“ஓ.என்.ஜி.சி-யை வெளியேறச் சொன்னது தேசத் துரோகமா?” - கொதிக்கும் நன்னிலம் மக்கள் | Four of Nannilam people who protested against hydrocarbon has been arrested by police without reasoning

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (08/11/2017)

கடைசி தொடர்பு:15:49 (08/11/2017)

“ஓ.என்.ஜி.சி-யை வெளியேறச் சொன்னது தேசத் துரோகமா?” - கொதிக்கும் நன்னிலம் மக்கள்

த்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி தனது நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும்  திட்டத்துக்காகப் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் தஞ்சை கதிராமங்கலத்தில் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியதை அடுத்து, அங்கிருக்கும் விளைநிலங்கள் பாதிப்படையத் தொடங்கின. இதனால் அச்சமடைந்த அந்தப் பகுதி மக்கள், போராட்டத்தில் குதித்தனர். இயற்கை எரிவாயு எடுக்கும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் மக்கள் போராட்டத்தால் அங்கே தனது செயல்பாடுகளை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நிறுத்திக்கொண்டு பின்வாங்கியது.

நன்னிலம்

இந்த நிலையில், கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான தனது அடுத்தகட்ட ஆயத்தப் பணிகளுக்காக வந்தது. கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் தொடங்கியதற்கு முன்பே நன்னிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான அடிப்படை வேலைகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் செய்துமுடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த வாரம் குழாய்கள் அமைக்கும் அடுத்தகட்ட பணிகளுக்காக நன்னிலம் வந்த அந்த நிறுவனத்தினரைப் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதற்கிடையே, போலீஸார் முன்னிலையில் ஓ.என்.ஜி.சி-யைச் சேர்ந்தவர்கள் நன்னிலத்தில் உள்ள ஒரு கோயிலில் அந்தப் பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

ஹைட்ரோ கார்பன் திட்டம் அந்தப் பகுதிக்கு வருவதால் அங்கே தொழில் வளர்ச்சி ஏற்படும். மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்” என நிறுவனத் தரப்பு கூறியது. மக்கள், நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை நன்கு அறிந்திருந்ததால்... அந்தப் பேச்சுவார்த்தை, நிறுவனத்துக்குப் பயனளிக்காமல்போனது. இந்த நிலையில், நவம்பர் 8-ம் தேதியான இன்று, காலை நன்னிலம் பகுதியில் போராட்டக்களத்தில் இருந்த இளைஞர்கள் இரண்டு பேரைக் காவல் துறையினர் கைதுசெய்து குடவாசல் அருகேயுள்ள இரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்திருப்பதாகத் தெரிகிறது.

நன்னிலம் போராட்ட களம்

இதுகுறித்து அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறுகையில், “சென்ற வாரம் ஓ.என்.ஜி.சி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. அதனால், எந்தவித பதிலும் கூறாமல் திரும்பச் சென்றார்கள். இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வதாக இருந்தது. அதையொட்டி நேற்று ‘ஓ.என்.ஜி.சி வெளியேறு’ என்று வாசகம் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டினோம். அந்த வார்த்தை பெரிய தேசத் துரோகமா என்று தெரியவில்லை. இன்று காலை போராட்டக் களத்தில் முன்னிலையில் இருந்த இரண்டு இளைஞர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளார்கள். எதற்காகக்  கைது செய்யப்பட்டார்கள் என்று எவ்விதக் காரணமும் கூறாத நிலையில், காவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற மேலும் இரண்டு பேரையும் கைதுசெய்து தற்போது நான்கு பேரையும் குடவாசல் அருகே உள்ள காவல் நிலையத்தில் வைத்துள்ளார்கள். இத்தனைக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பான விழிப்புஉணர்வு ஒன்றுகூடல் மட்டுமே நடைபெற இருக்கிறது. அது, நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் கைது செய்திருக்கிறார்களோ என்று பயம்கொள்ளத் தோன்றுகிறது. இருந்தாலும், ஒன்றுகூடல் நடப்பதை எந்தச் சக்தியாலும் நிறுத்திவிட முடியாது” என்று ஆணித்தரமாகக் கூறினார்கள்.

இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த பல்வேறு இயக்கங்கள் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, நன்னிலத்தில் எந்த நேரமும் போராட்டம் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்