”கையை இழக்கும் நிலையில் சிறுவன்... மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் காரணமா?" | The carelessness of electricians at TNEB might result a kid to lose his hand

வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (13/11/2017)

கடைசி தொடர்பு:19:57 (13/11/2017)

”கையை இழக்கும் நிலையில் சிறுவன்... மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் காரணமா?"

 

அண்மையில் சென்னைக் கொடுங்கையூரில் வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்ற சிறுமிகள் இரண்டுபேர் மின்சாரவயர் தாக்கி உயிரிழந்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மழைநீர் தேங்கியிருந்ததால் வீட்டின் வெளியே திறந்தநிலையில் இருந்த ஜங்கஷன் பாக்ஸ் தெரியாமல் அதனைத் தொட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. அந்தச் சம்பவத்திலிருந்தே மக்கள் இன்னும் மீண்டுவராத நிலையில் சென்னை ஆலந்தூரில் நடந்த மற்றுமொரு சம்பவம் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் ஆலந்தூரைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் மின்சார விபத்தில் சிக்கியுள்ளான். பாதிப்பின் உச்சமாக அவனுடைய கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். கையும் உயிரும் ஒரே உடம்பில்தான் உள்ளது என்பதை அலட்சிய அதிகாரிகள்தான் உணரவேண்டும் என்பதே பொதுமக்களின் கொதிப்பாக இருக்கிறது. 

விநோத் - சிறுவன்

ஆலந்தூரைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சுந்தரி. இவர்களுடைய மகன் வினோத். ஏழு வயதாகும் இந்தச் சிறுவன் கடந்த 27-ம் தேதி டியூஷன் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது அந்த வழியில் கேபிள் பராமரிப்புப் பணிக்காகப் பள்ளம் தோண்டியுள்ளனர். அந்தப் பணியின்போது மின் வயர்கள் சரிவரப் பொருத்தப்படாமல் பாதி தொங்கிய  நிலையிலேயே இருந்துள்ளது. இந்த நிலையில், பள்ளம் இருப்பதை அறியாத அந்தச் சிறுவன் நிலை தடுமாறிக் கீழே விழுந்துள்ளான். அப்போது, தொங்கிய மின் வயரில் சிறுவனின் கைபட்ட நிலையில், மின்சாரம் அவனைத் தாக்கியுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனை அருகிலிருந்தவர்கள் மீட்டுத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறுவன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் போய்ப் பார்த்துள்ளனர். பின்னர், சிறுவனின் தந்தையிடம் 10 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் சரியான சிகிச்சையும் அந்த மருத்துவமனை கொடுக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில், சிறுவனின்  உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட வேறு ஒரு மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, ''மின்சாரம் தாக்கியதில் அந்தச் சிறுவனின் கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது'' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ''இதனால் அந்தச் சிறுவன் கையை இழக்க வாய்ப்பிருக்கிறது'' எனவும் அவர்கள் கூறியுள்ளனர். மனரீதியாகவும் அந்தச் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. 

மின் பெட்டிகள்  பாதிப்பு ( file photo )

பாதிப்பை  உணர்ந்த சிறுவனின் பெற்றோர் சென்ட் தாமஸ் மவுன்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரில்,  ''சரிவர  கடமையைச்  செய்யாமல்  அலட்சியமாக நடந்துகொண்ட மின் ஊழியர்களின் செயல்பாடுகள் காரணமாகத் எங்கள் மகன்  கையை இழக்கும்  நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான்'' என்று தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன்  தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்  அடிப்படையில் காவல் துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், முதலமைச்சரின் தனிப்பிரிவு,மின்சாரத் துறை,சென்னை மாநகரக் காவல் துறை உள்ளிட்ட துறைகளுக்குப்  புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பழனி பேசுகையில், ''சரிவர கடமையைச் செய்யாமல் அலட்சியப்போக்குடன் மின்வாரிய ஊழியர்கள் நடந்துகொண்ட காரணத்தால்தான் என் மகன் மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளான். அவனுடைய கையில் காயம் அதிகரித்துக்கொண்டே போவது எங்களுக்கு மிகுந்த வேதனையையும் பயத்தையும் கொடுத்துள்ளது. இதனால், கண்கள் மற்றும் மனநிலை பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

என் குழந்தையைக் குணப்படுத்த வேண்டும் என்றால், சில லட்சம் ரூபாய் செலவாகும். அன்றாடம், கூலி வேலையைச் செய்தால் மட்டுமே எங்களால் முழு வயிற்றையும் நிரப்ப முடியும். இந்த நிலையில், லட்சம் ரூபாய்க்கு நான் எங்கே போவது என்று எனக்குத் தெரியவில்லை. என்  குழந்தைக்கு ஏற்பட்ட  நிலையைப்  போன்று  மற்ற குழந்தைகளுக்கும் ஏற்படக் கூடாது. அலட்சியமாக நடந்துகொண்ட மின்வாரிய ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். 

இதுகுறித்து விவரமறிய ஆலந்தூர் மின்வாரிய ஊழியர்களைத் தொடர்புகொண்டபோது... புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண்களின் அழைப்பே செல்லவில்லை. 9445850196 என்ற கைப்பேசி எண்ணுக்கு அழைப்புச் சென்ற நிலையில், அந்த அழைப்பையும் யாரும் எடுக்கவில்லை. 

தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தூர்வாரப்படாமல் போன மழைநீர் வடிகால்வாய்கள், மேம்படுத்தாத நீர்நிலைகள் எனச் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம்மீது பொதுமக்கள் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர். ''மழைக்காலத்தைக் கருத்தில்கொண்டு திறந்த நிலையில் இருக்கும் மின்சாரப் பெட்டிகளைப் போர்க்கால அடிப்படையில் மின்சார வாரியம் சரி செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கின்றனர் அவர்கள்.

ஊழியர்களின் அலட்சியத்திற்கு இப்படித் தொடர்ந்து பிள்ளைகளே பலியாகிவரும் நிலையில், இயக்குநர் சங்கர் இயக்கிய ‘அந்நியன்’ திரைப்படத்தில் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி தனது தங்கை இறந்ததை அடுத்துதான் அம்பி ‘அந்நியனாக’ மாறி கருடபுராணத்தின்படி ’கும்பிபாகம்’, ‘மிருகினஜம்போ’ எனக் கொடுமையான தண்டனைகளை அளிக்கத் தொடங்குவார் என்பதை விளையாட்டுக்காகவேணும் அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்!. 


டிரெண்டிங் @ விகடன்