பணமதிப்பிழப்பு... ஓராண்டில் சொன்னதைச் செய்ததா மோடி அரசு? #OneYearOfDemonetisation

 

கடந்த ஆண்டு, நவம்பர் 8.... இரவு எட்டு மணி இருக்கும்... செய்தி சேனல்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த முதல் ‘பிக் பிரேக்கிங்’ செய்தியாக இருந்திருக்கக்கூடும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைக்காட்சியில் மிகமுக்கியமான பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். ‘500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம். பணமில்லாப் பரிவர்த்தனையை இந்தியாவின் பிரதானமாக்குவோம்’  என்று விரிவுரையாற்றினார் பிரதமர். மறுநாள் காலையிலிருந்து இந்தியாவே அவசரம் அவசரமாக வங்கி வாசல்களில் நிற்கத் தொடங்கியது... பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக! இன்றுடன், ஓராண்டு ஆகிவிட்டது அந்தச் சம்பவம் ஆரம்பித்து. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னென்ன?

பணமதிப்பிழப்பு

99% சதவிகித நோட்டுகள் மாற்றப்பட்டுவிட்டன:

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளபடி 4.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், 1.48 லட்சம் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்த 1.48 லட்சம் கணக்குகள் அனைத்திலும் 80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள நோட்டுகளை இந்தக் கணக்குகளில் வரவு வைத்துள்ளனர். அதேபோல் 2 லட்சம் முதல் 80 லட்சம் வரை வரவு வைக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 1.09 கோடி.

தன்னுடைய ஆண்டறிக்கையில், 15.4 லட்சம் கோடி ரூபாய்க்கான அதிக மதிப்புள்ள நோட்டுகளில், 15.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. அதாவது, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய்களில் 99% திரும்ப வந்துவிட்டன. 

இந்தப் புள்ளிவிவரங்கள்தான் மூன்று கேள்விகளை எழுப்புகின்றன. இதனடிப்படையில் பார்த்தால், கறுப்புப்பணம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதா. என்பது முதல் கேள்வி. 

‘எங்களிடம் போதிய இயந்திரங்கள் இல்லை. இன்னமும் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கிறோம் எனத் திரும்பத் திரும்ப ரிசர்வ் வங்கி கூறிக்கொண்டிருக்கிறது. அதாவது, 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை 250 நாள்களுக்கு மேலாகியும் எண்ணி முடிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. இத்தகையச் சூழலில், 99% நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன என்ற புள்ளிவிவரத்தை எப்படிக் கூறியது ஆர்.பி.ஐ. இது இரண்டாவது கேள்வி.

மூன்றாவது கேள்வி மிகவும் முக்கியமானது. 99% சதவிகித பணம் மாற்றப்பட்டுள்ளது என்றால் அதில் எவ்வளவு கறுப்புப் பணங்கள் வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கும்? 

பணமதிப்பிழப்பு

கள்ள நோட்டுகள் நிலை என்ன?

கடந்த இரண்டு நிதியாண்டுகளைவிட, 2016-17ம் ஆண்டில்தான் கள்ளநோட்டுகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் கள்ளநோட்டுகள் 20.4% அதிகம் கண்டறியப்பட்டுள்ளன. அதிக மதிப்புள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றச் சொன்னதுதான் இதற்கு முக்கியக்காரணம் என்கிறது ஆர்.பி.ஐ. ஆனால், 2000 ரூபாய் கள்ளநோட்டும் பிடிபட்டுள்ளது. பணமதிப்பிழப்பின் தொடக்கநாள்களில், ‘புதிதாக அச்சடிக்கப்படும் 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டு அச்சடிக்க முடியாது’ என்ற செய்தி பரப்பப்பட்டதே, அதன் அர்த்தம்தான் என்ன?

