Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”பணமதிப்பு இழப்பால் என்ன நடந்தது?” - விவரிக்கும் நிதியியல் வல்லுநர்கள்

பணமதிப்பு இழப்பு

இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் வங்கியின் கடந்த மாதத் தகவலின்படி, பணமதிப்பிழப்புக்கு முன்னர் புழக்கத்திலிருந்த ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களில், 98.96% வங்கிகளுக்குத் திரும்பிவந்துவிட்டன. அதாவது, 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தாள்கள் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன. மீதமுள்ளவை வங்கியில் செலுத்தமுடியாதவர்களின் பணமாகவோ கறுப்புப்பணமாகவோ இருக்கலாம். 

 

ஆனால், நாட்டில் இன்னும் ஏராளமான கறுப்புப்பணம் இருக்கிறது என்கிறபடி, மத்திய ஆளும் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் தரப்பில், இன்றைய நாள் கறுப்புநாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பணமதிப்பிழப்புக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

பணமதிப்பு இழப்பு ராகுல்”பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரதமர் மோடியின் ஆட்சியில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2 சதவிகிதத்தைக் காலிசெய்துவிட்டது; நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், 15 லட்சம் மக்களுக்கு வேலை பறிபோய்விட்டது” எனப் பொருளாதாரப் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டுகிறார், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி. 

இவர்தான் இப்படிச் சொல்கிறார் என்றால், வாஜ்பாய் அரசின் நிதி ஆலோசகராகப் பணியாற்றிய மோகன் குருசாமி, ரிசர்வ் வங்கியின் விவரங்களை எடுத்துவைத்து, மோடியின் ஓராண்டுக்கு முந்தைய அறிவிப்பானது, பெரும் தோல்வி என்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலுமாகும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த ஓராண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது, மோடி அறிவித்தபடி விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதா? என்னதான் செய்தது? 

நம்மிடம், தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார், தாமஸ் பிராங்கோ (அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்): 

” பணமதிப்பிழப்பை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தபோது, கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று மட்டும் பத்தொன்பது முறை கூறினார். அதன்படி கறுப்புப்பணம் வந்திருக்கிறதா? கணக்கில் காட்டப்படாத பணத்தைக் காட்டினால், 50% வரியுடன் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் காரணமாக, 3,500 கோடி ரூபாய் கணக்குக்கு வந்திருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது புதிது அல்ல; முன்னரே பலமுறை இப்படி அறிவிப்பு செய்து, கணக்கில்வராத பணம் மீட்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இதை ஒரு கணக்காக வைத்துக்கொள்ளலாம். 

பணமதிப்பு இழப்பு

இன்னொன்றையும் மைய அரசு பெருமையாகச் சொல்கிறது. திருப்பிச்செலுத்தப்பட்ட பணத்தில் இடறுதலாக உள்ள ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று..! அவர்களின் தகவலின்படியே வருமானவரித் துறையின் நோட்டீஸுக்கு 40% பேர் பதில் அனுப்பியுள்ளனர். பொதுவாகவே நோட்டீஸ் அனுப்புவதும் பதிலுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமளிப்பதும் அதை வருமானவரித்துறை ஏற்காவிட்டால், அவர்கள் மேல்முறையீட்டுக்குச் செல்வதும் சர்வசாதாரணமாக இருக்கிறது. இதனால் எந்த அளவு கறுப்புப்பணம் வந்துவிடும் என்பதை அரசால் தெரிவிக்கமுடியவில்லை. 

மற்றது, கணக்கில் காட்டப்படாத கறுப்புப்பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தடுத்துவிட்டோம் என்கிறார்கள். திடீரென பணமதிப்பிழப்பை அறிவித்தபின்னர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற பகுதிகளில் நிறைய பேர் வங்கியில் பணம் கட்டியிருக்கிறார்கள். அங்குள்ள பழங்குடியினருக்கு வரி கிடையாது என்பதே இதற்குக் காரணம். கணக்கு வைத்திருப்பவர் உண்மையிலேயே வங்கிக்கணக்கே அதற்கு முன்னர் வைத்திருக்கும் வாய்ப்பு குறைவு. 

