வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (03/11/2017)

கடைசி தொடர்பு:16:22 (03/11/2017)

ஸ்டேட் போர்டில் படித்த எத்தனை பேர் ஐ.ஐ.டி-யில் சேர்ந்திருக்கிறார்கள்? #IIT

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டில் ஏழு லட்சம் முதல் எட்டு லட்சம் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். இவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் கல்லூரியில் சேர்ந்தாலும், பொறியியல் படிப்புக்குப் பெயர்பெற்ற ஐ.ஐ.டி-யில் சேரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

IIT

இந்த ஆண்டு, தமிழ்நாட்டு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் 20 பேர், ஐ.ஐ.டி-யில் இடம்பிடித்திருக்கிறார்கள். அதாவது தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் தேர்ச்சிபெற்ற 8 லட்சத்து 22 ஆயிரம் பேரில் 20 மாணவர்கள் மட்டுமே ஐ.ஐ.டி-யில் சேர்ந்திருக்கிறார்கள். ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான் என மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டிலிருந்து சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. கடந்த ஆண்டு, தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் படித்த 13 பேர் சேர்ந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஏழு பேர் கூடுதலாகச் சேர்ந்திருக்கிறார்கள் என்பது மட்டுமே ஆறுதல். 

எந்தெந்த மாநிலத்திலிருந்து எவ்வளவு மாணவர்கள் ஐ.ஐ.டி-யில் சேர்ந்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை மத்திய மனிதவளத்துறை வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டிலிருந்து 253 மாணவர்கள் ஐ.ஐ.டி-யில் சேர்ந்திருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 49,695 பேர், ஐ.ஐ.டி மெயின் தேர்வை எழுதியிருக்கிறார்கள். இதில் 1,184 பேர் ஐ.ஐ.டி அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். இவர்களில் 253 பேருக்கு மட்டுமே ஐ.ஐ.டி-யில் இடம் கிடைத்திருக்கிறது. 

தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு ஐ.ஐ.டி-க்குத் தேர்வானவர்களில் 221 பேர் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். 20 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள், ஏழு பேர் ஆந்திர மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள், ஐந்து பேர் தெலங்கானா பாடத்திட்டத்தில் படித்தவர்கள், ஒரு மாணவர் தேசிய திறந்தநிலை கல்வியில் படித்தவர். 

IIT

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அதிக மாணவர்கள் ஐ.ஐ.டி-யில் சேர்ந்திருக்கிறார்கள். இங்கிருந்து 72,919 பேர் ஐ.ஐ.டி முதன்மைத் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதில் 6,229 பேர் ஐ.ஐ.டி அட்வான்ஸ்டு தேர்வை எழுதியுள்ளனர். இதிலிருந்து 1,712 பேர் ஐ.ஐ.டி-யில் நுழைந்திருக்கிறார்கள். இதைப்போலவே உத்தரப்பிரதேசத்திலிருந்து 1,450 மாணவர்களும், மகாராஷ்ட்ராவிலிருந்து 1,136 பேரும், ஆந்திராவிலிருந்து 882 பேரும், தெலங்கானாவிலிருந்து 833 பேரும், பீகாரிலிருந்து 822 பேரும் தேர்ச்சிபெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் 13-வது இடத்தில் தமிழ்நாடும், அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகாவும் (209 மாணவர்கள்), கேரளாவும் (181 மாணவர்கள்) இடம்பிடித்திருக்கின்றன. 

ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் நிறைய பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளிப் பொதுத்தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில், ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் போட்டித்தேர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு நகர்ப் பகுதியிலிருந்தும் கிராமப்பகுதியிலிருந்தும் ஐ.ஐ.டி-க்குத் தேர்வாகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நகரப் பகுதியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே நுழைவுத்தேர்வுகளில் கவனம் செலுத்துகிறார்கள். 

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்களைவிட மற்ற மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஐ.ஐ.டி தேர்வில் அதிக அளவில் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த 5,994 பேரும், தெலங்கானா மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 934 பேரும் ஐ.ஐ.டி-யில் சேர்ந்திருக்கிறார்கள். 

ஐ.ஐ.டி அட்வான்ஸ் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து முதல் மதிப்பெண் பெற்று, தற்போது சென்னை ஐ.ஐ.டி-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவர் அர்ஜுனிடம் பேசினோம்.

``பத்தாம் வகுப்புப் படிக்கும்போதே ஐ.ஐ.டி-யில் படிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துப் படிக்க ஆரம்பித்தேன். அதிக அளவில் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தேசியத் திறந்தநிலை கல்வியில் சேர்ந்து மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தேன். தினமும் பத்து மணி நேரத்துக்கும் மேலாகப் படித்தேன். ஏற்கெனவே ஐ.ஐ.டி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து, எப்படிக் கேள்விகள் கேட்பார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். இதன்மூலம் தேர்வு எளிதாக எழுத முடிந்தது. அதிக மதிப்பெண் பெற்றதால், சென்னை ஐ.ஐ.டி-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்றார். 

தமிழ்நாட்டில், தற்போது பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறை நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் தொடங்கவிருக்கிறது. நல்லது நடக்கும் என நம்புவோம்.


டிரெண்டிங் @ விகடன்