30 லட்சம் ரூபாய்க்கு மேலே சொத்து வாங்குவதை கண்காணிக்கிறது வருமானவரித்துறை...?

வருமானவரி

ட்டவிரோத பணம், கறுப்புப்பணம் ஆகியவற்றை ஒழித்துகட்டும் நோக்கத்துடன், பினாமி சட்டம் திருத்தப்பட்டு 2016-ம் ஆண்டு நவம்பர் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அரசியல்வாதிகளின் பினாமிகளின் இடங்களில் வருமானவரி புலனாய்வுப் பிரிவு சார்பாக ரெய்டுகள் நடத்தப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் நடந்த ரெய்டுகள்

தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் அருகில் அன்புநாதன் என்பவரின் பண்ணை வீட்டில் இருந்து ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டப்பட்டது. இவர் அப்போதைய அ.தி.மு.க ஆட்சியின் அமைச்சர் நத்தம் விஸ்வதாதனுக்கு நெருக்கமானவராக இருந்தார். அன்புநாதன் வீட்டில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நத்தம் விஸ்வநாதன் வீட்டிலும் ரெய்டு நடந்தது.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்ட சில முக்கியமான புள்ளிகளின் இடங்களில் வருவாய் புலனாய்வுப் பிரிவு சோதனை செய்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்கக் கட்டிகள், கணக்கில் வராத பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இப்போது சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத பணம், ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர்.

தமிழகத்தில் மட்டுமின்றி, கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் மாதம், அந்த மாநிலத்தின் மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 10 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

போலி கணக்குகள் முடக்கப்படும்

இந்தச் சூழலில் டெல்லியில் ஒரு விழாவில் பங்கேற்ற, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா செய்தியாளர்களிடம் பேசினார். “கணக்கில் வராத பணத்தைப் போட்டு வைப்பதற்காக போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுவது குறித்து விசாரணை செய்துவருகிறோம். அத்தகைய வங்கிக்கணக்கு வைத்துள்ள நிறுவனங்களின் இயக்குநர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். இத்தகைய வங்கிக் கணக்குகளை அண்மையில் வருவாய்த்துறை முடக்கி வைத்துள்ளது. இப்போதுவரை பினாமி சட்டத்தின் படி 621 சொத்துகளை முடக்கி வைத்துள்ளோம். பினாமி சட்டத்தின் கீழ் 1,800 கோடி ரூபாய் சொத்துகள்குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

ரூ.30 லட்சத்துக்கும் மேல்...

கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் அனைத்து வழிகளையும், படிப்படியாகக் கண்டுபிடித்து அழித்து வருகிறோம். இதன்படிதான் போலி நிறுவனங்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளும் முடக்கப்படுகின்றன. வருமானவரி தாக்கல் செய்பவர்கள் 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் பதிவு செய்திருந்தால் அதுகுறித்து விசாரணை செய்ய உள்ளோம். 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வாங்குவதற்கு கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டிருந்தால், சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், பினாமி சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பினாமி சட்டத்தின் கீழ் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதற்காக, நாடு முழுவதும் 24 புதிய பிரிவுகளைத் தொடங்கி இருக்கிறோம். இந்தப் பிரிவுகளுக்கு பல்வேறு வழிகளில் இருந்து பினாமி சொத்துகள் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து இதே வழியில், பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார் உறுதியாக. பினாமி சொத்து பரிமாற்றச் சட்டத்தின் கீழ், அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள்மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பினாமி சட்டத்தை அமல்படுத்துவதில் வருமானவரித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் எத்தனை புள்ளிகள் சிக்குவார்களோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!