விவசாய வருமானத்துக்கும் வரி கிடையாது என்பதால், எல்லாப் பணக்காரர்களும் எப்படியாவது எங்காவது நிலத்தை வாங்கிப் போட்டு, அதன் மூலம் வருமானம் என்கிறார்கள். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கேற்ப கணக்குவழக்கைத் தாக்கல்செய்துவிட்டுப் போய்விடுவார்கள். 

வரிகட்டாமல் ஏமாற்றுவோரைப் பிடிப்பதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. உதாரணமாக, விலை உயர்ந்த காரை வைத்திருப்பவர்கள் யார் எனப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது. 

உண்மையில் பாதிக்கப்பட்டது, பாவப்பட்ட ஏழை மக்கள்தான். பணமதிப்பிழப்பால் எந்தப் பணக்காரரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இன்றைக்கும் சுய உதவிக்குழு பெண்கள், எங்கள் வங்கிகளில் வந்து பழைய பணத்தாள்களை மாற்றித்தர முடியுமா எனக் கேட்டபடி இருக்கிறார்கள். 

உண்மையில், கறுப்புப்பணத்தை வைத்திருப்பவர்கள் பற்றிய முழுமையான விவரம் அரசாங்கத்திடம் இல்லை. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய 2ஆயிரம் நோட்டுகளைக் கணக்குவழக்கில்லாமல் வைத்திருந்ததாக, 119 வழக்குகள் பதியப்பட்டன. தமிழகத்தில் சேகர் ரெட்டி, ராம்மோகனராவ் ஆகியோர்மீது குற்றம்சாட்டப்பட்டது நினைவில் இருக்கலாம். இந்த வழக்குகளிலெல்லாம் எங்கிருந்து, எப்படி அவர்களுக்கு இந்தப் பணம் வந்தது என்பது குறித்து இதுவரை ஒரு தகவலும் இல்லை. அதில் ஒரு வழக்கும் இன்றுவரை தீர்வாகவில்லை. 

ஒரு கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘இவ்வளவு பணம் ரிசர்வ் வங்கி மூலம் அவர்களுக்குப் போயிருக்கலாம்; இதைப் பற்றி முழு விசாரணை நடத்தவேண்டும்’ என்று கூறினார். அதற்கு இதுவரை யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. 

சேகர் ரெட்டி, ராமமோகனராவ் விவகாரத்தில், ரிசர்வ் வங்கியிடம்  விளக்கம் கேட்கப்பட்டபோது, அந்தப் பணம் எப்படி வந்தது எனத் தங்களுக்குத் தெரியாது எனச் சொல்லிவிட்டார்கள். ரிசர்வ் வங்கிக்கே தெரியவில்லை என்றால், பெரும் மோசடி நடந்திருக்க வேண்டும் என ஐயம் இருக்கிறது. 

பணமதிப்பிழப்பின் மூலம் லஞ்ச ஊழலை ஒழித்துவிடுவோம் என்று சொன்னார்கள். லஞ்சம் எங்கே ஒழிந்தது? மந்திரிகள் உட்பட லஞ்சக் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன! தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறினார்கள். ஓராண்டில் தீவிரவாதம் குறைக்கப்பட்டிருக்கிறதா? அதிகரித்துதான் இருக்கிறது. 

கள்ளநோட்டை ஒழிப்பதாகவும் முழங்கினார்கள். புதிய 2 ஆயிரம் ரூபாய்க்கே கள்ளநோட்டு வந்துவிட்டது என்பதை செய்திகளில் ஆதாரத்தோடு பார்க்கிறோமே! ஆக, பணமதிப்பிழப்பு எனும் அறிவிப்பானது ஓராண்டாகியும் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை; இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீதான தாக்குதல்தான், பிரதமர் மோடியின் அறிவிப்பு!” என்கிறார் தாமஸ் பிராங்கோ.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