Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“எண்பதாயிரம் கொடுத்துடுறேன்... என் புருஷன் உயிரைத் திரும்பக் கொடுங்க!” - கலங்கும் பெண் விவசாயி #VikatanExclusive

Chennai: 

கந்துவட்டிக்கு கடன் வாங்கிய தொகையைத் திருப்பித்தரச் சொல்லி, கடன் கொடுத்தவருடன் போலீஸ் தரப்பும் சேர்ந்து அழுத்தம் கொடுத்ததால், கடந்த வாரம் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு இசக்கிமுத்து, அவர் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் தீக்குளித்து இறந்துபோயினர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கருகிய நிலையில் தலைகீழாகக் கிடந்த இசக்கிமுத்துவின் இரண்டாவது குழந்தை அட்சய பரணிகாவின் உடலும்... நின்ற நிலையிலேயே அசைந்துகொண்டிருந்த முதல் குழந்தை மதி சரண்யாவின் கருகிய உடலுமாக வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக் காட்சிகள் அத்தனை பேரின் மனசாட்சியையும் உலுக்கியது.

திருநெல்வேலி தீக்குளிப்பு சம்பவம்

இப்படியான வட்டிமுறைக் கடன்களுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டாலும் அது செயலற்ற நிலையிலேயே இருக்கிறது. தனியாரிடம் கடன் பெறுவது ஒருவகையில் பிரச்னை என்றால், அரசு வங்கிகளில் கடன் பெறுவதும் உயிருக்கு உலை வைக்கிறது என்கிறார்கள். அண்மையில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரி புதுடெல்லியில் 100 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்திய விவசாயிகளைப் பற்றிய செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு நாளும் நூதனமுறையில் தங்களது கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தார்கள். மனித மலத்தை உண்ணும் மனவேதனை மிக்க போராட்டத்தையும்கூட நடத்தினார்கள். அவர்களின் செயலுக்கு கண்ணீரும் எதிர்ப்புகளும் ஒருசேர வந்தன. ஆனால், யாருமே செய்ய யோசிக்கும் அப்படியான செயலுக்குப் பின்னால் பகிர்ந்தாலும் வலி குறையாத வேதனை இருக்கிறது என்பது ராணியம்மாளிடம் பேசிய பிறகு தெரிந்தது. யார் இந்த ராணியம்மாள் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.  ராணியம்மாள்... போராட்டத்துக்காக டெல்லி சென்ற இருபெண்களில் ஒருவர். விவசாயி. காவிரிக் கரையோரம் இருக்கும் திருச்சியின் முசிறி அருகில் உள்ள கொளக்குடிதான் அவரது சொந்த ஊர். ராணி தன் குடும்பத்தைப் பற்றி விவரிக்கும்போது அங்கே அன்பும் பாசமும் கொட்டிக்கிடந்தது நமக்குத் தெரியவருகிறது.

விவசாயி ராணியம்மாள்

"எனக்கு மொத்தம் மூணு பிள்ளைங்க. எங்க வீட்டுக்காரருக்கு நான் அவ்வளவு இஷ்டம். அவருக்கு பிள்ளைங்கன்னா அவ்வளவு உசுரு. ஒருநாள்கூட எங்க வீட்டுல சண்டை சச்சரவு வந்தது கிடையாது. அவ்வளவு அன்பா இருப்பாரு. எங்களுக்குனு இரண்டரை ஏக்கர் நிலம் இருந்துச்சு. பயிருக்காக 2009-ல ஒரு லட்ச ரூபாய் எங்கூரு ஓவர்சீஸ் பேங்குல கடன் வாங்கினோம். ஆனா அந்த வருஷம் விளைச்சலும் இல்ல. அதுக்கப்புறம் நிலத்துல எதும் வருமானம் இல்லாததால கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டோம். பெரியபுள்ள விவசாயம் பாக்கறாரு. நடுல இருக்கறவரு ஏ.டி.எம்-ல வேலைக்குப் போறாரு. சின்னவரு கூலி வேலை செய்யறாரு. ஆனா அவங்களோட வருமானம் எல்லாம் அவங்க குடும்பத்துக்கே சரியாப் போகுது. இதுக்கு நடுவுலதான் பேங்குல வாங்கின கடன திரும்ப அடைக்கச் சொல்லி எங்களுக்கு நோட்டீஸ் வந்துச்சு. இருந்த நகையெல்லாம் அடமானம் வைச்சு அந்தக் கடனை ஓரளவு அடைச்சோம். அடைச்சதுபோக மீதம் 90,000 ரூபாய் நாங்க தர வேண்டியிருந்தது. விளைச்சலே இல்லைங்கறதால நாங்க 100 நாள் வேலை திட்டம் போய்தான் எங்க வயித்தை நிரப்பிக்கிறோம். அதுலையும் கம்ப்யூட்டர் கழிச்சுகிச்சுனு பணத்தைப் பேங்குல தரமாட்டேங்குறாங்க. இதுல அவ்வளவு ரூபாய் கடனை எப்படி அடைப்போம்?” என்று கூறி நிறுத்தியவரின் குரல் தழுதழுக்கிறது.

