Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நல்லாயிருக்கு...!” - கனிமொழி-கருணாநிதி செல்ஃபியின் பின்னணி #VikatanExclusive

Chennai: 

தினத்தந்தி பவள விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று (7.11.2017) சென்னைக்கு வந்தார். பின்பு, தி.மு.க தலைவர் மு.கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார் மோடி. இந்த இரண்டு நிகழ்வுகளும் வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. 

தினத்தந்தி பவள விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார் மோடி. பவள விழா நிகழ்ச்சிக்கு வரவிருந்த நாளில், தி.மு.க தலைவர் மு.கருணாநிதியைச் சந்திக்கும் நிகழ்வும் அவரது பயணப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி 'தந்தி டி.வி'யில் அறிவிக்கப்பட்டது. தமிழக பி.ஜே.பி மேலிடப் பார்வையாளரான முரளிதர் ராவ் தனது ட்விட்டர் பக்கத்திலும் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். இந்தச் சந்திப்புகுறித்த செய்தி பி.ஜே.பி மற்றும் தி.மு.க தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மோடியின் வருகைக்காகக் கோபாலபுர இல்லத்தில் வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். 

தந்தி பவள விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து பகல் 12 மணியளவில் காரில் கிளம்பியவர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வந்துசேர்ந்தார். பிரதமரின் வருகையை எதிர்பார்த்து நின்றிருந்த மு.க.ஸ்டாலின், அவரை சால்வை அணிவித்து வரவேற்றார். தி.மு.க  எம்.பி கனிமொழியும் பிரதமருக்கு சால்வை கொடுத்து வரவேற்றார். தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், தமிழக பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர். வரவேற்பு முடிந்தவுடன் மோடியை கருணாநிதி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார் ஸ்டாலின். அதற்கு முன்னர், ராசாத்தி அம்மாள் மற்றும் தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்தார் மோடி. 

கருணாநிதி கனிமொழி

கருணாநிதி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்ற ஸ்டாலின், மோடி வருகைகுறித்து கருணாநிதியின் காதருகே கிசுகிசுத்தார். மோடி, கருணாநிதியின் அருகில் அமர்ந்து அவரது கையைப் பற்றிக்கொண்டு அக்கறையோடு நலம் விசாரித்தார். பின்னர், அங்கிருந்து விடைப் பெற்றார். மு.க.ஸ்டாலின் அவரை வழி அனுப்பி வைத்தார். மோடியைச் சந்திக்க வந்த பி.ஜே.பி மற்றும் தி.மு.க தொண்டர்கள் கோபாலபுர இல்லத்தின் வெளியே நின்றிருந்தனர்.

இந்த நிகழ்வுகள் ஒருபுறம் செய்திகளாகவும், மறுபுறம் சமூக வலைதளப் பதிவுகளாகவும் பரபரப்பு கிளப்பிக்கொண்டிருந்தன. இந்நிலையில், வீட்டு வாசலில் காத்து நின்றிருந்த தொண்டர்களுக்கு பதிலளிக்கும் விதமாக வாசலுக்கு வந்த கருணாநிதி உணர்ச்சிவசப்பட்டார். பின்னர் தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தார். இந்த நிகழ்வு தி.மு.க தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து, கனிமொழி தனது தந்தையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தில், அப்பாவும் மகளும் தலையோடு தலை சேர்த்து அந்தப் படத்தில் மகிழ்ச்சியோடு சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

செல்ஃபி எந்தச் சூழலில் எடுக்கப்பட்டது என்பதுகுறித்து தி.மு.க எம்.பி கனிமொழியைத் தொடர்புகொண்டு பேசினோம், "அந்தப் புகைப்படம் திட்டமிட்டு எடுத்தது இல்லை. பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்ததால், அவரை வரவேற்க கோபாலபுரம் சென்றிருந்தேன். அப்போது, முகப்பு படம் மாற்றுவதற்காக, தலைவருடன் படம் எடுக்க நினைத்தேன். அவரிடம், 'உங்களோடு போட்டோ எடுக்கலாமா?' என்று கேட்டேன். 'சரி' என்றார். பிறகு, செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார். பிறகு எடுத்த படத்தை தனக்கு காண்பிக்கச் சொல்லிப்  பார்த்து சிரித்துவிட்டு 'நன்றாக உள்ளது' என பதிலளித்தார்" என்றார் கனிமொழி. 

கடந்த 20 நாள்களாக கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்துவருகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு முரசொலி அலுவலகத்தைப் பார்வையிட வந்தார். பிறகு, தனது கொள்ளுப்பேரன் திருமண நிகழ்விலும் உற்சாகமாகக் கலந்துகொண்டார். மணமக்களும் கருணாநிதியின் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் அடைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. விரைவில் அவர் குணமடைந்து முன்பைவிட உற்சாகமாக செயல்படுவார் என நம்புவோம்.

கெட் வெல் சூன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement