Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”வாழைமரத்துக்கு பணம்.. வங்கியே வறுமையில்!” - பணமதிப்பு நீக்கமும் திருமணத் திண்டாட்டங்களும் #1yearOfdemonetisation

Chennai: 

றுப்புப் பணம், கள்ளநோட்டை ஒழித்தல், தீவிரவாதிகளுக்கு முறைகேடாகச் செல்லும் பணப்போக்குவரத்தைத் தடுத்தல் ஆகிய இந்த மூன்றையும் ஒழிப்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் நாள் நள்ளிரவு, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என டீமானிடைசேஷன் என்கிற பெயரில் அறிவித்தார் பிரதமர் மோடி. 

"தீவிரவாதிகளுக்கான பணப்போக்குவரத்தை பாதித்ததோ இல்லையோ! எங்க திருமணம் நல்லபடியா நடக்குமா? இல்லையா? என்னும் அளவிற்கு பயத்தை ஏற்படுத்திவிட்டது" என அந்தச் சமயத்தில் தங்களை அடையாளப்படுத்த வேண்டாம் என்று கூறி, தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள் சிலர். 

மோடி அறிவித்த டீமானிடைசேஷன்

சிவகாசியைச் சேர்ந்த ஹரிஹர ராஜன் கூறுகையில், “பணமதிப்பு நீக்கம் நவம்பர் 8, 2016 நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது. எனக்கு நவம்பர் 11-ம் தேதி திருமணம். 500 மற்றும் 1,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிவித்தாலும், அதை மாற்றுவதற்கு இத்தனை நாள்தான் காலக்கெடு என்று மத்திய அரசு சொன்ன தகவல்கள் எதுவும் தெரியாது. விடிந்ததும் பார்த்தால் ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. திருமணச் செலவிற்காக நான் கையில் 50,000 ரூபாய்வரை ரொக்கமாக வைத்திருந்தேன். அதை மாற்ற வங்கிக்குப் போகலாம் என்றால், பாதி வங்கிகளில் பணம் இல்லை. ஏ.டி.எம். மையங்கள் முதல்நாள் நள்ளிரவே மக்கள் ஆக்கிரமித்ததால், முற்றிலுமாகப் பணம் தீர்ந்துபோய் காலியாகக் கிடந்தன. எப்படியோ என் நண்பர்களின் உதவியுடன் அவர்களது அக்கவுன்ட்டில் பணம் மாற்றிவிடுவதாகச் சொல்லி செல்லாக் காசுகளை மாற்றிக்கொண்டேன். என் அப்பா இறந்துவிட்டதால், அந்தக் குறை தெரியாம திருமணத்தை நடத்திவைக்க வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டார். கடன் வாங்காமல் திருமணம் நடத்தவேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம். ஆனால், இந்த டீமானிடைசேஷன் பிரச்னையால் 70% வரை கடன் வாங்கியே என்னுடைய திருமணம் நடைபெற்றது. திருமண மண்டபத்திற்கான அட்வான்ஸ் பணத்தை ஏற்கெனவே கொடுத்துவிட்டதால், அது தொடர்பாக பெரிய அளவில் சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பூ, காய்கறிகள், மண்டப வாசலில் கட்டும் வாழைமரம் போன்றவற்றை வாங்குவது மட்டும் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டியிருந்தது. அதற்கான பணத்தை திரட்டுவதில் அதிகம் கஷ்டப்பட்டோம். 