demonetisation

பணமில்லா பரிவர்த்தனை அதிகரிப்பு

பணமில்லாப் பரிவர்த்தனைதான் பிரதான நோக்கமாகப் பணமதிப்பிழப்பில் முன்னிறுத்தப்பட்டது. அதனை நோக்கி மக்களை மத்திய அரசு நகர்த்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வங்கிகளில் பணப்புழக்கம் 2016-ம் ஆண்டு இறுதியில் திண்டாட்டமாக இருந்தது. அதனால் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது இயல்பாகவே அதிகரிக்கச் செய்தது. 2015-16-ல் 117.36 கோடியாக இருந்த டெபிட் கார்டு பரிவர்த்தனை, 2016-17-ல் 239.93 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் மேலான வளர்ச்சியே. வாலட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 121.57 கோடி பரிவர்த்தனை அளவுக்கு அதிகரித்துள்ளது. 

பணமதிப்பிழப்பு உயிரிழப்புகள்:

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட முதல் 10 நாள்களில் மிகப்பெரிய தொகையை மாற்ற முடியாமல் தற்கொலை செய்தும், பணத்தை மாற்ற வரிசையில் நிற்கும்போது மயங்கி விழுந்தும் இறந்தவர்களின் எண்ணிக்கை 55. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அறியப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கைதான் இது. 

கணக்குகள் ஆயிரம் கூறினாலும், இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக நடந்த முரண்கள்தான் முன்வந்து வரிசைகட்டி நிற்கின்றன. 2000 ரூபாய் நோட்டுகளைப் பெரும்பாலான மக்கள் கண்ணில் பார்க்காதநிலையில், ஒரு நாளைக்கு ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டு அல்லது இரண்டு நோட்டுதான் வங்கிகளிலிருந்து மக்களால் பெறமுடியும் என்று ரேஷன் வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த, தமிழக மற்றும் அகில இந்திய அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியிடம் மட்டும் கட்டுக்கட்டாக, பெயின்ட் மணம் மாறாத 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டனவே அது எப்படி. வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் தினம் தினம் வரிசையாகக் காத்துக் கிடந்த மக்களுக்குச் செய்யப்பட்ட நியாயம் என்ன? பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட திருமணங்கள், தடைபட்ட பயணங்கள், இழந்த உயிர்கள் என்று மக்களை வாட்டிவதைத்த பிரச்னைகளுக்குப் பரிகாரங்கள் என்ன?

modi

இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்த ரகுராம்ராஜன், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து என்னிடம் கூறியபோது நான் மறுத்தேன்’ என்கிறார். பிஜேபியின் நண்பரும், துக்ளக்கின் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தியோ, ‘இது ஆபத்து அல்ல. ஆனால், ஆறுதல்’ என்று இலைமறைகாயாகப் பேசுகிறார். முன்னாள் பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் ''பணமதிப்பிழப்பு என்னும் தவறை ஒத்துக்கொள்ள வேண்டும். இது பொருளாதாரத்தின் கறுப்பு தினம்'' என்று விமர்சித்துள்ளார். 

கஷாயத்தில் என்னதான் சர்க்கரையைக் கொட்டினாலும், கசக்கும் என்பதுதான் உண்மை. அதேபோல, வளர்ச்சிக்கான நடவடிக்கை என்று சொல்லப்பட்டாலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மக்களை வாட்டி வதைத்ததை மறுக்கவோ... மறக்கவோ முடியாது! . ஆனால், இது கஷாயமா என்பது தான் இங்கிருக்கும் பிரதான கேள்வி. 

புதிய இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா என மூன்றரை ஆண்டுகளில் பல இந்தியாக்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் நரேந்திர மோடி, மக்களின் கஷ்டங்களை நிச்சயம் உணர்ந்திருப்பார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியா,  தோல்வியா, என்ற கேள்விக்கான பதில் அவரிடமிருந்து வெளிப்படையாக வரும் என்று தோன்றவில்லை. ஆனால், மக்களிடமிருந்து கண்டிப்பாக வாக்குப்பதிவு நாளில் வந்தே தீரும். இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் செலுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால், பாதையில் இருக்கும் பாமர மக்களையும் மனதில் கொண்டே அந்த வளர்ச்சி மலர வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!