ஒரு நாள் கனமழையில் சென்னை ஏரிகளுக்கு எவ்வளவு தண்ணீர் வந்தது..?!

மழை

மிழகத்துக்கு அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை ஒருவாரம் தாமதமாகக் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. எனினும், பருவமழையின் வீச்சும், வேகமும் கடந்த 30-ம் தேதிதான் அதிகரித்தது.

ஆறாக மாறிய சாலைகள்

இந்த ஒரு நாளில் காலையில் தொடங்கி, இரவு விடிய, விடிய பெய்த மழையில் சென்னையின் சாலைகள் தனித்தனி சிறு ஆறுகள் போல மாறி விட்டன. மழைநீர் ஓடும் சாலைகளில் எங்கு பள்ளம் இருக்கிறது. எங்கு சாக்கடை மூடிகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன என்று தெரியாததால், வாகனங்களில் சென்றவர்கள் அதி ஜாக்கிரதையுடன் வண்டிகளை ஓட்டிச் சென்றதால் 30-ம் தேதி மாலை முதல் இரவு பத்து மணி வரை சென்னையின் முக்கியச் சாலைகள் வாகன நெரிசலில் சிக்கித் தவித்தன.
மழை பெய்ததும், மழை நீரானது வடிகாலாக வடிந்து விடுவது போன்ற வடிகால் வசதிகள் சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை. 2015-ம் ஆண்டு பெரு மழைக்குப் பின்னரே இந்த வசதிகளைச் செய்யாதவர்கள். இனிமேலா செய்யப்போகிறார்கள்? என்ற கேள்விதான் நமக்கு மிஞ்சுகிறது.

நாகை மாவட்டம்தான் டாப்

சரி அதையெல்லாம் விடுங்கள். இப்படியே நிக்காம மழை பெய்யுதே. எவ்வளவு மழைதான் பெய்யப்போகுதோ என்று நாம் ஒரு நொடியாவது நினைத்திருப்போம். சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் அக்டோபர் 30-ம் தேதி காலை 8.30 மணி முதல் அக்டோபர் 31-ம் தேதி காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாகை மாவட்டத்தில் 150.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. இந்த அளவுதான் தமிழகத்திலேயே டாப். சென்னை மாவட்டத்தில் 134.9 மி. மீ மழையும்,   காஞ்சிபுரம் மாவட்டத்தில் 106.6 மி.மீ மழையும்,  திருவள்ளூர் மாவட்டத்தில் 81.5 மி.மீ மழையும் பெய்திருக்கிறது.  

 

செம்பரம்பாக்கம் ஏரி

ஏரிகளின் நீர் மட்டம்

சென்னைக்குக் குடிநீர் தரும் ஏரிகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என மூன்று மாவட்டங்களிலும் உள்ளன. ஏரிகளின் நீர்மட்ட அளவை சென்னை குடிநீர் வாரியம் தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 30-ம் தேதி நிலவரப்படி பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளிலும் 1,046 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. ஒரு நாள் பெய்த கனமழையில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கணிசமான அளவு தண்ணீர் வந்துள்ளது. சென்னைக்குக் குடிநீர் தரும் ஏரிகளில் 31-ம் தேதி நிலவரப்படி 1,371 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருக்கிறது. 30-ம் தேதி மூன்று மாவட்டங்களிலும் பெய்த கனமழையின் விளைவாக ஏரிகளுக்கு 325 மில்லியன் கன அடி தண்ணீர் கிடைத்துள்ளது.

வரும் நாள்களுக்கான மழை நிலவரம்

நவம்பர் ஐந்தாம் தேதி வரை சென்னை வானிலை மையம் கனமழைக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. 2-ம் தேதி மற்றும் 3-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கனமழை பெய்யும். 4-ம் தேதி அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியிருக்கிறது.

மழை அளவு தெரிந்துகொள்ள...

சென்னை வானிலை மையம், வானிலை குறித்த தகவல்களைக் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக வழங்குகிறது. இதற்காக அழைக்க வேண்டிய எண்; 1800 180 1717. இந்த எண்ணில் அழைத்தால் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தகவல்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியில் நிலவும் குறைந்த பட்ச, அதிகபட்ச வெப்பநிலை தகவல்கள், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவுகளையும் தெரிந்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!