“இந்த நிலைமையிலதான் ஒரு நாள் பேங்குல அந்த மேனேஜரம்மா எங்க வீட்டுக்காரரைக் கூப்பிட்டு, 'கடனை அடைக்க முடியுமா?'னு கேட்டதோட மட்டுமல்லாம, தகாத வார்த்தையால் தரக்குறைவாத் திட்டிட்டாங்க. அதுல மனசு உடைஞ்சுபோனவரு பக்கத்துல இருந்த மாட்டுக்கொட்டாயில் வைச்சிருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடிச்சு உசுர விட்டுட்டாரு” என்று நிறுத்துகிறார். 

ராணியம்மாளும் அவரின் உறவினர்களும் அடுத்த நிமிடமே எங்கிருந்தோ பணம் திரட்டி எண்பதாயிரம் வரைச் சேர்த்துக்கொண்டு போய் வங்கி மேலாளரிடம் கொடுத்துள்ளார்கள். மேலாளரிடம் ராணியம்மாள் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், ''நீங்க கேட்ட பணத்தை எடுத்துக்கிட்டு வந்துட்டேன். இறந்துபோன என்னோட வீட்டுக்காரர் உயிரைத் திரும்பக் கொடுங்க...” என்றிருக்கிறார். வங்கி தேடி வந்து ராணியம்மாளும் அவரது வீட்டில் உள்ள மற்றப் பெண்களும் தன்னை மிரட்டியதாக அந்த மேலாளர் போலீஸில் புகார் கொடுத்ததையடுத்து கொளக்குடி காவல்நிலையம் அவர்களைக் கைதுசெய்து ஒரு வாரம் வரை சிறையில் வைத்திருந்து அனுப்பியுள்ளது. 

விவசாயி

“எங்க ஊர்ல தாலியறுத்தா ஒருவாரம் வெளிய விடமாட்டாங்க. ஆனா நான் போலீஸ் ஸ்டேஷன்ல கிடந்தேன். இப்போ அந்த மேலாளரை மாத்திட்டாங்க. ஆனால், என்னோட வீட்டுக்காரரு உசுரு போனது போனதுதான். அவரு உசுரு போக காரணமா இருந்த அந்த மேனேஜர் மேல எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியலை. இப்பையும் தினக்கூலிக்குதான் வேலை செய்யறேன். அந்த 90 ஆயிரத்தை திரும்பக் கட்ட முடியலை. எங்களுக்கு இருந்த அந்த இரண்டரை ஏக்கர் நிலம் தரிசாகிடக் கூடாதுனு அதுல கொஞ்சம் சோளத்தைத் தூவியிருக்கோம்” என்கிறார் ராணி. வறட்சியையும் வறுமையையும் 54 வயதான அவரின் தோல்சுருக்கங்கள் காட்டிக்கொடுக்கின்றன. 

விவசாயக் கடனின் வலிகளை... வறட்சியைக் கண்ட நிலங்கள் மட்டுமே சுமக்கவில்லை என்பதற்கு ராணி போன்றவர்களின் வலிமிக்க வாழ்க்கை சாட்சி. இத்தனை சாட்சிகளைப் பார்த்தபிறகும்கூட மத்திய அரசு, 'விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

கடன் அன்பை முறிப்பதெல்லாம் கி.மு-வுக்குப் பொருத்தமான வாசகம். தற்காலத்தில், கடன் உயிரைக் குடிக்கும்..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