" என்றார்.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு பரவலாக நல்ல மழையுடன் தொடங்கியிருக்கிறது. இதே நிலை டிசம்பர் 31-ம் தேதி வரை நீடித்தால், நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்ப வாய்ப்புள்ளது.

பருவமழை

காற்றழுத்தத் தாழ்வு நிலை

கேரளா, தென் தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் போது வழக்கத்தை விட அதிகமாக மழை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது. இப்போது மழை பெய்யும் சூழலை வைத்துப் பார்க்கும் போது வங்கக் கடலின் தென்பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படலாம் என்று தெரிகிறது. அப்படி உருவாகும் பட்சத்தில் அந்தக் காற்றழுத்த தாழ்வு நிலையானது நவம்பர் 3-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதிக்குள் வடக்குப் பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக கிழக்குக் கடலோரப் பகுதிகளில் ஆந்திரா முதல் ஒடிசா வரையும், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

சென்னையில் (அக்டோபர் 30 )காலை முதல் கனமழை பெய்து வருகிறது. எனவே, சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. மழை நீரை அகற்றுவதற்கும், மரங்கள் விழுந்திருந்தால் அகற்றுவதற்கும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி  1913 என்ற எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். காலையில் இருந்தே மழை பெய்த போதிலும் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை விடப்படவில்லை. மாலை ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்களை வீட்டுக்கு அனுப்பலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

கனமழை தொடரும் பட்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்து அறிவிப்பார்கள். மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வருவாய்த்துறை சார்பில் கடலோர மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!