டாஸ்மாக் திறப்பதில் உறுதி, ஜனநாயகத்தைக் காப்பதில் அலட்சியம்... தமிழக அரசின் உண்மை முகம்! | Tamil nadu government firm on opening tasmac outlets in NH roads, unlike conduct local body elections

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (14/11/2017)

கடைசி தொடர்பு:18:34 (09/07/2018)

டாஸ்மாக் திறப்பதில் உறுதி, ஜனநாயகத்தைக் காப்பதில் அலட்சியம்... தமிழக அரசின் உண்மை முகம்!

டாஸ்மாக் திறக்க உறுதி

மிழகத்தில் மழை தொடர்பான செய்தியைத் தவிர்த்து 13-ம் தேதியன்று இரண்டு நிகழ்வுகள் கவனம் பெற்றன.

நிகழ்வு 1; தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததற்கு மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியது.

நிகழ்வு 2; தேசிய நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகள் என்று மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசு, இந்த சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறந்திருக்கிறது.

இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை. ஆனால், முதல் நிகழ்வு ஜனநாயகத்தின் அவசியத் தேவை. இரண்டாவது நிகழ்வு இந்த சமுதாயத்துக்குத் தேவை இல்லாதது. தேவையில்லாத போதைக்கு மக்களை அடிமையாக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி தமிழக அரசு வென்றிருக்கிறது தமிழக அரசு. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தத் தவறியதற்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறது.

எப்படியெல்லாம் முயற்சித்தார்கள்?

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபிறகு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த என்னென்ன செய்தார்கள் தெரியுமா? தேசிய நெடுஞ்சாலையை நோக்கி இருந்த டாஸ்மாக் கடையின் வாசல் பகுதியை அடைத்துவிட்டு, கடையின் பின்புறம் இருந்த கதவைத் திறந்து டாஸ்மாக் விற்பனையை நடத்தினர்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கடைகளை மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் திறந்தார்கள். இதற்கு எதிராகப் போராடிய மக்களை தடியடி பிரயோகம் நடத்தி கலைத்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள்  ஊரகச் சாலைகளாக மாற்றப்பட்டதை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழக அரசும் இங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகளாக மாற்ற அரசாணை வெளியிட்டது.  

மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத், பீகார் மாநிலங்களை முன்னுதாரணமாக இந்த அரசு எடுத்துக் கொள்ளவில்லை. மக்களை போதையில் ஆழ்த்துவதில் இவ்வளவு பிடிவாதம் காட்டியது தமிழக அரசு.

 

ஜனநாயகம் காக்க தேர்தல் ஆணையம் அலட்சியம்

இரண்டாவது நிகழ்வுக்கு வருவோம். உள்ளாட்சித் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடி. 2016-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால், ஒரு ஆண்டுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் சாக்குப் போக்கு சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கிறது தமிழக அரசு.

முதலில் 2016 டிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், தமிழக அரசு அசைந்து கொடுக்கவில்லை. பின்னர் இந்த ஆண்டு ஜூலைக்குள் நடத்துவதாக தேர்தல் ஆணையம் சொன்னது.  அதையும் செயலில் காட்டவில்லை. பல தவணைகள் கேட்டு, கேட்டு, இறுதியாக மன்னிப்புக் கேட்டுவிட்டது தேர்தல் ஆணையம்.

நீதிமன்றத்தில் சொன்ன காரணம், இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. அரசு முடிவு எடுத்தால்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த முடியும் என்று சொன்னார்கள். தேர்தல் நடத்தாததற்கு உள்நோக்கம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்காததன் காரணம். எடப்பாடி அணிக்கு இரட்டை இலை இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான். இந்த உள்நோக்கம் இந்த மாநிலமே அறிந்துகொண்ட ஒன்று.

மக்கள் சந்தித்த துயர்கள்

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால், சுகாதாரப்பணிகள் முடங்கியது. இதனால், டெங்குக் காய்ச்சலில் பலர் உயிரிழந்தனர். அப்படியும் கூட இந்த அரசுக்கு தேர்தல் நடத்த மனம் வரவில்லை. மழை, வெள்ளத்தால் சென்னை, நாகை மாவட்டங்கள் மிதந்தன. அப்படியும் அரசுக்கு ஈவு இரக்கம் இல்லை. தேர்தலை நடந்த எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. இப்படி மக்களைத் துயரத்தில் ஆழ்த்தி தமிழக அரசு பிடிவாதமாக தேர்தல் நடத்துவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறது. நீதிமன்றத்திலும் மன்னிப்புக் கேட்டிருக்கிறது. டாஸ்மாக் திறப்பதில் உறுதி காட்டியவர்கள், ஜனநாயகத்தை முடக்குவதற்குதான் தீவிரம் காட்டி இருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close