வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (16/11/2017)

கடைசி தொடர்பு:18:37 (16/11/2017)

“அடுத்த மூன்று நாள்களுக்குப் பிறகு கனமழைக்கு வாய்ப்பு!” வெதர்மேன் எச்சரிக்கை

மழை

தமிழகத்தில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல் வட கிழக்குப் பருவமழை தொடங்கிப் பெய்துவருகிறது. இதில், கடந்த ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்தக் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டது. சென்னையில் பெய்த கனமழையால், புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சென்னையின் மையப் பகுதியில் வாகன ஓட்டிகள், நடைபாதைவாசிகள் எனப் பலரும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டனர். இந்த  நிலையில், கடந்த 14-ம் தேதியிலிருந்து மழை குறையத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் பேசியபோது, “வங்கக்கடலில், காற்றழுத்தப் பகுதி பாலச்சந்திரன் வானிலை ஆய்வு மைய  இயக்குநர் மண்டலமாக வலுப்பெற்றது. அந்த மண்டலம், வெகு தொலைவில் உள்ளதால், தமிழகத்துக்கு மழை குறையும். அடுத்த சில நாள்களுக்கு ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்யும். இந்த மழை, காற்றின் வேகம் காரணமாகவே பெய்ய வாய்ப்புள்ளது'' என்றவரிடம், ''அதற்கடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யுமா'' எனக் கேள்வி எழுப்பினோம். ''தற்போதைக்கு  அடுத்த இரண்டு  நாள்களுக்கு மட்டுமே மழை நிலவரம் எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

மழை நிலவரம்குறித்து வானிலை ஆர்வலரும் தமிழ்நாடு வெதர்மேனுமான பிரதீப் ஜானிடம் பேசியபோது, “காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒடிசாவை நோக்கிச் சென்றுவிட்டதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக உள் வட மாவட்டங்களில் சில இடங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கு மழை இல்லை. ஆனால், 19-ம் தேதிக்குப் பிறகு உருவாகிற காற்றழுத்தத் தாழ்வு காரணமாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பருவமழையின் காலம் தொடர்வதால், மாத இறுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, மழை சிறப்பாக உள்ளது. பருவமழை பெய்யத் தொடங்கிய 15 நாள்களுக்குள் பிரதீப் ஜான்சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவில் மழை கிடைத்துள்ளது. சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் ஏரிகளுக்கு நல்ல நிலையில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அடுத்த சில நாள்களில் மழைக்கு வாய்ப்புள்ளதால், சென்னைக்கு அருகில் உள்ள ஏரிகளில் நீரைத் தேக்கிவைப்பதற்கான கொள்ளளவும் போதுமான நிலையில் உள்ளது. குறிப்பாக 3,645 கன அடி கொள்ளளவுகொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், 1,395 கன அடி தண்ணீர் உள்ளது. இது, 38 சதவிகிதமாகும். 3,300 கன அடி தண்ணீர் கொள்ளளவைக்கொண்ட புழல் ஏரியில், 1,468 கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதன்மூலம், 44 சதவிகித நீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 3,241 கன அடி தண்ணீர் கொள்ளளவு உடைய பூண்டி ஏரியில், 945 கன அடி தண்ணீர் உள்ளது. 29 சதவிகித நீர் இந்த ஏரியில் தற்போது உள்ளது. 

1,456 கனஅடி கொண்ட வீராணம் ஏரியில், 892 கனஅடி தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீராணம் ஏரியில் 61 சதவிகித தண்ணீர்  தற்போது உள்ளது. 881 கனஅடி கொள்ளளவுகொண்ட சோழவரம்  ஏரியில்  607 கன அடி தண்ணீர் உள்ளது. இதில், 69 சதவிகித தண்ணீர் உள்ளது. அடுத்து வரும்  மழையை  எதிர்கொள்ளும் நிலையில் இந்த  ஐந்து  ஏரிகளும்  உள்ளதால் சென்னையின் இந்த ஆண்டு குடிநீர்த் தேவை பூர்த்தியாகும்” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்