சசிகலா, தினகரன் முகாம்களில் ரெய்டு..! பின்னணி சொல்கிறார் முன்னாள் சி.பி.ஐ. ரகோத்தமன் #ITRaid #JayaTV | IT raids in TN, former CBI officer ragothaman says reasons behind the raids!

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (09/11/2017)

கடைசி தொடர்பு:13:32 (09/11/2017)

சசிகலா, தினகரன் முகாம்களில் ரெய்டு..! பின்னணி சொல்கிறார் முன்னாள் சி.பி.ஐ. ரகோத்தமன் #ITRaid #JayaTV

ரகோத்தமன்

மிழகத்தில், வருமானவரித் துறை 'வெர்ஷன் டூ' ரெய்டு தொடங்கிவிட்டது. தமிழகத்தில் சில ஆண்டுகளாகவே வருமானவரித் துறை சோதனை நடத்துவதும், அதுகுறித்து பரபரப்புச் செய்திகள் வெளிவந்து பின்னர் அடங்கிவிடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனிடம் கேட்டோம். 

“இப்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ரெய்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நடக்கும் விளைவுகள், தாக்கங்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகத்தைக் கைப்பற்றவும், அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் நோக்கிலும் பி.ஜே.பி செயல்படுவதாகவே தெரிகிறது. அதனால்தான் வருமானவரித் துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகிய அனைத்தையும் தமிழகத்தில் ஏவி விடுகிறார்கள். இதில், மாறுபட்ட கருத்து என்பதே இல்லை." 

“ ‘எங்களுக்கும் ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை' என்று பி.ஜே.பி தலைவர்கள் கூறி வருகிறார்களே?"

"ஓர் இடத்தில் போலீஸ் ரெய்டு நடத்தினால், எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டு ரெய்டு நடத்துவார்கள். அதேபோல வழக்கின் தன்மைக்கு ஏற்ப நீதிமன்றத்திலும் முன் அனுமதி பெறுவார்கள். வருமானவரிப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் ரெய்டு இதில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இரண்டு விஷயங்களின் அடிப்படையில் வருமானவரித் துறை ரெய்டு நடத்துகிறது. ஒருவரிடம் கறுப்புப் பணம் இருப்பதுகுறித்த ரகசியத் தகவல் கிடைத்தாலோ அல்லது ஒருவர் வரி ஏய்ப்பு செய்வதாகத் தகவல் கிடைத்தாலோ அவர்களுடைய இடத்தில் வருமானவரிப் புலனாய்வுப் பிரிவு ரெய்டு நடத்தும். இந்த நாட்டில் சாதாரண குடிமகன் முதல் குடியரசுத் தலைவர் வரை எல்லோருமே சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். ஆனால், அந்தச் சட்டம், விதிமுறை ஆகியவற்றை எப்போது, எப்படி, யார் மீது அமல்படுத்துவது என்பதுதான் அரசியலுக்கு உட்பட்டது. குறிப்பாக டெல்லி அரசியல்வாதிகளுக்கு உட்பட்டது.''

Jaya TV

“அப்படியானால், தினகரன், சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் ரெய்டு நடத்துவது அர்த்தமற்றது என்கிறீர்களா?"

"அப்படிச் சொல்லவில்லை. இந்த ரெய்டு என்பது முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டதுதான். இவ்வளவு காலதாமதமாகச் செய்திருக்க வேண்டியதில்லை. முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். பி.ஜே.பி மேலிடம்  அ.தி.மு.க-வைக் கைப்பற்றப் பார்க்கிறது. சசிகலா குடும்பம் அதற்கு எதிராக இருக்கிறது. எனவே, சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-வில் இருந்து, ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி-யின் நோக்கமாக இருக்கிறது. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோலத்தான்  இந்த ரெய்டு இருக்கிறது."

"இந்த ரெய்டின் முடிவுகள் எப்படி இருக்கும்?"

"வருமானவரித் துறை புலனாய்வு ரெய்டு நடத்தி முடித்தவுடன் அவர்களால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. ரெய்டு நடத்தியதன் அடிப்படையில், வருமானவரிப் பிரிவில் இருக்கும் மதிப்பீட்டு அதிகாரிகளுக்கு ஃபைல் அனுப்புவார்கள். இந்த ஃபைல் அடிப்படையில் மதிப்பீட்டு அதிகாரிகள், வரி ஏய்ப்புச் செய்தவர்களை அல்லது கறுப்புப் பணம் பதுக்கியவர்களைக் கூப்பிட்டு விசாரணை நடத்துவார்கள். வரி ஏய்ப்புச் செய்திருந்தால் அந்தத் தொகையைக் கட்டச் சொல்வார்கள். கறுப்புப் பணத்துக்கு அபராதம் வசூலிப்பார்கள்."

டி.டி.வி. தினகரன் வீட்டில் ரெய்டு?

"இதற்கு முன்பு தமிழகத்தில் நடந்த எந்த ரெய்டின் பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே?"

"சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். அவர் வீட்டில் இருந்து புத்தம்புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.  ஆனால், நீதிமன்றத்தில், ரிசர்வ் வங்கி தாக்கல்செய்த மனுவில், சேகர் ரெட்டி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய நோட்டுகள் எப்படி வந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.  இப்படி இருக்கும்போது வழக்கின் நிலை என்ன ஆகும்? அதேபோல், டி.டி.வி.தினகரன்மீது இரட்டை இலைச் சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப் போட்டனர். ஆதாரங்கள் அடிப்படையில் ஒருவரைக் கைதுசெய்கிறார்கள். அந்த ஆதாரத்தைக் கொண்டு ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. விஜய் மல்லையா 1,000 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்று வங்கிகள் சொல்கின்றன. அவரின் சொத்துகள் இந்தியாவில்தான் இருக்கின்றன. ஆனாலும் வங்கிகளால், அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், இரண்டு லட்சம் ரூபாய் கடன் தரவில்லை என்பதற்காக விவசாயியின் டிராக்டரைப் பறிமுதல் செய்கின்றனர். சட்டம் எல்லாம் சாமான்யர்கள் மீதுதான் அமல்படுத்தப்படுகிறது."

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்