எனக்கு ஒருபக்கம் இதனால் பிரச்னை என்றால் அம்மாவிற்கு பெரிய சிக்கல். என் கல்யாணத்திற்காக வங்கியிலிருந்து அவர் தனியாகப் பணம் எடுத்து வைத்திருந்தார். அதை மாற்றுவதிலும் பெரிய சிக்கல் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் மொய்ப்பணம் வைத்தவர்கள், “தம்பி செல்லாத நோட்டுதாம்ல மொய் வெச்சிருக்கேன். எப்படியாவது அதை மாத்திக்கோ” என்று சொல்லியே மொய் வைத்துவிட்டுச் சென்றார்கள். ஆனால், பணமதிப்பு நீக்கத்திற்கு நடுவே என்னுடைய திருமணம் நடந்ததன் நினைவாக அந்தப் பணத்தையெல்லாம் மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறேன். மற்றொரு பக்கம் மோடியின் இந்த நடவடிக்கையால், நான் அடைந்த ஒரே நன்மை என் மனைவியின்  உறவினர்கள் எல்லாம் பணம் மாற்றுவதற்காக என்னிடம் உதவி கேட்கப் போய் என்னுடன் இப்போது நல்ல நட்பாகி விட்டார்கள்” என்று சிரித்துக்கொண்டே சொன்னவர், ஒருவாரம் முன்பு தங்களுக்குக் குட்டி இளவரசி பிறந்துள்ளதையும் மகிழ்வுடன் பகிர்ந்தார். 

சென்னையைச் சேர்ந்த ராதா கூறுகையில், “பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து சரியாக ஒரு மாதத்தில் என்னுடைய திருமணம் நடந்தது. வங்கிகளில் திருமணப் பத்திரிகையைக் காண்பித்தால் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று எளிமையாகத் தொலைக்காட்சியில் அறிவித்தார்கள். ஆனால், வங்கிகளிலிருந்து பணம் பெறுவது அவர்கள் சொன்னதைப்போல அவ்வளவு எளிமையாக இருக்கவில்லை. பத்திரிகையை காண்பித்ததும் ஒரு படிவம் தருவார்கள். அதை நிரப்பித்தர வேண்டும். அதில் எவ்வளவு பணம் தேவை என்பதை நாம் குறிப்பிடவேண்டும். நாம் எவ்வளவு குறிப்பிட்டாலும் வங்கியில் முதலில் பணம் இருந்தால்தானே நமக்குத் தரமுடியும். வங்கியே பணமில்லாமல் வறுமையில்தான் இருந்தது. நாங்கள் வங்கியில் 50 ஆயிரம் கேட்டோம், 20 ஆயிரம் மட்டுமே கிடைத்தது. இம்மாதிரியான சூழலில் பணம் பெறுவது மிகக் கடினமாக இருந்தது. இதுதவிர மெஹந்தி, பார்லர் போன்ற விஷயங்களுக்கும் பணமாகத்தான் கொடுக்கவேண்டியிருந்தது. பாத்திரம் வாங்குவது போன்ற பெரிய செலவுகளுக்குக்கூட அந்தக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் இல்லாத சூழ்நிலையில், பணமாகக் கொடுக்க வேண்டிய சிக்கல் ஏற்பட்டது. இந்த டீமானிடைசேஷனால் ஏற்பட்ட ஒரே நன்மை, இக்கட்டான சூழலில் திருமணத்தையே நடத்தி முடித்திருக்கிறோம். வேறு எந்தச் சூழல் வந்தாலும் சமாளித்துவிடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டதுதான்” என்கிறார். 

நாகர்கோவிலைச் சேர்ந்த கமாலுதீன் தன் பிள்ளையின் திருமணத்தை நடத்த, தான் போராடியதை விவரிக்கிறார். "டிசம்பர் 16, 2016 அன்று என் பிள்ளைக்குத் திருமணம். அதுக்காக லட்ச ரூபாய்வரை சேகரித்து கையில் பணமாக வைத்திருந்தேன். திடீரென்று பணம் செல்லாது என்றோர் அறிவிப்பு வருகிறது. பணத்தை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. உடனடியாக நான் முன்புவேலை பார்த்த பெட்ரோல் பங்க் எனக்குக் கைகொடுத்தது. அங்குசென்று என்னிடமிருந்த பணத்தை மாற்றிக்கொண்டேன். ஆனால், பணமதிப்பு நீக்க பிரச்னையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டது பெண் வீட்டில்தான். எப்படியோ சமாளித்து நல்ல முறையில் திருமணம் நடந்தது” என்றார் பெரும் ஆசுவாசத்துடன். 

டீமானிடைசேஷன் சமயத்தில் இதுபோன்ற சுவாரஸ்யமான அனுபவங்கள் உங்களுக்கும் நேர்ந்ததா? கீழே கருத்துகளில் பகிரவும்... 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement