சென்னை மழையில் மூழ்கியபோது ஜெயலலிதா சொன்னதும் எடப்பாடி பழனிசாமி சொல்வதும்..!

மழை

சென்னையில் விகடன் அலுவலகத்தில் நவம்பர் 13-ம் தேதி இரவு இந்தக் கட்டுரையை நான் டைப் செய்து கொண்டிருக்கும்போது ஜன்னலுக்கு வெளியே சீராக மழை பெய்துகொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு இதே நாளில் பெய்த மழையை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. அது மறக்கூடியதும் அல்ல. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெரும் மழையை நினைவு வைத்திருக்கும் பலர் அதற்கு சில நாள்களுக்கு முன்பு நவம்பர் 13-ம் தேதி சென்னை மிதந்ததை மறந்திருக்கலாம். மறந்தவர்களுக்கான ஒரு நினைவூட்டல், மற்றபடி நினைவில் இருப்பவர்களுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் கட்டுரையாக இது இருக்கும்.

காற்றழுத்த தாழ்வு நிலை

தீபாவளிப் பண்டிகை 2015-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி கொண்டாடப்பட்டது. அந்தச் சமயத்தில் அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இதனால் அப்போது நவம்பர் 12,13 என இரண்டு தினங்கள் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாத நிலையில் மழையால் சென்னை நகரம் மிதக்க ஆரம்பித்தது. பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

மழை படங்கள்

சென்னைப் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் மிதக்க ஆரம்பித்தன. சி.டி.ஓ காலனியில் ஓர் ஆள் உயரத்துக்கு மழை தண்ணீர் சூழ்ந்திருந்தது. படகு மூலம்தான் மக்கள் மீட்கப்பட்டார்கள். 2015-ம் ஆண்டு நவம்பரில் பெய்த கனமழைகுறித்து கருத்துத் தெரிவித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, "மூன்று மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரேயடியாகப் பெய்தால் பாதிப்பு வரத்தான் செய்யும்" என்று புது விளக்கம் கொடுத்தார்.

இப்போதும்...

அப்போதைய நவம்பர் மழையைப் போலவே இப்போது, இலங்கை அருகே வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால், சென்னையில் 12-ம் தேதி இரவு கனமழை பெய்யத் தொடங்கியது. 13-ம் தேதி இரவும் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இப்போதும் சென்னை மிதக்கிறது. இப்போது மழைகுறித்து பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான்கு சென்டிமீட்டர் மழை அளவை தாங்கும் வகையில்தான், உலகின் எல்லா நகரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையும் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது" என்று பொதுப்பணித்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல் அமைச்சர் பொறியாளராக மாறி புது விளக்கம் கொடுத்திருக்கிறார். மக்களின் தவிப்புகளைப் புரிந்துகொள்ளாத இந்த விளக்கங்கள் இன்னும் தொடர்கின்றனவே என்பதுதான் நமது கேள்வி.

மழை படகுசேவை

பாலாற்றில் வெள்ளம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி முதல் 13-ம் தேதி காலை வரை 340 மி.மீ மழை பெய்தது. காஞ்சிபுரம் நகரே மழை நீரில் தத்தளித்தது. இதனால் 1992-ம் ஆண்டுக்குப் பிறகு 23 ஆண்டுகள் கழித்து 2015-ம் ஆண்டு நவம்பர் இதே நாளில் பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இப்படிக் கடந்த 2015-ம் ஆண்டு மழை நமக்குப் பல நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்காததால்தான் இப்போதும் தண்ணீரில் மிதக்கின்றோம். தண்ணீரில் மிதப்பதாலோ என்னவோ மக்களின் துயரக்கண்ணீர் இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை. தெரிந்தால் மட்டும் என்ன செய்து விடப்போகிறார்கள்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!