37 நாள்கள், 224.1 மி.மீ... வடகிழக்குப் பருவமழை பொழிந்த நிலவரம்!

மழை

சில நிமிடங்கள் பெய்வதும், சில நிமிடங்கள் நிற்பதுமான மழைக் காலத்தின் தருணங்களை இயற்கை வாரி, வாரி வழங்கிவருகிறது. ஒரு சில மாவட்டங்களைத் தவிர பரவலாக தமிழகத்தில் பருவ மழை தீவிரமாகப் பெய்து வருகிறது.

காய்ந்த தமிழகம்

வடகிழக்குப் பருவமழையை நம்பித்தான் தமிழகத்தின் விவசாயமும், குடிநீர் தேவையும் இருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக வறட்சியின் பிடியில் தமிழகம் சிக்கியிருந்தது. வடகிழக்குப் பருவமழை காலத்தில், அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் மட்டும் தமிழகத்துக்கு 440.4 மி.மீ மழை பெய்ய வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு இதே காலகட்டத்தில்  வெறும் 168.3 மி.மீ மழைதான் பெய்தது. அதாவது வழக்கமான அளவை விட 62 சதவிகிதம் குறைவாகப் பெய்திருக்கிறது. இதனால், நீர்நிலைகளில் தண்ணீரில்லாத நிலை ஏற்பட்டது. ஆற்றுப்படுகைகளில் கூட நிலத்தடி நீர் குறைந்து போனது.

குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க தமிழகம் முழுவதும் பல்வேறு குடியிருப்புகளில் போர்வெல்களை அதிக ஆழத்தில் போட்டு மண்ணின் அடி ஆழத்தில் இருக்கும் ஈரத்தையும் உறிஞ்சி எடுத்தனர். இன்னொரு புறம் தமிழக அரசு 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரைக்கும் கூட கிராமப்புறங்களில் ஒரு குடம் குடிநீர் கிடைப்பது கூட பெரும் சிரமமாக இருந்தது. தமிழகமே குடிநீருக்காகத் தவித்ததைப் பார்த்து தென்மேற்குப் பருவமழை ஆறுதல் தரும் வகையில் பெய்தது என்று சொல்லலாம். 

சென்னை

சராசரி மழை

இந்தச் சூழலில்தான் இப்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஆறாம் தேதி காலை 8.30 மணி வரை 224.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. கடந்த 37 நாள்களில் தமிழகம் முழுவதும் சராசரியாக மழை பெய்திருக்கிறது. சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டும் சராசரி அளவுக்கும் குறைவாகப் பெய்திருக்கிறது. ஆனால், 37 நாள்கள் மட்டுமே கடந்திருக்கும் நிலையில் இன்னும் மிச்சம் இருக்கும் நாள்களில் இந்த மாவட்டங்களிலும் போதுமான மழை இருக்கலாம் என்று நம்புவோம்.

தமிழகத்திலேயே நாகப்பட்டினம் மாவட்டத்தில்தான் அதிக மழை பெய்திருக்கிறது. அங்கு மட்டும் 660.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட மிக, மிக அதிகம். சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 37 நாள்களில் 643 மி.மீ மழை பெய்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் வழக்கமான அளவைவிட அதிகமாகவே பெய்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 494.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 465.6 மி. மீ மழை பெய்திருக்கிறது.  

குடிநீர் ஏரிகள் மட்டம் உயர்வு

சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் போதுமான அளவு மழை பெய்திருப்பதை அடுத்து சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் கணிசமான அளவு நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளிலும்  நவம்பர் 7-ம் தேதி நிலவரப்படி 3,483 மில்லியன் கன அடி நீர் இருக்கிறது. இதே தேதியில் கடந்த ஆண்டு 1,246 மில்லியன் கன அடி நீர்தான் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சென்னை மக்கள் இந்த முறை கொடுத்துவைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கனமழை மிச்சமிருக்கிறது. கொடுப்பதற்கு மேகமும், கொள்வதற்கு மண்ணும் தயாராவே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!